- Ads -
Home கிரைம் நியூஸ் மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது..

மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது..

மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இந்த பள்ளிக்கு வேறு பள்ளிகளில் இருந்து 2 ஆசிரியைகள் பணி மாறுதலாகி வந்தனர். அவர்கள் மற்ற பள்ளிகளை போல தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலனிடம் அலுவலக தேவைகளுக்காக பேசி உள்ளனர். ஆனால் ஜோசப் ஜெயசீலன் அந்த ஆசிரியைகளிடம் தவறான கண்ணோட்டத்தில் பழகி உள்ளார்.

மேலும் 2 ஆசிரியைகளுக்கும் தனித்தனியாக அவ்வப்போது பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்துள்ளார். 2 ஆசிரியைகளும் ஜோசப் ஜெயசீலனை எச்சரித்துள்ளனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத ஜோசப் ஜெயசீலன் செல்போனிலும் ஆபாசமாக பேசி உள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் பணி மாறுதல் கேட்டு முதன்மை கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பணிமாறுதலும் கிடைத்தது. ஆனால் அவர்களை பணியில் இருந்து ஜோசப் ஜெயசீலன் விடுவிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு ஆசிரியை மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இது தெரியவந்ததும் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு ஜோசப் ஜெயசீலன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் ஜோசப் ஜெயசீலனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி மாநகர தெற்கு துணை கமி‌ஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமி‌ஷனர் அக்பர் கான் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் ஜோசப் ஜெயசீலன் செல்போன் சிக்னல் மூலம் தேடினர். அப்போது அவர் திருப்போரூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு செல்வதற்குள் ஜோசப் ஜெயசீலன் தப்பி சென்று விட்டார். இதனை தொடர்ந்து அவரது வங்கி கணக்கை போலீசார் முடக்கும் நடவடிக்கையை எடுத்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் அவர் பணம் எடுத்தது தெரியவந்தது. அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் அவரது உருவம் பதிவாகி இருந்தது. அதில் ஜோசப் ஜெயசீலன் மொட்டை அடித்து தாடி வைத்து இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் கோவை மாவட்டம் அவினாசியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் ஜோசப் ஜெயசீலன் அங்கு இல்லை. அவர் மதுரைக்கு தப்பி வந்து விட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை தெற்குவாசல் பந்தடி தெருவில் ஜோசப் ஜெயசீலன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே கீரைத்துறை பள்ளியில் வேலை பார்த்த ஒரு ஆசிரியையுடன் ஜோசப் ஜெயசீலனுக்கு பழக்கம் ஏற்பட்டதும், அந்த ஆசிரியை தற்போது அவினாசியில் இருப்பதும், அவர் வீட்டில் தான் ஜோசப் ஜெயசீலன் பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதுபோல் வேறு யாருக்கும் இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

images 91

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version