- Ads -
Home சற்றுமுன் வருமானத்துக்கு மீறி சேர்த்த ஜெயலலிதா உள்ளிட்டோரின் 68 சொத்துகள் பறிமுதல் நடவடிக்கை!

வருமானத்துக்கு மீறி சேர்த்த ஜெயலலிதா உள்ளிட்டோரின் 68 சொத்துகள் பறிமுதல் நடவடிக்கை!

jeyalalitha
சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் 68ஐ பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் சொத்துகள் பறிமுதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன்பின்னர் தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரின் சொத்துகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதன்படி, இவர்கள் நால்வரும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கியதாக வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்துகள் அமைந்துள்ள, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அதில், அந்த சொத்துகளை ஆட்சியர்கள் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக அதிகாரி கூறியவை…

6 மாவட்டங்களிலும் இருக்கும் அந்த சொத்துகள் கோடிக்கணக்கில் மதிப்பு கொண்டவை.  அந்த சொத்துகளை அல்லது நிலங்களை அடையாளம் கண்டபிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைப்பார்கள். அதில், இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தம் என்று எழுதப்பட்டு இருக்கும். மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பான எந்த விதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று பதிவுத்துறைக்கு கடிதம் எழுதுவோம். அந்த வழக்கு தொடர்பாக 128 சொத்துகளை முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டு இருந்தாலும், 68 சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தச் சொத்துகளில் பெரும்பாலானவை சென்னை, காஞ்சீபுரம் மற்றும் சில மாவட்டங்களில் உள்ளன. இந்த சொத்துகளின் விற்பனை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழிகாட்டி மதிப்பு விலைக்கு இணையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள சந்தை மதிப்பு பலமடங்கு அதிகரித்துவிட்டது. இந்த சொத்துகளுக்கு தமிழக அரசுதான் இனி உரிமையாளர். அவற்றை அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அல்லது பொது ஏலத்துக்கு விடவும் அரசால் முடியும்.

இந்த வழக்கின் தொடக்க காலகட்டத்தில், அதாவது 1991-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் ரூ.2.01 கோடி மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே இருந்தன. அதற்குப் பிறகு, அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் சொத்துகள் வாங்கியதன் வளர்ச்சி திடீர் வேகமெடுத்தது. அரசு பொது ஊழியராக இருந்த ஜெயலலிதாவும், மற்றவர்களும் 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகளுக்குள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்தனர் என்பது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரின் குற்றச்சாட்டு. ஆனால் இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாக அவர்கள் ரூ.53.60 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாக கணக்கிட்டு தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடியும் தண்டனையாக விதிக்கப்பட்டது… என்றார் அவர்.

இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் விவரம்:-

1. ஜெ. பார்ம் அவுஸ்

2. ஜெ.எஸ். அவுசிங் டெவலப்மெண்ட்

3. ஜெ ரியல் எஸ்டேட்

4. ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்

5. ஜெ.எஸ். லீசிங் அண்டு மெயின்டனன்ஸ்

6. கிரீன் பார்ம் அவுஸ்

7. மெட்டல் கிங்

8. சூப்பர் டூப்பர் டி.வி. பிரைவெட் லிமிடட்

9. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட்

10. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட்

11. சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட்

12. லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட்.

13. ரிவர்வே அக்ரோ புரொடக்ட் பிரைவேட் லிமிடட்.

14. மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட்

15. இந்தோ தோகா கெமிகல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ்

16. ஏ.பி. அட்வடைசிங் சர்வீசஸ்

17. விக்னேஸ்வரா பில்டர்ஸ்.

18. லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்.

19. கோபால் பிரமோட்டர்ஸ்.

20. சக்தி கன்ஸ்ட்ரக்சன்.

21. நமச்சிவாய அவுசிங் டெவலப்மென்ட்.

22. அய்யப்பா பிராபர்டிஸ் டெவலப்மென்ட்ஸ்

23. சீ என்கிளேவ்

24. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்

25. ஓசானிக் கன்ஸ்ட்ரக்சன்.

26. கிரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ்

27. மார்பில் மார்வெல்ஸ்

28. வினோத் வீடியோ விஷன்

29. பேக்ஸ் யுனிவெர்சல்

30. பிரஸ் மஷ்ரூம்ஸ்

31. கோடநாடு டீ எஸ்டேட்

இந்த நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட நிலங்கள், சொகுசு பஸ், கைக்கடிகாரங்கள், தங்க-வைர நகைகள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

ஜெயலலிதா பெயரில் 1992-ம் ஆண்டு மயிலாப்பூரில் வாங்கப்பட்ட 1,407 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம்,

சசிகலா பெயரில் மன்னார்குடியில் 25 ஆயிரத்து 35 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம்,

திருவள்ளூர் மாவட்டம், வேலகாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் நிலம்,

பையனூர் கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம்,

ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேசன் நிறுவனத்தின் பெயரில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் கட்டிடத்துடன் கூடிய 4,664 சதுர அடி நிலம்,

ஆலந்தூர், அடையார், சைதாப்பேட்டையில் 55 கிரவுண்ட் நிலம்,

மயிலாப்பூர் லஸ் சர்ச் ரோட்டில் 10 கிரவுண்ட் நிலம்,

சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்ட் நிலம், ஆலத்தூரில் 0.63 ஏக்கர் நிலம், கிழக்கு அபிராமபுரத்தில் 3,400 சதுர அடி நிலம் ஆகியவை வாங்கப்பட்டு உள்ளன.

இளவரசிக்கு நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம், சிறுதாவூரில் 22 ஏக்கர் நிலம், மயிலாப்பூர், லஸ் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் நிலம்,

இவரது மகன் விவேக்கிற்கு சிறுதாவூரில் 1½ ஏக்கர் நிலம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16 ஏக்கர் நிலம்,

வி.என்.சுதாகரனுக்கு சிறுதாவூரில் 29 ஏக்கர் நிலம், சோழிங்கநல்லூரில் 16 சென்ட் நிலம் ஆகியவை உள்ளன.

இதுதவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயரில் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் தேயிலை தொழிற்சாலையுடன் கூடிய 900 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 3 பேரும் பங்குதாரர்களாக உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட், சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட், லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட், ரிவர்வே அக்ரோ புரொடக் பிரைவேட் லிமிடட், மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

அதேபோல, போயஸ் கார்டனில் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய பல பெட்டிகள் கொண்ட நகைகள் தற்போது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய 191.47 கிராம் எடைகொண்ட தங்கப்படகு, ஒரு கட்சி தொண்டர் கொடுத்த 191.62 கிராம் எடை கொண்ட தங்கத்தால் ஆன செங்கோல் உள்பட பல ஆயிரம் கிராம்கள் தங்க நகைகள், வைர மோதிரம், வளையல், கம்மல், தங்க வாள், தங்க முலாம் பூசப்பட்ட கைக்கடிகாரங்கள் உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version