- Ads -
Home சினிமா கிசுகிசு ரஜினி – இரஞ்சித் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!: கவிஞர் உமாதேவி

ரஜினி – இரஞ்சித் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!: கவிஞர் உமாதேவி

மாயநதி இன்று மார்பில் வழியுதே”, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், உமாதேவி. மாயநதி பாடலை மட்டுமல்ல, கபாலியின் இன்னொரு ஹிட்டான வீரத் துரந்தராபாடலை எழுதியவரும் இவரே.

மெட்ராஸ் – நான் நீ நாம், மாயா – நானே வருவேன், இனிமே இப்படித்தான் – அழகா ஆணழகா, கபாலி – மாயநதி, வீரதுரந்தரா தொடர்ந்து உங்கள் பாடல்களின் ஹிட் ரகசியம் என்ன?

ஒரு பாடலை எழுதுவதற்கு முன் அந்தப்பாடலுக்கான  முன் பின் காட்சிகளின் கதாபாத்திர உணர்ச்சி நிலைகளை தெரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முழுக்கதையையும் கேட்கிறேன். இயக்குநர்கள் அந்த பாடலுக்கான சூழலை சொன்னதும்… என்னை பாடலுக்குள் பாடலின் கதாபாத்திரத்திற்குள் கொண்டு செல்கிறேன். அதன்பின் பாடல் எழுதுவது நிகழ்கிறது. மற்றபடி ரகசியம் என்று எதுவும் இல்லை.

நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால், “தாபப்பூ”, “தாபதநிலை” “வீரதுரந்தரா” என்று வித்தியாசமான வார்த்தைகள் உங்கள் பாடலுக்குள் வருகிறதா?

தமிழ் இலக்கியம் என்பது மிக பரந்து விரிந்த சமுத்திரம். கரையில் நின்று நீராடவும் முடியும். ஆழ்கடலுக்குள் சென்று முத்துக்குளிக்கவும் முடியும். கண்டிப்பாக, தமிழ் இலக்கியம் என் பாடல்களை வித்தியாசப்படுத்துவதில் பங்குகொள்கிறது. இன்னும் இன்னும் புதிய புதிய சொற்கள், சொல்லாடல்கள், உவமைகளை தொடர்ந்து என் பாடல்களில் எழுத ப்ரியப்படுகிறேன்.

பாடலாசிரியர் என்பதைத்தாண்டியும் இயங்குகிறீர்கள்…

ஆம். சென்னை புதுக்கல்லூரியில்,  “முஸ்லீம்கள் குறித்து டாக்டர். அம்பேத்கர்  – ஒரு ஆய்வுஎன்ற ஆய்வேட்டை சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு சமர்ப்பித்து, எம்.பில். (M.Phil) பட்டமும் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் பௌத்த சமய காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி குறித்து, “பண்டைய இலக்கியங்களில் அறநெறிகள்: குண்டலகேசி.என ஆய்வு செய்து (Ph.D) முனைவர் பட்டமும் பெற்றாயிற்று. இப்போது உதவிப்பேராசியராக பணியாற்றி வருகிறேன்.  “திசைகளைப் பருகியவள்”, “தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது” என்று இரண்டு கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன.

கபாலி” படத்தில் பாடல்கள் எழுதிய அனுபவம்?

மெட்ராஸ் படம் மாதிரியே, கபாலி படத்துக்கும் இரஞ்சித் சார், என்னை அழைத்து ஒரு பாடல் இருக்கு,எழுதுங்கன்னு சொன்னார். முதல் பாடலாக மாயநதிபாடல் எழுதினேன். அந்த பாடலுக்கான சூழல் எனக்கு ரொம்பவே பிடிச்சியிருந்தது. காதல் என்றாலே அதை இளமையோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கிறது,நம்மோட பொதுப்புத்தி. பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்குமுதுமைக்காதலை மிக அழகாக சொல்கிற படைப்பு. அந்த மாதிரி, நீண்ட பிரிவுக்குப்பின் சந்திக்கும் இளமை தாண்டிய கணவன், மனைவியின் காதல் மனநிலை என்ற கதைச்சூழல் என்றதும், எனக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் நாராயணன் சர் மெட்டும் அந்த உணர்வுக்கு மிக சரியாக இருந்தது. அது ஸ்வேதா மோகன், அனந்து, பிரதீப் பாடிக்கேட்டப்போ ரொம்ப நிறைவா இருந்தது. இப்போ, உலகம் முழுவதும் அந்தப்பாட்டு போய் சேர்ந்திருக்கு. இன்னைக்கும் கூட மாயநதி பாட்டு கேட்டு, பாடல் வரிகளை யார் யாரோ எங்கெங்க இருந்தோ தொடர்ந்து பாராட்டிக்கிட்டே இருக்காங்க. பெருமிதமா இருக்கு.

கபாலி ஹீரோ ரஜினி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுசந்தீச்சீங்களா?
பாடல்களை கேட்டு என்ன சொன்னாங்க?

