விகிதாச்சார தேர்தல் முறையில் மாற்றம்?: இலங்கை சிறுபான்மையினர் எதிர்ப்பு

இலங்கையில் நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதை இலங்கையின் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக எதிர்த்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக சந்தித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளும், ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட சிறிய கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. இலங்கையின் தற்போதைய தேர்தல் முறையை ஒப்பிடும்போது, சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு அது சாதகமானது என்றும், எனவே அதனை மாற்றக்கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாணத்தில் மக்கள் போரினால் வேறு இடங்களுக்கு மாறியிருக்கும் சூழ்நிலையில் அங்கே உறுப்பினர்களின் தொகையை உடனடியாகக் குறைக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டதாக அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனை இலங்கை இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.