- Ads -
Home இந்தியா பீகார் சட்டப் பேரவையில் 20-ந்தேதி ஜிதன் ராம் மாஞ்சிக்கு பலப்பரீட்சை

பீகார் சட்டப் பேரவையில் 20-ந்தேதி ஜிதன் ராம் மாஞ்சிக்கு பலப்பரீட்சை

jitan-ram-manjhiபாட்னா: அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்ததால், அந்த கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பீகார் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகினார். புதிய முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரின் தீவிர ஆதரவாளரான ஜிதன் ராம் மாஞ்சி பதவியேற்றார். இந்த நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதல் – மந்திரி பதவியில் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் நிதிஷ் குமாருக்கும், மாஞ்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஜிதன் ராம் மாஞ்சி அறிவித்ததால், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் மாஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் புதிய முதல்– மந்திரியாக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்தும் மாஞ்சி நீக்கப்பட்டார். இதனிடையே பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார், தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தார். ஆனால் ஆளுநர் திரிபாதி அதை ஏற்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார். இதனால் நிதிஷ் குமார் தன்னை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏ.க்களை தில்லிக்கு அழைத்துச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். பீகாரில் குதிரை பேரம் நடப்பதை தடுக்க உடனே ஆளுனர் முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் குடியரசுத் தலைவர் அதை கேட்டுக் கொண்டாரே தவிர எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் நிதிஷ் குமாரை புதிய முதல்வராக பேரவைத் தலைவர் ஏற்றது செல்லாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் அறிவித்தது. இவை எல்லாம் நிதிஷ்குமார் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஆளுநர் திரிபாதி தொடங்கினார். பீகார் சட்டசபை வரும் 20–ந்தேதி கூடும்போது, முதல்–மந்திரி மாஞ்சி தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பீகார் ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஓரிரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே பீகார் சட்டப் பேரவையில் நடைபெற உள்ள பலப்பரீட்சை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version