
தெலுங்கில் :பி.எஸ் சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்
ஸ்வஸ்ருர்நிர்கச்சோக்தி ந்யாய: – (ஸ்வஸு – மாமியார். நிர்கச்சோக்தி – விரட்டுவது)
மனித இயல்பை புரியும்படி விளக்கும் நியாயம் இது. தன் சொல்லே வெல்ல வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளவர்களின் இயல்பை விவரிக்கும் நியாயம் இந்த ஸ்வஸ்ருர்நிர்கச்சோக்தி ந்யாயம். இதில் ஒரு பிரசித்தமான கதை உள்ளது.
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டு ஒரு வீட்டுக்குச் செல்கிறான். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று உரக்க குரல் கொடுக்கிறான். உள்ளிருந்து ஒரு இளம்பெண் வந்து, “எதுவும் இல்லை. போ, போ” என்று கூறி, உள்ளே சென்று கதவை மூடி விடுகிறாள்.
பிச்சைக்காரன் முக வாட்டத்தோடு அங்கிருந்து நகர்ந்து விடுகிறான். அதற்குள், ஒரு முதியவள், கோவிலுக்குச் சென்றவள் திரும்பி வந்து, தன் வீட்டிலிருந்து அந்த பிச்சைக்காரன் வருவதை கவனிக்கிறாள்.
தன் புது மருமகள் அவனுக்கு என்ன தானம் செய்தாளோ என்று சந்தேகம் வருகிறது. அவனிடம், “எங்கள் வீட்டுக்குச் சென்றாயே, என் மருமகள் என்ன கொடுத்தாள்?” என்று வினவினாள்.
அதற்கு அவன் துயரத்தோடு, “எதுவும் இல்லம்மா. போ போ என்று விரட்டிவிட்டாங்க” என்றான்.
அதனால் கோபம் கொண்ட மாமியார், அவனிடம், “அப்படியா சொன்னாள்? அவள் யார் அப்படி சொல்வதற்கு? நான் வீட்டுக்குப் பெரியவள். நீ வா எங்கள் வீட்டுக்கு” என்று அழைத்தாள்.
சிறிது ஆசையோடு பிச்சைக்காரன் அந்த முதியவளின் அழைப்பை ஏற்று அவள் பின்னால் சென்றான். உள்ளே சென்ற அவள், நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. மீண்டும் பிச்சைக்காரன், ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று குரல் கொடுத்தான். மாமியார் வெளியில் வந்து, “எதுவும் இல்லை. போ போ” என்றாள்.
பிச்சைக்காரன் ஆச்சர்யமடைந்தான். இந்த நியாயத்தில் காணப்படும் கதாபாத்திரங்களை ஆராய்வோம். அந்த மாமியார் அனுபவம் மிக்க பெண்மணி. தன் வீட்டுக்கு வந்த வேறொரு தாய் பெற்ற பெண்ணை ஆதரவாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவளுக்கு உள்ளது. அப்படியிருக்கையில், அந்த மருமகளின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்காததும், புது மருமகளைத் தன்னுடைய வாரிசாக ஏற்காததும் அநியாயம். இதுவே இந்த நியாயம் கூறும் செய்தி.
பிரம்மஸ்ரீ ஜடாவல்லபுல புருஷோத்தம், தன் ‘சித்ரசதகம்’ என்ற நூலில், இப்படிப்பட்ட மன இயல்பு கொண்ட மாமியார் குறித்து இவ்வாறு எழுதுகிறார்-
கதா ஸ்னுஷா மே க்ருஹவர்திநீ ஸ்யாத்
கதா ஸுபுத்ரஸ்ய தயா சுகம் ஸ்யாத் |
ஸ்வஸ்ரூர்விலப்யைவமனல்ப காலம்
ஸமாகதாம் தாம் ஸஹேத சித்ரம் ||
பொருள் – மருமகள் என் வீட்டுக்கு வந்து எப்போது நடமாடுவாள்? மருமகள் வந்து என் மகனை எப்போது சுகப்படுத்துவாள்? என்று நீண்ட காலம் காத்திருந்த மாமியாரே தன் வீட்டுக்கு வந்த மருமகளிடம் பகைமை பாராட்டுகிறாள். இது விசித்திரம் அல்லவா? என்று கேட்கிரார்.
