பாரீஸ் நகரில் கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிவை பரப்புவதற்கும் உலகெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும் என்று யுனெஸ்கோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடுவதை பொருத்தமான ஒரு விஷயமாக யுனெஸ்கோ மாநாடு கருதியது.
விஞ்ஞான வளர்ச்சி, மீடியாக்களின் தாக்கம் என்று பல்வேறு காரணங்களால் இன்று புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மாணவர்களும், இளைஞர்களும், முதியவர்களும் கூட தங்களது பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போனுடன் செலவிடுகின்றனர். சோஷியல் மீடியாக்கள் மூலம் உலகில் நடக்கும் நிகழ்வுகள் ஓரிரு நிமிடங்களில் தங்களது விரல் நுனிகளில் கிடைத்து விடுகிறது என்பது உண்மை. எனினும், புத்தகங்களை வாசிப்பதற்கும் சோஷியல் மீடியாக்கள் மூலம் வாசிப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நூலகங்களுக்கு மாணவர்கள் செல்வது மிகவும் குறைந்து கொண்டே செல்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும் இதை ஊக்கப்படுத்த முழு அக்கறை காட்டவில்லை எனவும், பாடங்களை படிக்க மட்டுமே அதிக கவனம் செலுத்துவதும் இதற்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. படைப்பாளிகளும் தங்களது படைப்புகளை வெளியிட பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால், புத்தகங்களை வெளியிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு செல்கிறது. புத்தங்கள் என்பது பலருக்கு விடியற்காலையில் பூபாளமாகவும், இரவு நேரத்தில் தூக்க மாத்திரைகளை போலவும் மாறிவிட்டது. புத்தகங்களை வாசித்துக்கொண்டே தூங்க பழகிய நாம் இன்று தொலைக்காட்சியிலும், ஸ்மார்ட்போன்களிலும் நம்மை இழந்து தவித்து வருகின்றோம்.