பாகிஸ்தான் செல்கிறார் சீன அதிபர் ஜின் பிங்: ரூ. 3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்

xi-xin-ping-wife சீன அதிபர் ஜின்பிங் திங்கள் கிழமை இன்று பாகிஸ்தானுக்கு வருகை புரிகிறார். அவரது இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பாகிஸ்தானுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார் ஜீ ஜின் பிங். ஆனால் அப்போது பாகிஸ்தானில் சூழ்நிலை சரியில்லாததால், அவரது பயணம் அப்போது ரத்தானது. அப்போது, பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் தாஹிர் உல் காதிரி ஆகியோர் இஸ்லாமாபாத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். எனவே தனது பாகிஸ்தான் பயணத்தை அப்போது ஜீ ஜின் பிங் ரத்து செய்தார். இந்நிலையில் ஜீ ஜின் பிங், இன்று பாகிஸ்தான் வருகிறார். பாகிஸ்தானுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. மேலும், இந்த ஆண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுதான். இஸ்லாமாபாத்தில் ஜீ ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜின்பிங்குடன் அவரது மனைவி பெங் லி யுவான் மற்றும் உயர்மட்ட தூதுக்குழுவினரும் வருகின்றனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனை ஜின் பிங் சந்திக்கிறார். பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாகிஸ்தானின் முப்படை தளபதிகளையும் அவர் சந்திக்கிறார். பின்னர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்திலும் ஜீ ஜின் பிங் பேசுகிறார். பாகிஸ்தான் பயணத்தின் போது, பாகிஸ்தானின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘நிஷான் இ பாகிஸ்தான்’ என்ற விருது, ஜீ ஜின் பிங்கிற்கு வழங்கப்படுகிறது.