- Ads -
Home சற்றுமுன் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு திருமாவளவன் எழுதிய கடிதத்துக்கு பத்திரிகையாளர் நம்பி பதில்

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு திருமாவளவன் எழுதிய கடிதத்துக்கு பத்திரிகையாளர் நம்பி பதில்

துக்ளக் பத்திரிகையில் திரு. திருமாவளவன்  திரு.மோகன் பாகவத் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு நான் அனுப்பிய பதில் கடிதம்

===

மதிப்பிற்குரிய அண்னன் திருமா அவர்களுக்கு,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களுக்கு தாங்கள் வரைந்த திறந்த மடலை துக்ளக் இதழில் படித்தேன். உங்களுக்கான பதில் ஆர்.எஸ்.எஸ் தலைமையில் இருந்து விரைந்து வரக்கூடும். எனினும் அதன் தொண்டன் என்ற முறையில் தங்களின் கடிதத்திற்கான எனது பதிலை கீழ்கண்டவாறு முன்வைக்கிறேன்:

” வழிப்பறி செய்த ஓர் வேடன் வானவர் நிலைக்கு உயர்ந்தவன்

படகோட்டியைத் தழுவிய ஒருவன் சோதர பாசம் உணர்த்தியவன்

மீனவப் பெண்ணின் மகன் வந்தான் – வேதங்களையே வகுத்தளித்தான்

பிறவியில் உயர்வு தாழ்வுகள் இல்லை என்றே உணர்த்திய நாடு இது “.

–    இந்தப் பாடல் வரிகள் நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் கற்றப் பாடல் வரிகள்………

வால்மீகி என்ற ஓர் வேடன் தந்த இராமயணம் தான் இன்று மேல்சாதி கீழ்சாதி என்கிற அனவருக்கும் புனிதம். வியாசன் என்ற மீனவப் பெண்ணின் மகன் தந்த மகாபாரதம் தான் இன்று மேல்சாதி கீழ்சாதி என்கிற அனவருக்கும் புனிதம். படகோட்டி ஒருவனை ராமன் சகோதரனாக ஏற்றுக் கொண்டான். எனவே பிறவியில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை என்பதை இந்த நாடி நம்க்கு உணர்த்துகிறது. இதனைப் எனப் கொண்டு ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி இந்துக்கள் ஓர்தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் இணைந்து வாழ வேண்டும் என்பதே அந்தப் பாடல்..இந்தப் பாடலை மனதில் பதியாத ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் யாருமே இருக்க முடியாது. கடந்த 35 ஆண்டுகளாக ஒவ்வொரு ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சிகளிலும்..ஏன் அந்த மாதம் முழுவதும் எல்லா ஆர்.எஸ்.எஸ். கிளைகளிலும் இந்தப் பாட்டு பாடப்பட்டுவதைப் அனுபவித்து அதை வாழ்கை முறையாகவும் மாற்றி வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் எண்ணற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களில் நானும் ஒருவன்.

உறங்காவல்லி தாசன் என்ற சமூகத்தால் பிற்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒருவனின் தோள்களைப்பற்றி தான் ராமானுஜர் தினமும் குளித்துவிட்டு காவிரியில் இருந்து கரையேறுவார் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐதீக பிராமிணர்களை ராமானுஜர் எப்படி வென்று சீடனாக்கினார் என்பதுமான இந்தக் கதையை நான் முதன் முதலில் கேட்டது பெரியவர் இராம. கோபாலன் அவர்களிடமிருந்துதான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ராமானுஜர் என்ற ஓர் ஆன்மிகப் போராளி செருப்பு தைக்கும் சாதியில் இருந்து பிராமிணன் வரையான 18 முக்கிய சாதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த கதையை வைஷணவனாய்ப் பிறந்த எனக்கு அறிமுகம் செய்ததே ஆர்.எஸ்.எஸ். தான்.

புலையன் ஒருவன் தனக்கு எதிரில் வர, தள்ளிப் போ என ஆதி சங்கரர் அவனிடம் கேட்க, “ யாரைத் தள்ளிப் போகச் சொல்கிறீர்கள் – என்னையா அல்லது என்னுள் உறைந்திருக்கும் இந்த ஆன்மாவையா “ என்று அவன் கேட்க, புத்தி வந்ததே என் அவன் கால்களில் ஆதிசங்கரர் விழுந்த கதையும் ஆர்.எஸ்.எஸ் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தது.

