- Ads -
Home சற்றுமுன் இராமநாதபுரம்: அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்!

இராமநாதபுரம்: அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்!

sivaperuman

ராமநாதபுரத்தில் கே. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் படித்த சிவபெருமான், தற்போது அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பதற்காகச் செல்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிக்கு அருகே உள்ள சிறிய கிராமம் நரசிங்கக்கூட்டம். அந்த ஊரில் 50, 60 வீடுகள்தான் இருக்கும். அந்த கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. அருகில் உள்ள கடலாடிக்குச் செல்ல வேண்டுமானால் 1.5 கிலோ மீட்டர் நடந்துதான் போக வேண்டும்.

ஊரில் பொருட்களை வாங்க பெட்டி கடைதான் உள்ளது. மருத்துவமனையும் கிடையாது.

பெரிய நகரங்களைப் போல ஒளிவீசும் விளக்குகள் இல்லாத அந்த ஊரில் வீட்டுக்கு வெளியே கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு, இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவது தெரியும். பால்வீதி கூட கண்ணுக்குத் தெரியும்.

சிறுவயதிலிருந்தே இப்படிப் பார்த்து ரசித்த அனுபவம்தான் எம். சிவபெருமானுக்கு விண்வெளி ஆராய்ச்சி மீது தீராத ஆர்வம் ஏற்படச் செய்துவிட்டது.

மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த சிவபெருமான், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும்கூட தனது விடாமுயற்சியால் சென்னை குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்து, பின்னர் கான்பூர் ஐஐடியில் எம்.டெக் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படித்து விட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பிஎச்டி படிக்கச் செல்கிறார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கே. நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இருந்தபோது, சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக ஏற்படுத்திய எலைட் ஸ்கூலில் பிளஸ் டூ படித்த மாணவர் இவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

குறிப்பாக,வாரந்தோறும் அப்போதைய ஆட்சியர் நந்தகுமார் நேரில் வந்து ஊக்கமளித்தது சிவபெருமானுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது.

ஆசிரியர்களின் ஊக்கத்தினால் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1086 மதிப்பெண்கள் பெற்றார். இயற்பியலில் 200, கணிதத்தில் 199, வேதியியலில் 198, உயிரியலில் 192 என இவரின் திறமையால் பொறியியல் கல்வியில் சேர 199 கட்ஆப் மதிப்பெண் பெற்றார்.

இதன்படி குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி.யில் பி.டெக். ஏரோநாட்டிகல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கவுன்சிலிங்கிற்காக இந்த கல்லூரிக்கு செல்ல வாழ்க்கையில் முதல் ரெயில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது இவரை கலெக்டரின் உதவியாளர் கதிரவன், கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணனும் ரெயிலில் அழைத்து சென்றபோது நம் கிராமத்தை தவிர வளர்ந்த பெரிய பெரிய விசயங்கள் இந்த உலகில் நிறைய உள்ளது என்பதை முதல் ரெயில் பயணத்தில் சிவபெருமான் கண்ணால் கண்டு வியந்தார்.

ஒருவழியாக கல்லூரியில் சேர்ந்தாகிவிட்ட நிலையில், கல்வி கட்டணத்தினை சில நல்இதயங்கள் உதவியதால் கட்டணத்தினை கட்டி பயின்றார். தமிழ்வழியில் பயின்றதால் ஆங்கில வழியில் கல்விகற்க சிவபெருமான் சிரமப்பட்டார்.

அங்கு ஆராய்ச்சியில் கொண்ட ஆர்வத்தினால் சிவபெருமான் உருவாக்கிய போர் விமானங்கள் மோதலை தடுக்கும் ஆராய்ச்சி திட்டத்திற்கு பல்கலைக்கழகத்தின் நிதி உதவி கிடைத்தது.

பி.டெக் முடித்த நிலையில் எம்.டெக் படிக்க பலமுறை முயன்று தோல்வி ஏற்பட்ட நிலையிலும் விடாது முயன்று கான்பூர் ஐ.ஐ.டி.யில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் கல்வியை உதவித்தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது.

அங்கு பேராசிரியர் மங்கல் கோத்தாரி விண்வெளித்துறை ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்கபடுத்தினார். இவ்வாறு எம்.டெக் முடித்ததும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய ஆதரவுடன் இயங்கும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.எச்.டி. கல்வி படிக்க விரும்பி இருக்கிறார்.

இவரின் ஆர்வத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அங்கு இவர் பி.எச்டி. படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்வெளி ஆய்வு துறையில் சிவபெருமான் நுழைந்துள்ளார்.

அதாவது, சிறுகோள்களைச் சுற்றி செயற்கைகோள்களை எப்படி சிறப்பாக இயங்க செய்ய முடியும் என்று தனது ஆய்வினை சிவபெருமான் மேற்கொள்வதோடு கிரகங்கள் தொடர்பான தனது ஆய்வினை தொடர உள்ளார்.

ஆரம்பம் முதல் இன்றுவரை ஆட்சியர் நந்தகுமார் உதவியாக இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஏழை மாணவரை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பி உதவி செய்துள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி படித்து வரும் சிவபெருமான் விசா வந்துவிட்டால் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார்.

தனக்கு உதவிய அப்போதைய ஆட்சியர் நந்தகுமார் மட்டுமல்லாது ஆதரவளித்த ஆசிரியர்கள் மற்றும் நல் உள்ளங்களுக்கு சிவபெருமான் கண்ணீர் மல்க நன்றி கூறுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version