- Ads -
Home இந்தியா 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்பு: முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்பு: முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அதன்படி மாநிலங்களின் வளங்களுக்கான அதிகாரப் பகிர்வு உயர்வதாகவும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். மோடி எழுதிய கடிதத்தில்… இந்த அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து, நமது கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவும் கூட்டாட்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவது உங்களுக்குத் தெரியும். அரசுகள் மீதான அதிக எதிர்பார்ப்பை நம் நாட்டு மக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அதற்காக அவர்கள் காத்திருக்க விரும்பவில்லை. எனவேதான், துவக்கத்திலிருந்தே நாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். நம் நாட்டின் பன்முகத் தன்மையைப் பார்க்கும்போது உண்மையான செயல்பாடுள்ள கூட்டாட்சி ஆளுமைதான் இந்த வளர்ச்சிக்கான ஒரே வழி என்பதை எமது அரசு நன்கு புரிந்து கொண்டுள்ளது. வளமான மாநிலங்கள்தான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என நான் முழுமையாக நம்புகிறேன். நான் முதலமைச்சராக இருந்தபோதுகூட, நாட்டின் வளர்ச்சி மாநிலங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளேன். அதனால்தான் இந்த அரசு மாநிலங்களுக்கு அனைத்து வகையிலும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அத்துடன், மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான திட்டங்களை இயற்றி செயல்படுத்த வேண்டும். நிதியைச் செலவிட முன்னெச்சரிக்கையும் கட்டுப்பாடும் இருக்கும் அதேநேரத்தில், அவர்களுக்குத் தேவையான நிதியும் சுதந்திரமாக செயல்பட அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறோம். மேலும், மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அத்துடன் ஒதுக்கப்பட்டுள்ள சமூகங்களும் பின்தங்கிய பகுதிகளும் நாட்டின் வளர்ச்சியோடு ஒன்று சேர முடியாது. இதனை மனதில் கொண்டு, திட்டக் குழுவுக்குப் பதிலாக நிடி ஆயோக் ( नीति आयोग – National Institution for Transforming India Aayog – is a policy think-tank of Government of India) என்பதைக் கொண்டு வந்துள்ளோம். வளர்ச்சி என்ற தேசிய நோக்கத்தை விரைவில் செயல்படுத்த ஒரு பொதுக் கருத்துரு இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய நோக்கமும், திடமான நடவடிக்கையும் நம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைய உதவும். இதற்காகத்தான் 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடியை அளிக்கும் என்றாலும் நாங்கள் அதனை முழுமனதோடு ஒப்புக் கொண்டுள்ளோம். வளங்களுக்கான மாநிலங்களின் அதிகாரப் பகிர்வை 10 சதவிகிதம் அதிகரிக்குமாறு 14-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது முந்தைய நிதி ஆணையத்தின் பரிந்துரையைவிட சற்று அதிகம். மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரப் பகிர்வு 2014-15 நிதி ஆண்டைவிட 2015-16 இல் அதிகமாக இருக்கும். இதனால் மத்திய அரசுக்கு குறைவான நிதியே கிடைக்கும். இருந்த போதும் மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை மாநிலங்கள் வடிவமைக்கவும் செயல்படுத்தவும் இது உதவும் என்பதால் இந்த 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளோம். தனது பரிந்துரைகளில், 14-வது நிதி ஆணையம் வருவாய் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கிடும் முறையில் அடிப்படை மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி மாநிலங்களின் வருவாய் செலவினங்கள் திட்டத்துக்கான மத்திய அரசின் உதவி, மாநிலங்களின் வருவாய் சுமையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஏற்படுகிறது. 14-வது நிதி ஆணையத்தின் அறிக்கை பத்தி 7.43 இதனை விளக்குகிறது. பெரும்பாலான வளங்கள், வரி அதிகார பகிர்வுடன் இணைந்தே இருக்கவேண்டும் என்பது மாநிலங்களின் நோக்கம். மத்திய அரசால் பொறுப்பேற்று நடத்தப்படும் திட்டங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டும் என்று பத்தி 8.6, 8.7–ல் 14-வது நிதி ஆணையம் கூறியுள்ளது. அதனால், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதிலிருந்து அதிக்காரப் பகிர்வு கிடைக்கும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. எனவே, வகுக்கப்படக்கூடிய வளங்களின் 42 சதவீதம் அதிகாரப் பகிர்வு இருக்கும். அதனால், 14-வது நிதி ஆணையம் கூறியுள்ளது போல் மாநிலத்தின் அனைத்து வருவாய் செலவினங்களும் அந்த மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வளங்களைக் கொண்டு நிறைவு செய்யப்பட வேண்டும். வறுமையை போக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் உள்ளிட்ட நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படும் சில முக்கியத் துறைகளில் ஓரளவுக்கு மத்திய அரசின் உதவியை தொடர முடிவு செய்துள்ளோம். 