- Ads -
Home சற்றுமுன் ராஜபட்சவுடன் கைகுலுக்கி விருந்துண்டு பரிசுப் பொருள் வாங்கி வந்தவர்கள் வீராவேசமாகப் பேசுவது வியப்பு: தமிழிசை

ராஜபட்சவுடன் கைகுலுக்கி விருந்துண்டு பரிசுப் பொருள் வாங்கி வந்தவர்கள் வீராவேசமாகப் பேசுவது வியப்பு: தமிழிசை

tamilisai-soundararajan சென்னை: ஏதோ இலங்கைக்கு போனோம் வந்தோம் என்று இல்லாமல், சொந்த உறவுகள் கொல்லப்பட்டதைக் கண்டிக்காமல் ராஜபட்சவுடன் கை குலுக்கி விட்டு விருந்து சாப்பிட்டு விட்டு பரிசுப் பொருள்களை வாங்கி வந்து இன்று வீராவேசம் பேசிக் கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது போல் இருக்கிறது இன்றைய சுஷ்மாவின் பயணமும் நாளைய மோடியின் பயணமும் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்று மோடி அவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை செல்லும் இந்திய பிரதமராக சுற்றுப்பயணம் துவங்க உள்ளார்கள். இலங்கை நாடு என்பதனை தமிழர்களிடம் இருந்து பிரித்து பார்க்க இயலாத ஒன்று. தான் செல்வதற்கு முன்னால் முன்னோட்டமாக வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை அனுப்பி அங்குள்ள பிரச்சனைகளை, குறிப்பாக தமிழர் மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தப்பயணத்தை மேற்கொள்கிறார் என்பது தெளிவு. ஏதோ இலங்கைக்கு போனோம் வந்தோம் என்று இல்லாமல், சொந்த உறவுகள் கொல்லப்பட்டதை கண்டிக்காமல் ராஜபக்சேவுடன் கை குலுக்கி விட்டு விருந்து சாப்பிட்டு விட்டு பரிசுப் பொருள்களை வாங்கி வந்து இன்று வீராவேசம் பேசி கொண்டு இருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது போல் இருக்கிறது இன்றைய சுஷ்மாவின் பயணமும் நாளைய மோடியின் பயணமும் திரு. ரணில் விக்ரமசிங்;கே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம் என்று சொன்னதற்கு பதிலடியாக, நேரடியாக அவர்கள் மண்ணில் நின்று கொண்டே சுஷ்மா அவர்கள் நீங்கள் எங்கள் மீனவர்களை இப்படி சட்ட திட்டத்திற்கு உட்பட்டு பார்க்க கூடாது, மனிதாபிமானத்துடன்தான் அணுக வேண்டும் என்று ரணில் முகத்தில் அறைந்தார் போல் நேரில் கேட்டுவிட்டு, இன்று இலங்கை பிரதமர் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் என்ற தகவலையும் பாராளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். இலங்கையில் நம் தமிழ் சொந்தங்கள் சுட்டுக் கொல்லப்படும்போது முந்தைய ஆட்சியில் சும்மா இருந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இங்கு ஆட்சியிலிருந்த தி.மு.க மற்றும் கூட்டணி அதனை அப்போது தடுக்க எந்தவித தீவிர முயற்சி எடுக்காமல் இருந்து விட்டு மோடியை எதிர்த்து விமர்சனம் செய்வது வியப்பாக உள்ளது. சுடுவேன் என்று சொன்னவுடனே வெகுண்டெழுந்து கண்டனத்தை சொல்லி மன்னிப்பு கேட்க வைத்த சுஷ்மா அவர்களும், மோடி அவர்களும் தமிழர் மீது அக்கறை உள்ளவர்களா? இனப்படுகொலையின் போது தமிழர்களை சுடும்போது சும்மா இருந்துவிட்டு சுடுவேன் என்று இலங்கை பிரதமரை வாய்வார்த்தைகளால் கண்டித்து கொண்டிருக்கும் இவர்கள் தமிழர்மீது அக்கறை உள்ளவர்களா? என்பதனை இந்திய தமிழரும் இலங்கை தமிழரும் உணர்ந்து கொள்வார்கள். இலங்கையில் உச்ச கட்ட போரில் நம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கூட அதனை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காத திரு. மன்மோகன்சிங்கை ஏன் திரு. கலைஞர், திரு. வாசன், திரு. இளங்கோவன் கண்டிக்கவில்லை? தயவு செய்து இலங்கை பிரச்சனையை அரசியல் லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, அவசியமாக நம் தமிழ் மக்களுக்கும் மீனவர்களுக்கும் விரைவில் கிடைக்க காத்திருக்கும் நல்ல தீர்வை தடுத்து விடாதீர்கள். டெல்லி வந்த இலங்கை எம்பிகளிடம் 2 மணி நேரம் செலவழித்து நேரடியாக உரையாடியிருக்கிறார் பிரதமர் மோடி.