- Ads -
Home சினிமா சினி நியூஸ் நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: பொன்வண்ணன் பேட்டி

நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: பொன்வண்ணன் பேட்டி

நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாதாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். பொன்வண்ணன் அளித்த பேட்டி:

நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 9௦ நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை நினைவுகூர்ந்து பார்த்தால் இந்த 9௦ நாட்களும் நாங்கள் சரியான அளவில் நிறைய வேலைகள் பார்த்துள்ளோம் என்றே சொல்லலாம். பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து அலுவலகம் சார்ந்த நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை முதலில் சீர்செய்துள்ளோம்.

சென்னையில் திரைப்படங்களையே நம்பி வாழ்கின்ற துணை நடிகர்கள் வேலை செய்ததற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அது பல நிறுவனங்களிலும், ஏ.ஆர்.ஓ எனப்படும் நியமன பொறுப்பாளர்களிடமும் நிலுவையில் இருந்தது. இதையெல்லாம் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம், அந்த உறுப்பினருக்கான பணங்களை வாங்கி கொடுத்துள்ளோம். பிறகு ஏ.ஆர்.ஓ என்பவர்களுக்கான பொறுப்பு என்ன அவர்கள் திரைத்துறையில் எப்படி அணுகி படங்களை பெற வேண்டும், அதே போல அவர்கள் திரைத்துறையில் பணியாற்றும் போது அவர்கள் உறுப்பினர்களை எப்படி வழிநடத்த வேண்டும், எப்படி வேலை வாய்ப்பு வாங்கி தரவேண்டும், அவர்களுக்கான ஊதியத்தை எப்படி பெற்று தரவேண்டும் இப்படி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி அந்த ஒழுங்குமுறைக்குள் வருகிறவர்களை பொறுப்பில் அமர்த்தியுள்ளோம். இது ஒருவிதமான செயல்பாடு.

நாங்கள் பொறுப்புக்கு வந்து இதுவரை மூன்று செயற்குழு நடத்தியுள்ளோம், ஒன்று மாதாந்திர செயற்குழு, மற்றொன்று சிறப்பு செயற்குழு. மூன்று செயற்குழுவிலும் அனைத்தும் முறைப்படி விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள உறுப்பினர்கள் 2,5௦௦ -பேருக்கு தீபாவளி பரிசு பொருட்களை நாங்கள் அனுப்பிவைத்தோம். அந்த மிகப்பெரிய வேலையை நமது, செயற்குழு உறுப்பினர்களும், நடிகர்களும் வெளிமாவட்டங்களுக்கு சென்று உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து பரிசு பொருட்களை வழங்கிவந்தனர்.

தீபாவளி முடிந்த ஒருவார இடைவேளையில் மழையினுடைய வெளிப்பாடு தீவிரம் அடைந்து கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டது. நாங்கள் நடிகர் சங்கத்தின் சார்பாகவும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் சார்பாகவும் அங்குள்ள ஒரு கிராமத்துக்கு அனுப்பிவைத்தோம். அம்மழையின் தொடர்ச்சியாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்து சென்னை பாதிக்கப்பட்டது, கடலூர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சங்கம், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து தொடர்ந்து 15 நாள் நிவாரண பணியில் நடிகர் சங்கம் ஈடுபட்டது.

அது முடிவடைந்தவுடன் தற்போது நிர்வாகத்தினுடைய தேவைகள் என்ன என ஆராய்ந்து இடைவேளை ஏதும் இல்லாமல் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய குருதட்சணை திட்டம் எனப்படும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம். குருதட்சனை திட்டம் என்றால் ஒரு செயலை செய்வதற்கு நாம் கற்றுக்கொள்ளும் குருவுக்கு தட்சணை வைத்து நாம் அவருக்கு செலுத்தும் முதல் மரியாதைக்கு பெயர் தான் குருதட்சணை.

குருதட்சனை திட்டத்தால் பயன் அடைபவர்கள் இரண்டு வகைப்படுவர். அதில் ஒரு வகை வசதிபடைத்தவர்கள் நடிகர் சங்கத்துக்கு குருதட்சணையாக செய்வது, மற்றொன்று வசதி இல்லாதவர்களுக்கு குருதட்சணையாக நடிகர் சங்கம் செய்வது என்று இருவகைப்படுகிறது. இப்படி இரண்டு விதமான தன்மையில் இந்த குருதட்சனை திட்டம் உள்ளது.

