- Ads -
Home சற்றுமுன் மேகதாது அணை திட்டத்தை தடுக்கக்  கோரி மார்ச் 23ல் பா.ம.க. போராட்டம்

மேகதாது அணை திட்டத்தை தடுக்கக்  கோரி மார்ச் 23ல் பா.ம.க. போராட்டம்

சென்னை:
மேகதாது அணை திட்டத்தை தடுக்கக் கோரி மார்ச் 23ல் பா.ம.க. போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சி இன்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் காற்றில் பறக்கவிட்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகளை கடந்த நவம்பர் மாதத்தில் கோரிய கர்நாடக அரசு, இப்போது ஒப்பந்தப்புள்ளி தயாரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ததுடன், அதற்காக பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு தீவிரப் படுத்தி வரும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  நாடாளுமன்ற மக்களவையில் 37 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அ.தி.மு.க. இந்த பிரச்சினை குறித்து தனியாக தீர்மானம் கொண்டு வரவோ அல்லது தனி விவாதத்திற்கு முன்மொழியவோ முயற்சி மேற்கொள்ளவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அண்மையில் மக்களவையில் இப்பிரச்சினை குறித்து பேசிய போது, அவரை பேசவிடாமல் தடுக்கும் நோக்குடன் கர்நாடக மக்களவை உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அன்புமணி இராமதாசு அவரது கருத்துக்களைப் பதிவு செய்தார். அப்போது, தமிழக நலன் சார்ந்த இந்தப் பிரச்சினையில் அவருக்காக குரல் கொடுக்கக்கூட அ.தி.மு.க. உறுப்பினர்கள் முன்வரவில்லை. இப்பிரச்சினையில் அதிமுகவின் அக்கறை இவ்வளவு தான்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் பாசனத்திற்காக காவிரி நீரை நம்பியுள்ள 14 மாவட்டங்கள் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, போதிய நீர் ஆதாரம் இல்லாத மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து தான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. புதிய அணை கட்டி முடிக்கப்பட்டால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும். எனவே, தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், எதிர்கால அரசியல் கணக்குகளை கருத்தில் கொண்டு இப்பிரச்சினையில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் விரைவில்  அமைக்கப்படும் என்று மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி அறிவித்த நிலையில், அதற்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த அறிவிப்பை மத்திய அரசு கிடப்பில் போட்டு விட்டது.
தமிழக அரசும் இந்த பிரச்சினையில் பொறுப்பில்லாத அணுகுமுறையைத் தான் கடைபிடித்து வருகிறது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 4 மாதங்கள் ஆகியும் அதை விசாரணைக்குக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் தருவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் எடுக்கப்படும் முடிவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து தெரியப்படுத்த  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் ஏற்கவில்லை.
இத்தகைய சூழலில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள  புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் வரும் 23 ஆம் தேதி திங்கட்கிழமை  தொடர் முழக்கப் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது. சென்னையில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமை வகிப்பார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையிலும், அரியலூரில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ. குரு தலைமையிலும் போராட்டம் நடைபெறும். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையிலும் அறப்போராட்டம் நடைபெறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version