இப்படியெல்லாம் பாட்டுப்பாடியும், ஆன்மிக உண்மைக் கதைகளை கூறியும் தொண்டர்களை உருவாக்கி, அவர்கள் சாதி பாராதவர்களாக, தீண்டாமைக்கு எதிராக ஒரு மெளனப் புரட்சி செய்து வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம். இப்படித்தான் இந்த இயக்கத்தால் நானும் வளர்ந்தேன்.

நான் படித்த கிறிஸ்தவப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கிறிஸ்தவ மாணவர்களும் இந்து மதத்தை வகுப்பறையிலேயே இழித்தும் பழித்தும் பேசிவந்ததும் பண்முகத்தன்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததும் தான் என்னை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு கொண்டு சென்றது. ஆர்.எஸ்.எஸ். என்னை மதமாச்சர்யம் அற்ற, ஆனால் எல்லா மதங்களையும் புரிந்து கொள்ளக் கூடிய , மனித நேயத்தைக் கடந்த ஆன்ம நேயம் கொண்டவனாக வளர்த்தது.

திருச்சியில் நான் ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊழியனாய் பணியாற்றிய போது அங்குள்ள புத்தூர் என்ற பகுதியில் உள்ள துப்புறவு தொழிலாளர்கள் இடத்தில் ஒரு தினசரி கிளை துவங்கினோம். முனிசிபல் அலுவலகத்தில் துப்புறவு வேலை பார்க்கும் நாகராஜன் என்பவரின் தொடர்புதான் அதற்குக் காரணமாக இருந்தது. வெற்றிகரமாக தினசரி பயிற்சிகள் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு நாள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே திட்டமிட்டு அவர் வீட்டுக்குச் சென்றோம்,. என்னோடு வந்தவர் ஒரு வைதிக பிராமிணர், பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் ப்.ண். பரசுராமனின் அண்ணன் ப்.ண். சங்கர ராமன். குடுமியுடனான அவரின் தோற்றமே அவர் யார் என்பதைக் காண்பித்துவிடும். ஓட்டு வீடு. எதிரில் பன்றிக் கொட்டகை. வீட்டில் நாகராஜன் இல்லை, வெளியில் போயிருக்கிறார் என்ற அவர் மனைவியிடம் “ பன்றி மேய்க்க “ என்று சொல்லுங்களேன் அம்மா என்றோம். அவரும் ஆம் என்றார். நாகராஜனையும் பார்த்துவிட்டு சாப்பிட்டுப் போகலாம் என்று வந்திருப்பதாக நாங்கள் சொல்ல அவர் பதறிவிட்டார். அவர் கொடுத்த அந்த சோற்றையும் குழம்பையும் சாப்பிட்டோம். ( எப்படி இருந்திருக்கும் என்று கூறினால் நல்ல ஒரு உபசாரத்தை அபவாதம் செய்வதாகிவிடும் ) நாகராஜனும் வந்து சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ், இயக்கத்திலும் இந்து முன்னணியிலும் துப்புறத் தொழிளார்கள் இணைந்ததால் அய்யா தாணுலிங்க நாடார் இறந்த போது திருச்சி முனிசிபாலிட்டி அவருக்கு இரங்கல் தீர்மானம் இயற்றியது. குமரி மாவட்டம் தவிர தமிழகத்தில் அவருக்கு இரங்கல் தீர்மானம் இயற்றிய ஒரே நகராட்சி திருச்சிதான்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள தட்டாப்பாறை கிராமத்தில் தினசரி பயிற்சி நடத்தச் சென்றோம். நல்ல வரவேற்பு. ஆனால் மூன்றாம் நாளே எதிர்ப்பு. அந்த அம்மன் கோயில் மேட்டு