எந்த திட்டம் தொடங்கினாலும் அதில் முதலில் நமக்கு தேவை ஒழுங்குபடுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களை பற்றிய விவரம் முதலியவை ஆகும். ஏனென்றால் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரிந்தால் தான் நம்மால் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிகிறது. நாங்கள் பொறுப்பில் இருக்கும் இந்த மூன்று வருட காலத்தில் இந்த நடிகர் சங்கத்துக்கு எவ்வளவு செய்துவிட முடியுமோ அவ்வளவையும் செய்துவிட வேண்டும் என்று முடிவுசெய்துள்ளோம், எங்களுடைய கனவும் அதுதான். அதற்க்கான முயற்ச்சியையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

எங்களுடைய உறுப்பினர்கள் யார் ?? அவர்களுக்கு என்ன தேவை, அவர்கள் வீட்டில் யாருக்கும் கல்வி தேவையா ?? அல்லது வயதானவர்களுக்கு மருத்துவம் தேவையா ?? மருத்துவம் தேவை என்றால் என்னவிதமான மருத்துவம் தேவை ?? எத்தனை பேருக்கு தேவை ?? முதியோருக்கு ஓய்வூதியும் வழங்கவுள்ளோம், அது எத்தனை பேருக்கு தேவை என்ற விவரங்கள் எங்களிடம் இருந்தால் தான் நாங்கள் சிறப்பாக பணியாற்ற முடியும்.

இனி நாங்கள் நடிகர் சங்கம் மூலமாக எதை செய்வதாக இருந்தாலும் எங்களுக்கு தேவை உறுப்பினர்களின் கணக்கெடுப்பு, அது தான் குருதட்சணை திட்டம். சென்னையில் மட்டும் 15௦௦ உறுப்பினர்கள் உள்ளனர், அதே போல் வெளியூரில் 1௦௦௦ உறுப்பினர்கள் உள்ளனர் இதுபோக வாழ்நாள் உறுப்பினர்கள் என்ற பிரிவில் நாடக நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் 5௦௦ பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இப்படி எல்லாம் சேர்த்து 275௦ பேர் உள்ளனர்.

இந்த உறுப்பினர் கணக்கெடுப்பை சென்னையில் இருந்து ஆரம்பிக்க முடிவெடுத்தோம். முதலாவதாக சென்னையில் 7 நாளாக இந்த கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தோம். ஒரு நாளைக்கு 25௦ என்று பிரித்து, ஒவ்வொரு பகுதியாக சென்று கணக்கெடுப்பை நடத்த முடிவுசெய்தோம். பகுதி வாரியாக 25௦ பேரை பிரித்து அவர்களுக்கு எந்த தேதியில் எங்கே வரவேண்டும் என்ற விவரத்தோடு கடிதம் எழுதி அனுப்பி, பின்னர் அப்பகுதிகளுக்கு சென்று குருதட்சனை திட்டத்தின் கீழ் அவர்களை சந்தித்தோம்.

இந்த நிகழ்வை துவக்கி வைத்து சிறப்பித்தவர் எங்களுடைய மூத்த கலைஞர் நடிகர் சிவகுமார் அவர்களும், திருமதி.சச்சு அம்மா, திருமதி.மேனகா அவர்கள். நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அந்த இடத்தில் தான் நாங்கள் இந்நிகழ்வை துவக்கினோம். நாங்கள் இந்த நிகழ்வுக்காக இயக்குநர் சங்கத்திடம் பேசி இருபது உதவி இயக்குநர்களை வரவழைத்திருந்தோம் அவர்கள் தான் இந்த விண்ணப்பபடிவத்தை எல்லாம் சரி பார்ப்பது முதலிய வேலைகளை செய்தனர்.

