- Ads -
Home இந்தியா சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

rahul-gandhi

புது தில்லி:

அண்டை நாடான சீனா, சண்டை போடும் முன்னேற்பாடுகளுடன் நம் நாட்டின் எல்லையில் வாலாட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததும், அதனை ரகசியமாக்க முயன்று பின் தோற்றதும், நாட்டில் இன்று பரவலாகப் பேசப்பட்டதுடன், மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோக்லாம், சீனாவின் டோங்க்லாங் ஆகிய பகுதிகள் சந்திக்கும் ஒரு முனையில், சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி, தனது கண்காணிப்பை பலப்படுத்த நிரந்தர கூடாரம் அமைத்துள்ளது. இந்நிலையில், சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில் இந்தியாவைச் சீண்டும் வகையில் கட்டுரைகளும் கருத்துகளும் ஆதிக்க மனப்பான்மையில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எல்லையில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 7 ஆம் தேதி, மோடி ஏன் சீனா விவகாரத்தில் மௌனமாக இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாகவோ, சீனா தனது அரசு ஊடகத்தின் மூலம் சீண்டி வருவது தொடர்பாகவோ எந்தத் தகவலையும் ராகுல் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், சீன தூதரகம் 9ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், இந்தியாவிற்கான சீன தூதர் லூ சவோஹூய்யும் சந்தித்து பேசினர். இந்தியா – சீனா இப்போதைய உறவுகள் குறித்து இருவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. சீன தூதரகம் இந்தச் செய்தியை வெளியிட்ட நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சி அதனை மறுத்துள்ளது. ஆனால், சற்று நேரம் கழித்து சீன தூதரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார் என காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சீன மற்றும் பூடான் நாட்டு தூதர்களை சந்தித்து பேசினார். முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் சந்தித்துப் பேசினார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஊடகங்களைச் சகட்டுமேனிக்கு சாடியவர், சீனாவிற்கு சென்ற மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ஜி20 மாநாட்டில் பாராட்டு தெரிவித்தது தொடர்பாக கேள்வி எழுப்பாமல், ஊடகங்கள் இப்படி போலி செய்திகளை இதுவரையில் வெளியிடுகின்றன!, நாங்கள் இன்னும் அனைத்து அண்டைய நாடுகளுடன் அரசு ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளோம் என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும். மரியாதை நிமிர்த்தமாகவே பல நாடுகளின் தூதர்களையும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசி வருகிறார்கள் எனக் கூறியுள்ளார் சுர்ஜேவாலா.

இப்போது, ராகுல் காந்தியின் அரசியல் பல்வேறு கேள்விகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பரவலாக சில கேள்விகளை சமூக வலைத்தளங்களில் மக்கள் எழுப்பி வருகின்றனர்.

அரசியலுக்காக நாட்டை அடமானம் வைக்கிறதா காங்கிரஸ் ? சீனத் தூதரை ராகுல் சந்திக்கவில்லை என்றது காலையில் சொன்னது காங்கிரஸ். எல்லை விவகாரங்களைத் தெரிந்து கொள்ள சீன தூதரை சந்தித்ததாக இன்று மதியம் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இவ்வாறு ராகுல் காந்தி சீனத் தூதரை சந்தித்ததை காலையில் தனது வலைத்தளத்தில் வெளியிட்ட சீன தூதரகம், இவ்வாறு செய்தி வெளியான சில மணித் துளிகளில் அந்தச் செய்தியை வலைத் தளத்திலிருந்து நீக்கியது. ஏன் இவ்வாறு நடந்தது? செய்தியை வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டிய நிர்பந்தம் சீன தூதரகத்துக்கு வந்தது எதனால்? இதன் பின்னணி என்ன?

ராகுல் காந்தி சீன தூதரைச் சந்திக்கவில்லை, இந்தச் செய்தி வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஐ.பி யின் திட்டமிட்ட பொய்ப் பிரசாரம் என்று காலையில் அறிக்கை விட்டது காங்கிரஸ் கட்சி. சந்தித்தது உண்மை என்றால், ஏன் இந்த அறிக்கையை கட்சி வெளியிட்டது ?

ராகுல் சீன தூதரை சந்தித்த நிகழ்வை காங்கிரஸ் கட்சி மறைக்க முற்பட்டது ஏன்?

மணிசங்கர் போன்ற காங்கிரஸ் தலைவர்களின் வெளிப்படையான பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டை வைத்தும, ராணுவத்திற்கு எதிரான சந்திப் தீக்ஷித்தின் பேச்சையும் வைத்துப் பார்க்கும் போது, அரசியலில் பா.ஜ.க வை வீழ்த்த காங்கிரஸ் அன்னிய எதிரிகளுடன் கைகோக்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது என்று பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சீனாவுடனான பதற்ற சூழலில், ஒரு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ராகுல் சந்தித்துப் பேசியிருப்பது பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version