திடலில் ஹரிஜனங்கள் வரக்கூடாதாம். அப்படியானால் அவர்கள் எப்படி தினசரி பயிற்சியில் பங்கேற்க முடியும் ? ஊர் பெரியவர்களோடு சண்டை போடவில்லை. அனைவரும் வரக்கூடிய இடமாகத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளைத் தொடர்தோம். சாதி பேதம் இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் களங்களில் விளையாடப்படும் முக்கிய விளையாட்டு கபடி. ஹரிஜன் ஒருவன் பாடி வருவான். அந்தணன் ஒருவன் அவனை அவுட் செய்வதற்காக அவன் காலைப் பிடிப்பான். ஹரிஜனனும் அந்தணனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஒருவர் வியர்வை ஒருவர் வியர்வையில் கலந்துசெல்லும் வண்ணம் விளையாட வைத்து சமூக நல்லிணக்கத்தை மெளனமாக உருவாக்கிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் சிவன் கோயில் ஒரு தினசரி பயிற்சி மையம் ஏற்பாடாகியது. அதிகம் கலந்து கொண்டவர்கள் பிராமிணர்களும் ஹரிஜனங்களும் தான். அங்குள்ள மற்ற சாதிப் பகுதி ஒன்றிற்கு பயிற்சி மையம் துவங்கச் சென்ற போது அங்குருந்த பெரியவர், “ ஆர்.எஸ்.எஸ் எல்லாம் சாதி கெட்ட பயல்க……இங்க வேண்டாம் “ என்றார். ஆம், பல சாதி முனைப்பு உள்ளவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சாதி கெட்ட பயல்களின் இயக்கமாகத் தான் தெரிந்தது. ஆனால் நாங்கள் விடவில்லை. அங்கும் ஒரு பயிற்சி மையம் துவக்கி வார இறுதி நாட்களில் இரண்டு மையங்களையும் இணைத்து பயிற்சி அளித்து விளையாட வைத்தோம். சென்னை இராமகிருஷ்ண மடத்தில் இன்று 200 க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகளுக்கான சுய உதவிக்குழுக்களை உருவாக்கி சேவை செய்து வருகிறாரே சகோதரர் சிவா, அவர்தான் அன்று கருங்குளத்தில் இந்தப்பணியை செய்தார். இன்று தொழு நோயாளிகளுக்கு அவர் செய்யும் அளப்பரிய சேவை, ஆர்.எஸ்.எஸ். அவருக்குக் கற்றுக் கொடுத்தப் பண்பினால் வந்தது என்று அவர் கூறுகிறார்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “ சக்தி ரதம் “ ஒவ்வொரு கிராமத்தில் உள்ள எல்லா சாதியினரும் அம்பாளை தொட்டுக் கும்மிட வேண்டும், சாதி பேதங்கள் மறைய வேண்டும் என்பதற்காக உலா அனுப்பப்பட்டது. அதிக இடங்களுக்குச் செல்ல வேண்டும், அதே சமயம் அதிக சாதியினர் வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் வழித் தடம் முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிரச்சினை வேறுவிதம். பள்ளர் பகுதியிலே பறையர்களும் ரதத்திற்கு வரவேற்பு என்று திட்டம். பள்ளர் சமுதாயத்தில் இருந்து கடும் எதிர்ப்பு. ஒருவாறு பேச்சு வார்த்தை நடத்தி பள்ளர் பகுதிக்கு 50 மீட்டர் முன்பே அவர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது. வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு வரவேற்பு கொடுத்த பறையர்கள் ரதத்துடனே பள்ளர் பகுதிக்கும் வர அனைவருக்கும் மகிழ்ச்சி..

