- Ads -
Home சினிமா சினி நியூஸ் ஜிஎஸ்டி., குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி கள்ளக் கணக்குதான்: மிரட்டும் கமல் ஹாசன்

ஜிஎஸ்டி., குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி கள்ளக் கணக்குதான்: மிரட்டும் கமல் ஹாசன்

kamalhasan

சென்னை:
ஜிஎஸ்டி., வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி முறையான கணக்கு சமர்ப்பிக்க வழி இல்லாத நிலை உருவாகும் (கள்ளக் கணக்குதான்) என்று நடிகர் கமல் ஹாசன் மிரட்டியுள்ளார்.

28 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை 12 முதல் 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது…

ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக இந்திய சினிமாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்திருப்பது சரியதல்ல. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்தியப் படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்திப் படங்களுக்கும், தமிழ்ப் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு பிராந்திய மொழியின் வீச்சு மற்றும் பலம் என்பது அதன் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. ஆனால், உலகளாவிய ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்களுக்கும் இந்திய அளவில் ரசிக்கப்படும் இந்திப் படங்களுக்கும் ஒரே அளவில் வரி என்பது சரியல்ல. பிராந்திய மொழி பேசும் மக்கள் உலகில் வேறு எந்த பகுதியில் வசித்தாலும், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவானதுதான். அவர்களால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான விலை அதிகரிப்பை சமாளிக்க இயலாது. ஆனால் உலக அளவில் விருதுகளைப் பெற்று பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள்தான். இவ்வாறான சிரமங்களை சிறிய படங்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுடன் உரையாடல் நடைபெற்று வருகிறது. யாரால் எது சாத்தியம் என்பதை அரசு தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். சினிமாவை தனியாகப் பிரித்து பார்க்க வேண்டாம். இந்த வரி அதிகரிப்பால் முறையான கணக்கை சமர்ப்பிக்கவும் வழியில்லாத நிலை உருவாகும்.

சினிமாவை சூதாட்டமாகக் கருத வேண்டாம். கலையாகப் பார்க்க வேண்டும். என் மழலை மொழி மாறியதே இந்த சினிமாவில்தான். இதுதான் என் வாழ்க்கை. நாம் தொழில் செய்ய வேண்டும். சினிமா துறை மீதான இந்த ஜிஎஸ்டி வரியை குறைக்கா விட்டால் சினிமாவை விட்டு நானும் வெளியேற வேண்டியதுதான். ஆகவே, அரசு இதை புரிந்துகொண்டு எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று மறுபரிசீலனை செய்ய வேண்டும்… என்று பேசினார்.

ஜிஎஸ்டி வரி அதிகரிப்பால் முறையான கணக்கை சமர்ப்பிக்க வழியில்லாத நிலை உருவாகும் என்று அவர் பேசியதும், நான் சினிமாவை விட்டே விலகுவேன் என்று கூறியதும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version