சினிமா ஆசை காட்டி சென்னை சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய சினிமா பிரமுகர் கைது

molestationசென்னை: சென்னையில் 14 வயது சிறுமியை சினிமா ஆசைகாட்டி பலாத்காரம் செய்து, பின்னர் பாலியல் தொழிலில் தள்ளியதாக சினிமா பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்தச் சிறுமியை ரூ.1½ லட்சத்திற்கு விலை பேசி விற்றதாக, அவரது தாயாரும் கைது செய்யப்பட்டார். சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில், குழந்தைகள் நல கமிட்டி சார்பில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரண் சின்கா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உடன் பிறந்த தங்கையும் தம்பியும் உள்ளனர். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டாராம். சினிமா உதவி இயக்குனர் ஒருவருடன் அவரது தாயார் சேர்ந்து வாழ்ந்துள்ளார். 9-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அவரை சினிமாவில் நடிக்க வைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்ற பெண் தரகர் உதவியுடன், சென்னை போரூரைச் சேர்ந்த செந்தமிழ்அரசு (37) என்பவரைப் பார்த்தனர். செந்தமிழ்அரசு தான் 2 படங்கள் இயக்கி வெளியிட்டிருப்பதாகவும், தனது புதிய படத்தில் சிறுமியை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பதாகவும்கூறினார். இதற்காக ரூ.1½ லட்சம் தருவதாக சிறுமியின் தாயாரிடம் கூறியதாகத் தெரிகிறது. கடந்த 1 ஆண்டாக சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பல முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி உள்ளனர். இந்நிலையில், செந்தமிழ்அரசைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி மேற்கொண்டனர். மாறு வேடத்தில் சென்று, தரகர் ராஜேஸ்வரி உதவியுடன், செந்தமிழ்அரசை சந்தித்தனர். சிறுமியிடம் உல்லாசமாக இருக்க, அவர் ரூ.1½ லட்சம் பணம் கேட்டுள்ளார். இதை அடுத்து, போலீசார், செந்தமிழ்அரசைக் கைது செய்தனர். மேலும், தரகர் ராஜேஸ்வரியும், சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைதான செந்தமிழ்அரசு கும்பகோணத்தைச் சேர்ந்தவர்; சென்னை போரூரில் வசித்து வந்தார். அவர் இயக்கிய படங்கள் குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இவர் பிரபலம் ஆனவர் இல்லை என்றும், இவர் படம் எதையும் இயக்காமல் தவறான தகவல்களைக் கூறியிருக்கலாம் என்றும் தெரிகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.