ரெண்டு பேரையும் நான் இன்று வரைக்கும் தனியா சந்திக்கவில்லை. தாணு சாரை, கபாலி இசை வெளியீட்டு விழாவில் தான் முதல் முறையா சந்தித்தேன். ஒருதடவை கூட நான் தாணு சார் அலுவலகத்துக்கு போனதில்லை. பாட்டு எழுதியதற்கான என் சம்பளத்தைக்கூட மேனேஜர், ராகேஷ் ராகவன்சார் மூலமாக என் அக்கவுண்ட் நம்பர் வாங்கி அக்கவுண்ட்ல தான் போட்டு விட்டாங்க. பாடல் வரிகள் கேட்டுட்டு இரஞ்சித் சார் கிட்ட பேசி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சௌந்தர்யா மேடம் வீரதுரந்தரா பாட்டு,ரொம்ப சூப்பரா இருக்கு., ஆல்பத்துல என்னோட பேவரைட்னு  வாட்ஸ்அப் பண்ணிணதை இரஞ்சித் சார் Forwardபண்ணாங்க. நன்றி சௌந்தர்யா மேடம், தாணு சார், ரஜினி சார்.

நீங்கள் ஒரு தலித்என்பதால் தான் இரஞ்சித் படங்களில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கிறதா?

ரொம்ப முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வி கேட்டதுக்கு நன்றி. 1980ல் பாரதிராஜா சார் இயக்கிய நிழல்கள் படத்துல வைரமுத்து சார் பாட்டு எழுதினப்போ, யாருமே அவர் கிட்ட இந்த மாதிரி ஒரு கேள்வியைக் கேட்கவில்லை. ஆனா, முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சி இரஞ்சித் படத்துல உமாதேவி பாட்டு எழுதுறப்போ இந்தக்கேள்வி வருதுன்னா நம்மோட மனநிலையும் இந்த நாட்டு நிலைமையும் இன்னும் மாறாம இருக்குன்னு தான் அர்த்தம். வைரமுத்து சார், இயக்குநரோட சாதிக்காரர், என்பதைத்தாண்டி அவர்கிட்ட இருந்த திறமைதான் அந்த வாய்ப்பின் காரணம். அவர் இன்னைக்கும் ஜாம்பவனா இருக்கிறதுக்கு காரணம். இரஞ்சித் சார் எனக்கு பாட்டு எழுத வாய்ப்பு தந்ததுக்குக் காரணம் எனது ” திசைகளைப் பருகியவள் ” கவிதை தொகுப்பு தான். என் படைப்புதான் என்னை அவரிடம் கொண்டுபோய் சேர்த்து எனக்கு திரையடையாளத்தை உருவாக்கியது. ஒரே ஒரு இரஞ்சித்தும் ஒரே ஒரு உமாதேவியும் இருந்தால் இப்படித்தான் கேட்கத்தோணும். இந்த நிலைமை மாறணும்னா நிறைய இரஞ்சித்களும் நிறைய உமாதேவிகளும் வரணும்.

நா.முத்துக்குமார் மரணம் பற்றி?

தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாக வாழ்ந்த, அற்புதமான கலைஞன், கவிஞர், நா.முத்துக்குமார் சார். தானே தன் படைப்பை காட்டி தம்பட்டமடித்து மிரட்டாதவர்.  பட்டங்களை வலிந்து சுமக்காத விடுதலைப்பறவை. முத்துக்குமார் சார் தொட்ட அந்த உயரத்தை இனி  எந்தப் பாடலாசிரியராவது தொடமுடியும் என்று தோன்றவில்லை. தமிழ் இருக்கும் வரை இந்தத் தமிழ் மகனின் புகழ் இருக்கும்.

மீண்டும் ரஜினி, இரஞ்சித் இணைவது பற்றி…

சமகால சினிமாவிற்கும் வாழ்க்கைக்கும் வாழ்வியலுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. இரஞ்சித் சார் படங்களில் எப்போதுமே அது இருக்கும். கபாலி திரைப்படம், உலகளாவிய வெளியீடு தாண்டி, பெரிய அளவில் விவாதங்களை எழுப்பியது நம் அனைவருக்குமே தெரியும். விவாதத்தை உருவாக்குவதுதான் ஆரோக்கியமான படைப்பு. அப்படிப்பட்ட படைப்பைக்கொடுத்த  ரஜினி சார் – இரஞ்சித் சார் கூட்டணி மீண்டும் இணைவது மகிழ்ச்சி.

இப்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் படங்கள்?

மெட்ராஸ் படத்திற்கு பின், இனிமே இப்படித்தான், மாயா, ஆத்யன் படங்களில் பாடல்கள் எழுதினேன். இப்போது கபாலிக்கு பின், ரங்கூன், துக்ளக், தப்பு தண்டா, கட்டப்பாவ காணோம், நாகேஷ் திரையரங்கம்,அடங்காதே, மாயவன்உள்பட பல படங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தமிழ் திரைப்பட பெண் பாடலாசிரியர்களில் தாமரைக்கு பின், மிகப்பெரிய வரலாற்றை உமாதேவி உருவாக்குவார் என்பதற்கு அவரது பாடல்களும், பாடல்களின் வரிகளுமே சாட்சி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version