- Ads -
Home சற்றுமுன் காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்!

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்!

kantchi

காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரியதாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவனைப்பாடி இடக்கண் பெற்ற பெருமைக்குரியதும், பழைமை வாய்ந்தது காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில். இங்கு பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து கோயில் சிவனடியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றினார்கள்.

ஏலவார்குழலி அம்மனும், ஏகாம்பரநாதரும் அலங்கார மண்டபத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகே வந்ததும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமியும்,அம்மனும் பவளக்கால் சப்பரத்தில் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தனர்.

கொடியேற்று விழாவில் தொண்டை மண்டல ஆதீனம் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அறநிலையத் துறை உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு, கோயில் செயல் அலுவலர் ந.ஜெயராமன், கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆய்வாளர் பிரித்திகா, இணை ஆணையா் அலுவலக கண்காணிப்பாளர் ராஜா, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலெட்சுமி யுவராஜ் மற்றும் சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாலையில் சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்தனர். விழாவையொட்டி தினசரி காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வரவுள்ளனர்.

முக்கிய நிகழ்வாக வரும் 13- ஆம் தேதி 63 நாயன்மார்கள் திருக்கூட்ட வீதியுலாவும், இரவு வெள்ளித்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. மறுநாள் 14-ஆம் தேதி திங்கள்கிழமை ஏலவார்குழலியும், ஏகாம்பரநாதரும் தேரில் பவனி வரும் நிகழ்வு நடைபெறும்.

தேரோட்ட ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தேரோட்ட நாளன்று இரவு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர நாளான வரும் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 20-ஆம் தேதி தீர்த்தவாரியும், 21- ஆம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

தினசரி இரவு சைவ சமயச் சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சிகள், தேவார பாராயணம், நாகஸ்வரக் கச்சேரிகள் ஆகியனவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version