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்படி நேரடி நிகழ்வும் முயற்சியும் ஏதாவது நடந்ததா? இப்போது கூட சுஷ்மா அவர்கள், பல தமிழ் – இஸ்லாமிய அமைப்பு தலைவர்களை சந்தித்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்படி ஏதாவது நடந்ததா? பிடிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ் மீனவர்கள் இன்று திரு. மோடியால் விடுதலை பெற்றார்களே! இதுவே நம் தமிழர்களின் வாழ்வுக்கு ஒரு விடை கிடைக்கும் என்பதற்கு நம்பிக்கை ஒளி அல்லவா? வழக்கு முடிந்து மீனவர்களின் படகுகளை மீட்க சென்ற தமிழக குழுவிற்கு அத்தனை உதவிகளையும் மத்திய அரசு செய்திருக்கிறது. மீனவர்களின் பிரச்சனையை திரு. மோடி அவர்களும், திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களும் மிகச் சரியாக கையாண்டு வருகிறார்கள். திரு.மோடியின் இலங்கை பயணம் தமிழர் வாழ்வில் நிச்சயம் ஒளியேற்றும். அதற்கான ஒளிக்கீற்று நம்பிக்கையுடன் புலப்படுகிறது. பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்ற திரு. இளங்கோவன் போன்றவர்களின் வாதம் தேவையற்றது. திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் மீனவர்களைக் காக்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் மோடி அரசு பொறுப்பேற்றபின் எந்த மீனவரும் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றும், மீனவர்களின் பேச்சுவார்த்தை தங்காலிகமாகத் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் திரு. மோடி அவர்களின் பயணத்திற்கு பின்பு நிச்சயம் பேச்சுவார்தை நடைபெறும் என்றும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமர் அங்கு செல்வது இலங்கைத் தமிழருக்கும், இந்திய மீனவர்களுக்கும் ஓர் நல்வாழ்க்கையை மீட்டுத்தரும் என்று சொன்னதோடு, இலங்கை சிறையில் ஒரு மீனவர் கூட இல்லை, படகுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆக இவ்வளவு திட்டங்களை மீனவர்களுக்குக்காக தீட்டிக் கொண்டிருக்கும் திரு. நரேந்திரமோடி அவர்கள் மீனவர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிறார் என்பதை மீனவச் சகோதரர்கள் அறிந்திருக்கிறார்கள். அறியாதது போல் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்படி நெடு நாளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மீனவர் பிரச்சனைக்கும் – இருண்ட இலங்கை தமிழர் வாழ்வில் அரசியல் அதிகாரத்துடன் கூடிய ஒரு சுதந்திரமான நல்வாழ்க்கை அமைய திரு. மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நம் ஆதரவு தெரிவிக்க வேண்டுமே அன்றி பிழைப்பதற்காக அரசியல் பேசி அங்குள்ள நம் தமிழர்களின் பிழைப்பை கெடுத்துவிடாதீர்கள். இலங்கை தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு என்பதே நம் அனைவரின் ஒருமித்த கருத்தாக இருக்க வேண்டுமே தவிர, இதையும் அரசியலாக்கி கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளை கண்டு வருத்தமே!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version