திசையன்விளை அருகில் கரிசல் என்றொரு கிராமம். அங்கு நடைபெற்ற சிறப்பு இரவுநேர பயிற்சியில் பங்கு பெற்று வழிநடத்த சுமார் 20 கிமீ சைக்கிளில் சென்றேன். மாலை ஆறுமுப்பது மணி முதல் இரவு பத்து மணி வரை. உடற்பயிற்சி, சிலம்பம் போன்ற பாடங்கள் இரண்டு மணிநேரம்..மற்ற நேரங்கள் கதைகள், வரலாற்று உண்மைகள்…பயிற்சி முடிந்த போது நல்ல பசி. ஏற்பட்டாளரிடம் சாப்பாடு எங்கே என்றேன். நம்ம சேகர் வீட்ல தான் என்றார். சேகர் வீட்டில் எங்களுக்காகவே சுடுசோறும் மணக்க மணக்க சூடான் மீன குழம்பும் ரெடியாக இருந்தது. வகுப்பில் பங்கேற்க வந்த எவருக்குமே நான் பிராமிணன் எனத் தெரியவில்லை, அதில் சிலரை பலமுறை வேறு வேறு இடங்களில் சந்தித்துள்ளேன். கட்டிப்பிடித்து விளையாடியுள்ளோம். யாரிடமும் எதுவும் கூறவில்லை, மீன்களில் இருந்த முட்களை லாவகமாக எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு முடித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சந்திப்பில் , “ சேகர், நான் முதன் முதலில் மீன் சாப்பிட்டது உங்கள் வீட்டில் தான், அன்றைய தினம்..” என்ற போது சேகருக்கு அதிர்ச்சி. “ ஜி, சும்மா சொல்லாதீங்க..நீங்க ஒரு எக்ஸ்பர்ட் மாதிரி அழகா முள்ள ஒதுக்கி சாப்பிட்டீங்க “ என்றார். ஆம், ஆர்.எஸ்.எஸ் சின் சிறப்பே இதுதான் பல அந்தணர்கள் பூநூலை கழற்றி விட்டு எந்தச் சாப்பாட்டையும் சாப்பிட்டுக் கொண்டு சாதி பேதங்களைக் கடந்து இந்துசமுதாயத்தின் ஒருமைப்பாடே லட்சியம் என்று வேலைப் பார்க்கிறார்கள் என்றால் பல்வேறு இதர சாதியினர் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி காரணமாக ஆன்மிக ஆர்வம் பெற்று முழுவதும் சைவ சாப்பாட்டாளர்களாகே மாறி விடுகின்றனர். சமுதாய ஒருங்கிணைப்பிற்காக சைவ சாப்பட்டாளர்களை அசைவம் சாப்பிட வைத்து, அசைவ சாப்பாட்டாளர்களை சைவ சாப்பாட்டாளர்களாக மாற்றும் வல்லமை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு மட்டுமே உண்டு, கோட்ட அளவில் முழுநேர ஊழியர்களாய் பணியாற்றிய அசைவ உணவையே ஆதரமாகக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்த திரு; கே.சி. ராஜன் திரு. வேல்நாகராஜன் போன்றவர்கள் இன்று துறவிகளாய் மாறி மிகப் பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பாஜக வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா தேவேந்திரகுல வேளாளார் மாநாட்டிற்கு மதுரைக்கு வந்து சென்றதை நாம் அறிவோம். சமூக அந்தஸ்துதான் எங்களுக்கு முக்கியம் இதர சலுகைகள் அல்ல , ஆகவே எங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து தாருங்கள் என்று அந்த சமுதாயம் கோரிக்கை வைக்கிறது. அவர்கள் சாதியின் பெயரால் சண்டைக்குச் செல்லவில்லை.

அமைதியாக தங்கள் இன மக்களை எல்லாத்துறைகளிலும் மேம்படுத்தியுள்ளனர். இவர்களில் சிலர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பணியாற்றி அதனைப் புரிந்து கொண்டு சமூக மாற்றம் உள்ளிருந்து நிகழ வேண்டும் என்று உழைத்து வெற்றி பெற்றுள்ளவர்கள்.

இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அமரர் ஆத்மநாத சாமி. ஆர்.எஸ்.எஸ், இயக்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராகத் திகழ்ந்தவர். அரண்மனைக் கோயிலான ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் நவராத்திரி விழா அரண்மனை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெரும். ஆனால் ஹரிஜனங்களுக்கு அங்கு அனுமதி கிடையாது.  ஆத்மநாதசாமி முடிவு செய்தார். அந்த நவராத்திரி விழாவின் போது ஹரிஜனங்களுடன் தானும் வெளியில் நின்று விட்டார். அரச குடும்பத்தவரும் அரண்மணை அதிகாரிகளும் வந்து அழைத்த போது தெளிவாகக் கூறிவிட்டார், “ அவர்களை உள்ளே அழைப்பதானால் நானும் வருகிறேன். இல்லையேல் வரவில்லை “. அன்று முதல் ஹரிஜனங்களும் முழுசுதந்திரத்தோடு நவராத்திரி விழாக்களில் பங்கேற்று வருகின்றனர். இராமநாதபுரம் உட்பட பல தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் மூண்ட போது துறவியர் பெருமக்களை அழைத்துச் சென்று இருதரப்பிலும் பகை நீங்க பேசி சமரசம் செய்து வைத்த பெருமை பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையே சேரும்.

சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் திரு.குருஜியின் ஜென்ம தினத்தன்று முடிந்தவரை ஒவ்வொரு தொண்டனும் தன் வீட்டிற்கு ஒரு ஹரிஜன குடும்பத்தை அழைத்து கெளரவித்து விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என்று அழைப்பு விடப்பட்ட போது அதைப் பின் பற்றாத சங்கத் தொண்டர்களே இல்லை என்பதுதான் உண்மை. எங்கள் வீட்டைப் பொருத்த அளவில் எந்த வேறுபாடும் எப்போதும் இல்லை. தீண்டாமைக்கு வேதங்களில் இடமில்லை என்று  குருஜி அவர்களால் இந்து துறவியரைக் கொண்டு கூட்டுப் பிரகடணம் செய்ய வைக்க முடிந்தது. பின்னர் வந்த மூன்றாவது சர்சங்கசாலக் தேவரஸ் அவர்கள், “ தீண்டாமை பாவலம் இல்லையென்றால் உலகில் வேறு எதுவுமே பாவம் ஆகாது “ என்று தீண்டாமைக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்தார். இப்போதைய சர் சங்க சாலக் மோஹன்பாகத்தோ பொதுக் கிணறு, பொது மயானம் என்பதை நிறைவேற்ற சங்கம் முழுமையாகப் பாடுபட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

யதார்த்ததில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்க்கும் ஆசார பழக்க வழக்கங்களுக்கும் எந்த சம்பந்தமும் கூட இல்லை. எனக்குத் தெரிந்த பல மூத்த பிரச்சாரகர்கள் வடிகட்டிய நாத்திகர்கள். ஆனால் இந்துத்வத்தால்தான் பண்முகத்தன்மையை உலகம் முழுவதும் பாதுகாக்க முடியும் என ஆழமாக நம்பியவர்கள். தமிழகத்தில் நீண்டகாலம் சங்க பிரச்சாரகராகப் பணியாற்றிய சிவராம் ஜோக்லேக்கர் தனது மரணத்திற்குப் பின் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காகத்தானம் செய்தவர். எங்கே வந்தது ஆசாரம், கிரியை எல்லாம்..?

இப்படி நான் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆர்.எஸ்.எஸ் செய்வது ஒரு மெளனப் புரட்சி. அரசியல் புரட்சி அல்ல, சமூகப் புரட்சி. ஆர்.எஸ்.எஸ். ஆக்க பூர்வமாக சமூக நல்லிணக்கம் பேணும் போது நீங்கள் அழிவுப் பூர்வமாக தீர்வு தேடுகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பின் மூலம் சமூக நல்லிணக்கம் தேடும் போது நீங்கள் அதை உடைப்பதன் மூலம் தேடுகிறீர்கள். எதையுமே உடைப்பது சுலபம்.

உருவாக்குவதுதான் கடினம்.  

எனவே தான் அண்ணன் திருமா வின் வழியை ஆர்.எஸ்.எஸ். உகந்தது அல்ல என்று கருதுகிறது. அண்ணன் திருமா தேர்தல் பாதை நக்சல் பாதை என்று இயக்கம் நடத்திய பின் அரசியல் பாதை தான் தீர்வுக்கான பாதை என நம்பி வந்து தான் நடத்திய இயக்கத்தைக் கைவிட்டு விட்டார்.

அரசியல் ரீதியாக சமூக சீர்திருத்தங்கள் நிகழ முடியாது. அவை உள்ளிருந்து வரவேண்டியவை. எனவே தான் சம்பவங்களின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். பொங்கி எழுவதில்லை. அரசியல் கட்சிகள் பொங்கி எழலாம். ஆனால் அவர் கூறிய எல்லா துரதிருஷ்டவசமான சம்பவங்களையும் கண்டித்துள்ளது, அந்த அந்த இடங்களில் தனது சக்திக்கு ஏற்றவாறு இருபுறமும் வேலைசெய்து சமூக பதட்டத்தை தணித்துள்ளது. “ அத்து மீறு..அடங்க மறு “ என்ற கோஷங்கள் எல்லாமே கொதிப்பை ஏற்படுத்துபவை. கொதிக்கும் நீரில் முகம் பார்க்க முடியாது. எனவே தான் பல சமயம் நம்கண்களுக்கு உண்மை புலப்படுவதில்லை.

