அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை எரித்துக் கொன்ற கணவன்: பாகிஸ்தானில் பயங்கரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தன்னுடைய அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை உயிருடன் எரித்து கௌரவக் கொலை செய்த கணவர், மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முசாஃபர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சித்திக் மனைவி ஷபானா பீவி (25). இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அண்மையில் ஷபானா பீவி தனது தங்கையைச் சந்திக்க கணவர் அனுமதி பெறாமல் வெளியே சென்றாராம். இதனால் ஆத்திரமடைந்த சித்திக், வீடு திரும்பிய ஷபானாவை அடித்து உதைத்ததுடன், தனது தந்தையின் உதவியுடன் ஷபானா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த ஷபானா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முசாஃபர்கர் போலீசார், ஷபானாவின் கணவர் சித்திக் மற்றும் அவரது தந்தையைக் கைது செய்தனர். பாகிஸ்தானில் கௌரவக் கொலை என்ற பெயரில், இதுபோன்ற சாதாரண விஷயங்களுக் கெல்லாம் 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரம் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, பாகிஸ்தானைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை ஒன்று தெரிவித்துள்ளது.