― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கிறிஸ்தவ கோரப் பிடியில் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை! காக்கப்போவது யார்?

கிறிஸ்தவ கோரப் பிடியில் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை! காக்கப்போவது யார்?

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யாதவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்தான். தலைநகர் சென்னையையும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களையும் இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது. இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.

மலை உச்சியில் உள்ள அந்தப் பாழடைந்த கட்டடத்தின் பின்னணி கதை தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் அல்ல, உதிரமே கொட்டும். கீழே இருந்து அல்லது பேருந்தில் செல்லும்போது பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம்.

அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த அழகிய மலைத்தொடரின் பெயர் வஜ்ரகிரி மலை. இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது.

தரையிலிருந்து சுமார் 700 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நேராக, அச்சிறுபாக்கம் ஊருக்குள் மிக அழகிய உயர்ந்த கோபுரத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது ஆட்சீஸ்வரர் கோயில். இந்த ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்டதுதான் பசுபதீஸ்வரர் கோயிலும் என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பெரியவர்கள். பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

வஜ்ரகிரி மலையின் ஒரு பகுதியை 1960களிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் இப்போது மலை உச்சியிலும், அடிவாரத்திலும் பிரம்மாண்டமான `மழைமலை மாதா அருள்தலம்' என்ற சர்ச்சைக் கட்டியுள்ளனர். மலையில் எங்கு பார்த்தாலும் சிலுவைகளை நட்டு முழு மலையையும் மெல்ல மெல்ல கைப்பற்றி விட்டனர். பைபிளில் வரும் காட்சிகள் சிமெண்ட் சிற்பங்களாக மலை உச்சி வரை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போதே `மரியே வாழ்க' என்ற வரிகள் பளிச்சென்று தெரிகிறது.

பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை ஆரம்பமாகும் இடத்தில், அலங்கார நுழைவுவாயில் ஒன்றை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், சர்ச் அலங்கார நுழைவு வாயிலுக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது அந்த பாதையிலும் சர்ச் நிர்வாகத்தினர் முட்களால் வேலி அமைத்து வாகனங்கள் செல்லமுடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி சில பக்தர்கள் தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். அந்த பாதையிலும் குப்பைகளைக் கொட்டி கிறிஸ்தவர்கள் நாசம் செய்து வருகின்றனர்

எப்படியாவது மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையை இல்லாமல் செய்துவிட்டால் முழு மலைத்தொடரையும்ஆக்கிரமித்து விடலாம் என்ற திட்டத்தில் சர்ச் நிர்வாகம் செயல்படுவதாக அச்சிறுபாக்கத்தில் வசிக்கும் இளைஞர்கள் நம்மிடம் கூறினார்கள்.

அச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அவலத்தையும் சர்ச் நிர்வாகத்தின் அட்டூழியங் களையும் கண்டு மனம் வெதும்பினார்கள். கோடிகளைக் கொட்டி எல்லோரையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவப் பாதிரிகளை, இந்தக் கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர்

1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ' என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர். சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் இந்த சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் சிலர் வந்து `இது வனத்துறைக்கு சொந்தமான இடம். நீங்கள் எதுவும் செய்யக்கூடாது' என்று தடுத்துவிட்டனர்.

`நாங்கள் எங்கள் கோயிலை சீரமைக்கக் கூடாது என்கிறீர்கள். ஆனால் இதே மலையில் கிறிஸ்தவர்கள் பிரம்மாண்டமான சர்ச் கட்டியுள்ளனரே? அதை ஏன் தடுக்கவில்லை' என்று சில துடிப்புள்ள இளைஞர்கள் கேட்டபோது, `அவர்கள் மலையை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளனர்' என்று வனத்துறையினர் கூறியதாக நம்மிடம் பேசிய சில உள்ளூர் இளைஞர்கள் கூறினார்கள். அதற்கு பிறகு மலையிலிருந்த மின்விளக்குகளையும், `சிவசிவ' மின்சார போர்டையும் இந்து விரோத சக்திகள் உடைத்து நொறுக்கிவிட்டனர். இதுபற்றி மலை உச்சிக்குச் சென்று தினமும் பூஜை செய்துவரும் ஆர்.பாலாஜி என்பவரும், ஊர்ப் பெரியவர்களும், அச்சிறுபாக்கம் காவல்துறையினர் முதல் தமிழக முதல்வரின் தனிபிரிவு வரை புகார் செய்துள்ளனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை.

கிறிஸ்தவர்கள் பிரம்மாண்டமாக அமைத்துள்ள மழைமலை மாதா அருள்தலம் என்ற சர்ச்சை, வேளாங்கண்ணிபோல் பிரபலப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக திருவண்ணாமலையில் நடப்பதுபோல் சர்ச்சை சுற்றி பௌர்ணமி தோறும் கிரிவலத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்துக்கள் தங்கள் கோயிலில் உள்ள வேப்பமரத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி மஞ்சள் கயிறுகளையும், தொட்டிலையும் கட்டுவதுபோல இங்கும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி இந்துக்களின் வழிபாட்டு முறையிலேயே சென்று அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, மதமாற்றி வருகின்றனர்.

பள்ளிக்கூடங்கள் மற்றும் சில சேவைப்பணிகள் பெயரிலும் அப்பட்டமாக அங்கு மதமாற்றம் நடந்து வருகிறது. ஒருவர் எழுதிய புத்தகத்தைத் தழுவி வேறு ஒருவர் புத்தகம் எழுதினாலோ அல்லது ஒரு திரைப்படத்தின் சாயலில் வேறு ஒரு திரைப்படம் வந்தாலோ அது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது அதற்கு தடையும் விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மதத்தின் வழிபாட்டு முறையை அப்படியே பின்பற்றி ஏமாற்றி மதமாற்றுபவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.

கிறிஸ்தவர்கள் அந்த மலைத்தொடரை அபகரிப்பதை பார்த்த முஸ்லிம்கள், தங்கள் பங்கிற்கு மலையின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். பசுபதீஸ்வரர் கோயிலுக்கு பின்பக்கம் சுமார் 2 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் உள்ள கன்னிமார் கோயிலுக்கு அருகில் முஸ்லிம்களும் இந்துக்களை போல எட்டு செங்கலை நட்டு குங்குமப் பொட்டிட்டு பிறைகொடியை பறக்கவிட்டு ஒரு பள்ளிவாசலை அமைக்க முயற்சித்துள்ளனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் இது முறியடிக்கப்பட்டுள்ளது.

வஜ்ரகிரி மலைத்தொடர் முழுவதும் பசுபதீஸ்வரருக்குச் சொந்தமானது. இப்போது கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டியுள்ள மலைக்குக் கீழே சித்திவிநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வழிபட்டுவிட்டுத்தான் பக்தர்கள் பசுபதீஸ்வரரை தரிசிக்க வருவார்கள்.

இப்போது இடையில் சர்ச் வந்து விட்டதால் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்போது 3 கோடி செலவில் ஜெபகோபுரம் ஒன்றைக் கட்டி வருகின்றனர். இதற்காக மலைப் பாறைகளை உடைத்து, அந்த ஜல்லிக் கற்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுத்து வஜ்ரகிரி மலையையும், இந்துக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. ஓட்டுக்காக சிறுபான்மையினரின் காலில் விழும் தமிழக அரசுக்கு, இந்த அப்பாவி இந்துக்களின் கூக்குரல் கேட்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version