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஒப்புக் கொண்டதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். “அனைவருக்கும் பொருந்தும் ஓர் அளவு” என்ற அணுகுமுறையை மாநிலங்களிடம் திணிப்பதை விட்டு நாங்கள் விலகி உள்ளோம். மாநிலங்கள் இந்தக் கொள்கைக்கு எதிராக பல ஆண்டுகள் குரல் எழுப்பி வந்துள்ளன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நாட்டின் திட்டமிடும் முறையை எமது அரசு பரவலாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி மாநிலங்கள் தேவையான அளவு சுதந்திரமாக திட்டமிடவும் வளர்ச்சியடையவும் அதிக அளவு நிதியைப் பெறுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 10% இந்த வகையில் மாநிலங்கள் செலவிட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வளங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளன. மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட பழைய திட்டங்களின் செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை நான் ஆய்வு செய்ய நினைக்கிறேன். மாநிலங்கள் தேவைகளுக்கு ஏற்ப இந்த திட்டங்களையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து செயல்படுத்தவும் அல்லது மாற்றி அமைக்கவும் முழு உரிமை அளிக்கப்படுகிறது. இவை அனைத்திலும் மத்திய அரசு குறிப்பாக நிடி ஆயோக் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான உத்திகளைச் செயல்படுத்த யோசனைகள், மதிநுட்பம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்கும். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அதிகாரப் பரவலுக்கான எனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இது அமையும். நாட்டின் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்தவும் ஆலோசனை செய்யவும் மாநிலங்களை ஈடுபடுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். மத்திய அரசும் மாநில அரசுகளும் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் அதிக அளவு பலன் அளிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது. நிடி ஆயோக்கின் செயல்பாட்டுக் குழுவில் அனைத்து மாநில அரசுகளின் முதலமைச்சர்கள் சம அளவு பங்கெடுத்துக் கொள்ளும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்புடனான கூட்டாட்சி முறையின் மூலம் விரைவான வளர்ச்சியை எட்டுவதே நமது நோக்கம். நமது வளங்கள் வறுமையை ஒழிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மின்சார வசதி, மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், குடிநீர், வீட்டுவசதி ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன. இது நமது நாட்டில் இதற்கு முன் எப்போதும் நடைபெறவில்லை. மேலும், பல மாநிலங்களுக்கு பயனளிக்கும் வகையில் கனிமங்கள் மீதான ஆதாய வருவாய் விகிதத்தை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளோம். தற்போது நிலக்கரி கனிமங்கள் மீது நடைபெறும் ஏலம் வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது. இதன் மூலம் கனிமங்களும் நிலக்கரி வளங்களும் உள்ள மாநிலங்களுக்கு அதிகப்படியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் அதிகப்படியான கனிம வளங்களைக் கொண்டிருந்த போதும் குறைவான வளர்ச்சியே அடைந்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் இவை சம அளவை எட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது. வளங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது தற்போது பிரச்சனை இல்லை. நமது கொள்கைகளையும் திறமையையும் செயல்படுத்துவதை இது நோக்கமாக கொண்டது. பணம் மத்திய அளவிலோ அல்லது மாநில அளவிலோ கூட இருக்கலாம். அது நாட்டிற்காக எவ்வாறு எதற்காக செலவிடப்படுகிறது என்பதுதான் முக்கியம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். நமது கவனம், ஏழைகள், விவசாயிகள், சாதாரண மனிதன், பெண்கள், இளையோர் மீது இருக்க வேண்டும். இவர்களின் முழுத்திறனையும் பயன்படுத்தி நமது நோக்கத்தை எட்டுவதையே சவாலாக இருக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சி திட்டத்தின் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்தியாவைக் குறித்து மிகப் பெரிய நம்பிக்கை உள்ளதையும் இந்தியாவில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் கொண்டுள்ளதையும் நான் பல நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களிலிருந்து தெரிந்துகொண்டேன். இந்தியாவின் வளர்ச்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். இது மத்திய அரசுக்கான வாய்ப்பு அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வாய்ப்பு. நமது நாட்டின் அற்புதமான வளர்ச்சியை எட்டுவதே நமது நோக்கம். நாடும் உங்கள் மாநிலமும் எதிர் கொள்ளும் சவால்களை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் உங்களின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருக்க வேண்டும். இதற்காக நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் முன்னுரிமைத் திட்டங்களையும் வளங்களையும் இதற்காக செயல்படுத்துவதற்கு திட்டமிட முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். திட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் முறையான மதிப்பீடு செய்து நாம் செயல்படுத்த வேண்டும். இந்த முயற்சியில் நானும் உங்களுடன் இனணந்து பணியாற்றுவேன். பணிகளை தரமானதாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்கான வரையறைகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும். இதை நோக்கிய பாதையில் நாம் இணைந்து செயல்படுவோம். இது குறித்த ஆலோசனைகளை பெறுவதற்கு எந்த நேரத்திலும் நான் தயாராக இருக்கிறேன் இவ்வாறு பிரதமர் மோடி அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version