- Ads -
Home சற்றுமுன் ஓட்டுக்கு பணம்- தேர்தல் ஆணையம் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது!: ராமதாஸ்

ஓட்டுக்கு பணம்- தேர்தல் ஆணையம் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது!: ராமதாஸ்

சென்னை: ஓட்டுக்கு பணம் வழங்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் சீர்திருத்தம் குறித்து நேர்காணல் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா, தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதும், வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதும் உண்மை தான் என்று கூறியிருக்கிறார். ஆனால், இதை சட்டத்தால் திருத்த முடியாது என்று அவர் கைவிரித்திருக்கிறார். இந்தியத் தேர்தல் முறையை பணபலமும், வாக்குக்கு பணம் தரும் கலாச்சாரமும் எந்த அளவுக்கு சீரழித்திருக்கின்றன என்பது குறித்த எச்.எஸ். பிரம்மாவின் புரிதல் பாராட்டத்தக்கது. ‘‘இன்றைய சூழலில் தேர்தலில் பணபலம் முக்கியப் பங்காற்றுகிறது. இக்கால தேர்தல்கள் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் மட்டும் எதிர்கொள்ளப்படுவதில்லை; இதில் பணம், வணிகம் ஆகியவையும் சம்பந்தப் பட்டுள்ளன. பணம் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது’’ என்ற உண்மையை பிரம்மா பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறார். அதேநேரத்தில், இதற்கான சரியானத் தீர்வை அவரால் சொல்ல முடியவில்லை.‘‘தேர்தலில் பணபலத்தைத் தடுப்பதற்காக எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. சட்டம் எதையும் சாதிக்கப் போவதில்லை. மக்கள் தங்களின் நலனுக்காக நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவையெல்லாம் ஒரேநாளில் சாத்தியமாகி விடாது’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஜனநாயகத்தை பீடித்துள்ள மிக மோசமான நோயை துல்லியமாக கண்டு பிடித்துள்ள பிரம்மா, அதை குணப்படுத்துவதற்கான சரியான சிகிச்சையை அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது; ஆணையரின் இந்த நிலைப்பாடு கவலையளிக்கிறது. பண பலத்தைத் தடுப்பதற்கான கருவிகள் ஆணையத்திடம் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் கூறும் ஆணையர், இன்னொரு சந்தர்ப்பத்தில் பண பலத்தை தடுக்க முடியாது என்று கூறுவது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலாகும். இவ்விஷயத்தில் மக்கள் தாங்களாகத் தான் திருந்த வேண்டும் என்று மக்கள் மீது பழியை போடுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மக்கள் சரியானவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் தான் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காக ஊழல் மூலம் தாங்கள் சேர்த்த பணத்தில் ஒரு பகுதியை வாக்காளர்களுக்கு வீசி அவர்களைக் கெடுத்து விட்டனர். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் பணத்துக்கு அடிமையாக்கிய சிறுமை தமிழகத்தை ஆண்ட கட்சியையும், ஆளும் கட்சியையும் தான் சேரும். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தான் இந்த கலாச்சாரம் தழைத்தோங்கியிருக்கிறது. வாக்குகளுக்கு பொதுத் தேர்தல் என்றால் ஒரு தொகை, இடைத் தேர்தல் என்றால் ஒரு தொகை என வாக்காளர்களுக்கு வாரி இறைத்து அவர்களை இந்த மோசமான கலாச்சாரத்திற்கு அடிமையாக்கும் பணியை ஊழல் கட்சிகள் போட்டிப் போட்டு செய்து வரும் வேளையில், மக்கள் அவர்களாகவே மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதும், அலைகள் ஓய்ந்த பின் கடலில் இறங்கி குளிக்கலாம் என காத்திருப்பதும் ஒன்றுதான். தமிழ்நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களின் முடிவையும் பணம் தான் தீர்மானித்தது. 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் வாக்குக்கு பணம் தருவதற்காகவே ஆளுங்கட்சியால் ரூ. 1600 கோடி செலவிடப்பட்டதாக ஒரு கணக்கு கூறுகிறது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பண வினியோகத்திற்கு உதவி செய்யத் தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததே தவிர, பணபலத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி, ‘‘வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது உண்மை தான்; ஆனால், அதை எங்களால் தடுக்க முடியவில்லை’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அவலமும் நடந்தது. தேர்தலில் பணபலம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியும்போது இருக்கும் சட்டத்தை தீவிரமாக பயன்படுத்தியும், தேவையான புதிய சட்டத்தைக் கொண்டு வந்தும் நடவடிக்கை எடுப்பது தான் ஆணையத்தின் கடமையாகும். தேர்தல் நடைபெறும் தொகுதிக்குட்பட்ட எந்த இடத்தில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டாலும் அந்தத் தொகுதியின் தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றது தெரியவந்தால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, சட்டத்தின் இந்த பிரிவுகளை பயன்படுத்தியும், தேவையான புதிய சட்டங்களைக் கொண்டு வந்தும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு ஆணையம் முடிவு கட்ட வேண்டும். – என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version