ஒரு வேலையைச் செய்யும் ஒருவரை, திட்டி விமர்சித்துவிட்டு, தானும் அதே வேலையை அதே போல் செய்வதை இந்த ‘ஸ்வஸ்ருர் நிர்கச்சோக்தி ந்யாயம்’ மூலம் விளக்குவது வழக்கம். இது மாமியார் மருமகள் உறவுக்கு மட்டுமே பொருந்தும் என்பதல்ல.
• இதை அலுவலகங்களிலும் பார்க்க முடியும். (பாஸ் ஈஸ் ரைட் என்ற கர்வம்) அங்கு பணிபுரியும் அதிகாரிகளின் மனநிலைமையும் மேற்சொன்ன கதையில் வரும் மாமியாரைப் போலவே இருப்பதைப் பார்க்கலாம். தன் கீழ் பணியுரிவோர் ஏதாவது தீர்மானம் எடுத்தால் பொறுக்க மாட்டர்கள். அது சரியான முடிவு என்று மனசாட்சிக்குத் தெரிந்தாலும் அகம்பாவம் அதனை ஏற்காது. பொறாமையோடு தன் சக ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் அகங்காரம் கொண்ட அதிகாரிகள் பலரை தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்க நேர்கிறது.
• இந்த மன இயல்பை அரசியல் வட்டாரத்திலும் பார்க்கிறோம். ஆளும் கட்சியில் இருப்பவர் எடுக்கும் முடிவை எதிர்கட்சியில் இருப்பவர் ஏற்காமல் எதிர்ப்பது. அதிர்ஷ்டவசமாக எதிர்கட்சி ஆளும்கட்சியாக மாறும் போது அதே முடிவை எடுப்பது போன்றவை செய்தித்தாள் படிக்கும் வாசகர்கள் அறிந்ததுதானே.
• ஏழ்மை, ஊழல், உறவுக்குப் பதவி, வேலை வாய்ப்பபின்மை போன்ற சொற்கள் ஒருவர் மேல் ஒருவர் எறிந்து கொள்ளும் பந்து போன்றவையே என்று எழுதுகிறார் ஒரு கவிஞர்.
• விவசாயச் சட்டங்களை ஆளும் கட்சி எடுத்து வந்தால் அநியாயம். நாங்கள் எடுத்து வந்தால் நியாயம் என்ற நிலையே இந்த நியாயத்தின் உட்பொருள்.
• பிறரை எதைச் செய்யக் கூடாது என்று கூறுவார்களோ, அதே வேலையை இவர்கள் செய்வார்கள் என்ற விசித்தரமான மன நிலையே இந்த நியாயம் கூறும் கருத்து.
சங்கீதம் கற்றுத் தரும் குரு ஒருவர், தன் சீடனின் திறமையைக் கண்டு பொறுக்காமல் அவனோடு போட்டி போடுவார். சோக முடிவோடு கூடிய இது போன்ற அசூயை மன இயல்பை ஒரு திரைப்படத்தில் கூட காட்டினார்கள்.
வீடு, அலுவலகம், தேசத்தின் அரசியல் இவை மட்டுமே அல்ல. பல நாடுகளின் இடையேயும் இது போன்ற பொறாமை, வெறுப்பு, போட்டி போன்ற பலவும் நிலவுவதைக் காண்கிறோம். சர்வ தேச மேடையிலும் எத்தனை அரசியல் நாடகங்கள்! மாமியார் மன இயல்புகள்! அகம்பாவ வெளிப்பாடுகள்! இவை அனைத்தும் இந்த ‘ஸ்வஸ்ருர் நிர்கச்சோக்தி’ ந்யாயத்திற்குப் பொருந்தும் உதாரணங்களே.
ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென்று நம் தேசத்திற்கு புத்தி கூறும் பணியில் சில நாடுகள் இறங்கின. அவ்வாறு நம்மை விமரிசனம் செய்த நாடுகளுக்கு நம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுரீர் என்று பதிலளித்தார். யுத்தம் தொடங்கிய முதல் நூறு நாட்களில் நாம் வாங்கிய எண்ணெயின் மதிப்பைவிட நமக்கு புத்தி கூறிய நாடுகள் ஒவ்வொன்றும் இரு மடங்கு, மும்மடங்கு எண்ணெய் வாங்கியுள்ள செய்தியை மத்திய அமைச்சர் திரு ஜெயசங்கர் அவர்கள் புள்ளி விவரத்தோடு கணக்கு காட்டி அவர்களை வாயை மூடச் செய்தார்.
தாமே உயர்ந்தவர், பிறர் குறைந்தவர் என்று கருதும் மனநிலை தவறானது. நல்ல விஷயம் யார் சொன்னாலும் கேட்கவேண்டும். ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் இடையில் எப்படிப்பட்ட அகங்கார ஈகோ பிரச்சினைகளும் இருக்கக் கூடாது என்ற உட் பொருளையும் கருத்தையும் அளிக்கும் இந்த நியாயத்தின் சிறப்பை குறிக்கும் சுலோகம் இது –
யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம் பாலாதபி சுகாதபி |
யுக்திஹீனம் வச: த்யாஜ்யம் வ்ருத்தாதபி சுகாதபி ||
– யோகவாஸிஷ்ட்யம்
பொருள் – காரணத்தோடு கூடிய அறிவுள்ள சொல்லை யார் சொன்னாலும் கேட்கவேண்டும். வயதில் சிறியவர் கூறினாலும், பேச்சு பயிலும் கிளி (சுக) கூறினாலும் காது கொடுத்து கேட்க வேண்டும். காரணமற்ற, அறிவில்லாத சொல்லை வயதில் எத்தனை மூத்தவர் கூறினாலும் சாட்சாத் சுகர் கூறினாலும் விட்டுவிடவேண்டும்.
தான் கூறியபடியே எல்லோரும் நடக்க வேண்டும் என்ற பிடிவாதம், அகங்காரத்திற்கு வழிவகுக்கிறது. கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கிறது இந்த நியாயம்.
அமெரிக்கா உலகத்திற்கு மனித உரிமை பற்றி சொற்பொழிவாற்றும். தனக்கென்று வரும்போது மட்டும் அந்த நியமங்களைக் கடைப்பிடிக்காது. அமெரிக்காவில் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் (11-9-2001) நடந்தபின், பின்லேடனுக்காக தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. பின்லேடனின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானவர்களை அமெரிக்கா என்ன செய்தது தெரியுமா?
கியூபாவில் அமெரிக்காவின் பிடியில் இருக்கும் ஒரு தீவுக்கு இவர்களை அனுபிவைத்தது. அமெரிக்காவின் சட்ட நீதியோ, கியூபாவின் சட்ட நீதியோ பணி புரியாத அந்த தீவில் மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாத ‘கௌன்டானமோ பே’ (Guantanamo Bay) என்ற இடத்தில் அவர்கள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதுதான் அமெரிக்காவின் வழிமுறை.
அமெரிக்காவில் அ என்றால் அசூயை. ம என்றால் மாமியாரின் மனநிலை. கதையில் உள்ள மாமியாரைப் போலவே, அமெரிக்கா யாரையும் நம்பாது. தன் சொற்படியே அனைவரும் நடக்க வேண்டும். அதற்கு, தானே லீடர் என்ற நினைப்பு. ஸ்வஸ்ருர்நிர்கச்சோக்தி ந்யாயத்திற்கு இது ஒரு உதாரணம்.