எனவே தான் அம்பேத்கர் ஏற்க மறுத்த இஸ்லாத்தோடு இன்று அண்ணன் திருமா உறவாடிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமோ கிறிஸ்தவமோ பண்முகத்தன்மையை , பல தெய்வ வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளாது என்பதும், கத்தோலிக்க – புரொட்டஸ்டண்ட சண்டையிலும், விட்ச் ஹண்டிங் என்று சொல்லப்படும் பெண்களைப் பேய் என்றும் பிசாசு என்றும் கூறி பெண்களுக்கு எதிராக கிறிஸ்தவனர் நடத்திய கொலை வெறி விளையாட்டும், க்ருசடெ  என்ற சிலுவைப் போரும், ஜெஹட் என்ற புனிதப் போரும் தான் உலகில் கோடிக்கணக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது என்ற வரலாறு தெரியாதவராக அண்ணன் திருமா இருக்க முடியாது. எனவே தான் அம்பேத்கரின் புரட்சி உள்ளிருந்து எழுந்தது. ஆனால் அம்பேதகர் உள்ளிருந்து நடத்திய புரட்சியை அவர் பெயரில் இன்று விசிகே வினர் அந்நிய மதங்களின் ஆதரவோடு நடத்தும் போது விசிகேயினரின் நோக்கம் சமூக நோக்கமா அல்லது அரசியல் நோக்கமா, நாடு பிடிக்கும் மதங்களுக்கு உதவும் நோக்கமா என்ற கேள்வி எழுகிறது. இந்த ஐயப்பாடுதான் ஆர்.எஸ்.எஸ் உங்களையும், நீங்கள் ஆர்.எஸ்.எஸ் ஐயும் நெருங்க விடாமல் செய்கிறது.

அம்பத்கரின் அருகில் இருந்து அவர்க்கு ஆர்.எஸ்.எஸ் பற்றிய புரிதலை ஏற்படுத்தி அவரது தேர்தல் பிரதிநிதியாகப் பணியாற்றிய தத்தோபந் தேங்கடிக்கும் அம்பேத்கருக்கும் இருந்த உறவு பற்றி யாரும் குறிப்பிடுவதில்லை. பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிஸான் சங்கம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் போன்ற பாமர உழைப்பாளிகளின் நலம் காக்கும் இயக்கங்களை உருவாக்கியவர் அமரர் தத்தோபந் தெங்கடி.

ருசித்துப் பார்க்காமல் ஒரு பொருளின் சுவையை அறிய முடியாது. புத்தக அறிவு லட்டின் சுவையை என் நாக்கில் கொண்டு வந்து விடாது, அப்படியே கொண்டு வந்தாலும் அது உண்மையானதாக இருக்காது. அண்ணன் திருமா அவர்கள் இக்கடிதத்தை அரசியல் நோக்கமின்றி தேடலின் நோக்கத்தில் எழுதியிருப்பார் எனில் அவரை ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமிற்கு வரவேற்கிறேன். அங்கு என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பதை அவர் நேரில் அனுபவிக்கலாம். அப்படித்தான் ஆர்.எஸ்.எஸ் ஐ மகாத்மா காந்தி அறிந்து கொண்டார். அப்படித்தான் அப்பேத்கரும் ஜெயப்பரகாஷ் நாராயணனும் அறிந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பாசிச இயக்கம் என்றால் நானும் ஓர் பாசிஸ்ட் என்று கூறினார் ஜெ.பி. இது ஆர்.எஸ்.எஸ் சை புரிந்து கொண்ட பின், அவரிகளின் சாதி பேத மற்ற அணுகுமுறையை நேரில் கண்ட பின் அமரர் ஜெ,பி, யிடம் ஏற்பட்ட மாற்றம்.

அண்ணன் திருமா அவர்களை ஆர்.எஸ்.எஸ் இயக்க நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும், பயிற்சி முகாம்களுக்கு வரவேண்டும், அதன் தலைவர்களோடும் தொண்டர்களோடும் உரையாட வேண்டும், உறவாட வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.

சகோதரத்துவத்துடன்

நம்பி நாராயணன்

முன்னாள் பொறுப்பாசிரியர், விஜயபாரதம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version