அதோடு வருகிற 25௦ உறுப்பினர்களும் பயனடையும் வகையில் அவர்களுக்கு உணவு, தேனீர், மருத்துவ முகம் போன்ற பல்வேறு விஷயங்களை செய்திருந்தோம். இந்த விண்ணப்படிவத்தை பார்த்தவுடனேயே, அவர்களுக்கு மருத்துவ முகாமில் ஒரு செக்அப் செய்து, கண்பார்வை பிரச்சனைகள் இருந்தால் உடனே அவர்கள் கண்ணாடி வழங்குவது போன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மிகப்பெரிய குறைபாடு உள்ளவர்களை குறிப்பெடுத்து கொண்டு. சாதரணமான பிரச்சனை உள்ளவர்களுக்கு சாதாரண வாசிப்பு கண்ணாடி வாங்கி கொடுத்தோம். தினமும் 5௦ல் இருந்து 75 பேருக்கு இந்த கண்ணாடியை நாங்கள் வழங்கியுள்ளோம். வந்தவர்கள் அத்தனை பேருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வேல்ஸ் பல்கலைகழகத்தில் இருந்து விஸ்காம் படிக்கும் 1௦ மாணவர்கள் 1௦ கேமராவுடன் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சின்ன சின்ன அரங்கங்கள் தயார் செய்து, கேமராமேன் வேல்ராஜ் அவர்கள் வழங்கிய லைட்ஸ்-உடன் உதவியாளர்களையும் அனுப்பி வைத்து முறைப்படி லைட்ஸ் செட்டிங்க்ஸ் எல்லாம் தயார் செய்து, வந்த உறுப்பினர்கள் அத்தனை பேரையும் அப்படி லைட்ஸ் செய்யப்பட்ட அந்த இடத்தில் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அதுபோக வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவின் உபயோகம் யாதெனில் “தாங்கள் நடித்ததற்கான பதிவேதும் இல்லாத துணை நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் சரியாக லைட் செய்யப்பட்ட அழகான இடத்தில் வைத்து அவர்கள் திறமையை வெளிப்படுத்தும்படி கூறி அவர்களுக்கு தோணுவதை அதாவது பாடுவது, பேசுவது போன்ற விஷயங்களை செய்ய சொல்லி அவர்களுடைய குரல், முகம், பாவனைகள் போன்றவற்றை பதிவு செய்யும் வகையில் இதை அமைத்தோம்.

அதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். இணைய தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த பதிவை தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இங்கே உள்ள இயக்குநர்கள் போன்றவர்கள் பார்க்கும் வகையில் நாங்கள் அதை அமைத்துள்ளோம். அவர்களுக்கு தேவைப்படும் வித்தியாசமான முகஅமைப்பு, குரல் ஆகிவற்றை இதன் மூலம் தேர்ந்தெடுத்து பயன்பெற்றுக்கொள்ள வாய்ப்புகளை நாங்கள் ஏற்ப்படுத்தியுள்ளோம்.

சென்னையில் இந்த நிகழ்வானது 7 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துவிட்டது. வெளியூரில் இருப்பவர்கள் அனைவரும் திரைப்பட துறையில் உள்ளவர்கள் அல்ல அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க நாடகத்தையே வாழ்க்கையாக கொண்டவர்கள்.

நாடக கலைஞர்களையும் திரைப்பட நடிகர்களையும் ஒன்றாக்கி ஒரு நாடகத்தை நடத்த உள்ளோம் இது எதிர்கால திட்டமாக எடுத்துள்ளோம். வெளிமாவட்டங்களில் இருப்பவர்களுக்கு இந்த கணக்கெடுப்பின் மூலம் உதாரணமாக புதுகோட்டையில் 150 நாடக நடிகர்கள் உள்ளனர். அங்கு உள்ள முதியவர்கள் எத்தனைபேர் ? அவர்களுள் எத்தனை பேருக்கு ஓய்வூதியம் தேவைப்படுகிறது. எத்தனை பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது.. என்று பார்த்து அவர்களுக்கு அருகில் இருக்கக் கூடிய மருத்துவமனையில் பேசி ஒரு சலுகை பெற்று தரப்படும்.

படிக்கிற குழந்தைகளுக்கு புதுக்கோட்டையை சுற்றி உள்ள கல்லூரிகளில் நுழைவு சீட்டு பெற்று தர முடியும். என பல வழிகளில் கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் குருதட்சனை திட்டம் என்று பெயர் வைத்தோம். இந்த ஜனவரி இறுதிக்குள் அனைத்து கலைஞர்களின் குடும்ப கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்படும். அதற்க்கு பிறகு சென்னையில் இருக்க கூடிய பெரிய நடிகர்களுக்கு விண்ணப்பங்களை அவரவர் PRO மூலமாக அனுப்ப உள்ளோம்.

இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் ஏற்கனவேயுள்ள உறுப்பினர்களுடைய எண்ணிக்கை தொடர்ச்சியாக இல்லாமல் விடுபட்டு உள்ளது. இது எப்படி நடக்கிறது என்றால் முதிய உறுப்பினர்கள் காலமாவதினால் எண்கள் விடுபட்டு இருக்கின்றன. இதை ஒழுங்கு படுத்தி உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் தொடர் எண்கள் கொடுக்கப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு ஆனது நிர்வாகங்களின் மூலம் திட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டு கல்வி, மருத்துவம், என எல்லா அவசர கால உதவிக்கும் பயன்படுத்தப் படுவதே இந்ததிட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version