- Ads -
Home சற்றுமுன் அட்சயதிருதியை: இத்தனை விஷயம் இருக்கா..?

அட்சயதிருதியை: இத்தனை விஷயம் இருக்கா..?

annapoorni

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள்.

அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, “தாயே பசி என்றார் ..

அதை செவிக்கொண்டு அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாறினார்.

சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் உட்கொண்டே இருந்தார்.

வஸ்துக்கள் அனைத்தும் பூர்த்தியாக, அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை.

உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்தித்து அழைத்தார்.

மஹா விஷ்ணுவாகிய பிந்து மாதவன், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார்.

அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றால், அங்கு அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது.

அன்னபூரணி தேவி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திருவாயால் உட்கொண்டார்.

உடனடியாக, சங்கல்ப மாத்திரத்தால் (பகவத் அனுக்ரகஹத்தால்) அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார்.

மஹா விஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார்.

தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டா யத்தினால், சிவ யோகியும் தமக்கு திருப்தி என்று எழுந்து விட்டார்.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாகவே காட்சியளித்தார்.

“உமைக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே தாம் இங்கு வந்தோம்”, என கூறினார்.

உடனே, மஹா விஷ்ணு,”இன்றைய தினம் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்”, என்று ஆசிர்வதித்தார்.

அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பக்ஷ திரிதியை நாம் அக்ஷய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்..

எனவே அன்றைய தினம் பொருட்கள் மேலும் சேர பொருட்கள் வாங்குங்கள் .

ஆனால் புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யுங்கள் .

வருடத்தில் மூன்று நாட்களுக்கு நல்ல நேரம், தோஷம் போன்ற எவையும் பார்க்க தேவையில்லை.

அது போன்ற பொன்னான நாட்கள் அவை. உகாதி, அக்ஷய திருதியை விஜய தசமி தான்

ரோகினி நட்சத்திரம் திருதியை வழிபாடு செய்ய, தானங்கள் செய்ய, உங்களுக்கு தெரிந்த கலையை, கல்வியை மற்றவருக்கு போதிக்க, மஹாலக்ஷ்மி அல்லது குபேர பூஜை அல்லது லட்சுமி நாராயண பூஜை மேற்கண்ட நேரத்தில் செய்ய மிக சிறப்பு.

மேலும் இந்த நாளில் புனித நீரில் நீராடுவது மிக சிறப்பான ஒன்று. முடியாதவர்கள், கையளவு கல் உப்பை நீரில் கரைத்து, கிழக்கு முகம் பார்த்து கங்கையை மனதில் தியானித்து குளிக்கலாம். அசைவம் உட்பட, தோல் பொருட்கள் தவிர்ப்பதும் மிக அவசியம்.

இந்நாளில், எந்த அளவு தானம் செய்கிறீர்களோ, அந்த அளவு புண்ணிய பலனும் ஆத்மார்த்த திருப்தியும் வந்து சேரும். வெயிலில் வாடுவோருக்கு , வறியோருக்கு குடை, விசிறி, செருப்பு போன்றவை தானம் செய்ய, வீடு பேறு வந்தடையும். நீர் மோர், நீர் போன்றவை தானம் தர வற்றாத வாழ்வமையும். அன்னம், பணம் போன்றவை தானம் செய்ய செல்வ செழிப்பு மிக்க வாழ்வமையும்.

மேலும், திருமண தடை அல்லது திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வருவோர் இந்நாளில் சுமங்கலிப்பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும் தங்களால் முடிந்த புதிய ஆடை, மஞ்சள், வளையல், தாம்பூலம், மஞ்சள் லட்டு, தேங்காய் போன்றவையில் எவை முடிகிறதோ, எவ்வளவு நபருக்கு தங்கள் வசதிக்குட்பட்டு செய்ய முடியுமோ அதை தானம் செய்யலாம்.

முதியவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வது மிக பெரும் நல்வாழ்வு அமைய வைக்கும். விரும்பிய தெய்வ உருவ படங்கள், பொருட்கள் வைத்து வழிபாட்டினை செய்வதும் சிறப்பு தரும்.

அக்ஷய திருதியை பற்றி 60 தகவல்கள்

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும் பெருமைகளையும்

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் “பவிஷ்யோத்தர-புராணம்” விரிவாக விவரிக்கிறது.

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு “பொன்னன்” என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

அரிதான வேலையை சந்திப்பதை “அலப்ய யோகம்” என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு “அட்சதை” என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு “அட்சய திருதியை” எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்” என்றழைக்கிறார்கள்.

ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.

மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு “அட்சய திருதியை” நாளில் செய்யப்படுகிறது.

மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.

ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை” நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.

அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.

அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.

அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

  1. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
  2. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
  3. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
  4. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை “தர்மகடம்” எனப்போற்றுவர்.
  5. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
  6. அட்சய திருதியை நாளில் “வசந்த் மாதவாய நம” என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.
  7. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
  8. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
  9. ஞாயிற்றுக்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் சக்திகளை தரும்.
  10. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
  11. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
  12. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

அட்சய என்ற சொல்லின் மகிமையை உணர்த்திய மகாபாரதம்

மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் உரிமைகளையும் செல்வங்களையும் இழந்து காட்டில் வாசம் செய்தபோது உணவுக்கு என்ன செய்வது? என்று அவர்களுக்கு தெரியவில்லை. அத்துடன் தங்களின் பசியை போல காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் தங்களை தேடி உணவு கேட்டு வரும்போது அவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லக்கூடாதே என்று சிந்தித்த துரோபதை, சூரிய பகவானை நினைத்து வணங்கி அட்சய பாத்திரத்தை பெற்றாள்.

அந்த நாள்தான் அட்சய தினம். அட்சய பாத்திரம் கிடைத்த பிறகு, உணவு கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தாராளமாக உணவு படைத்தாள். இதன் புண்ணியத்தால் பாண்டவர்களுக்கும் – கௌரவர்களுக்கும் நடந்த பாரத யுத்தத்தில் துரோபதி செய்த தர்மம், பாண்டவர்களின் தலையை காத்தது. இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்றார்கள்.

தர்மம் செய்தாலே மோசமான கர்மவினைகள் விலகும், புண்ணியங்கள் சேரும் என்பதற்கு மகாபாரதம் ஒரு சாட்சி. தோஷங்கள் நீங்குவதற்கு அட்சயம் ஒரு அட்சாரம்.

கர்ணன் பல தானங்கள் செய்தாலும் அன்னதானம் செய்யாததால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஆகவே அன்னதானம் செய்தாலே சொர்க்கத்தில் மட்டுமல்ல, இந்த பூலோக வாழ்க்கையும் சொர்கலோக வாழ்க்கையாக அமையும்.

ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார்

விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர்.

அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள்.

நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.

50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது.

சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.

கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது.

சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.

இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள். அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம்தான் கங்கோத்ரி. கங்கையின் வலது கரையில் கங்கோத்ரிக்கான ஒரு கோயில் இருக்கிறது. 20 அடி உயரத்தில் உள்ள இந்த அழகிய கோயில் வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

அட்சய திருதியை அன்று இந்த கோயில் திறக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பிறகு கோயில் மூடப்படும். கடுங்குளிர் காலத்தில் பனி உறைந்து கிடக்கும்போது இந்த திருவுருவச் சிலை 25 கி.மீ. கீழேயுள்ள ‘முகிமடம்’ என்ற கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில், ‘முக்கூடல்’ எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் கூடும் துறையில், ஏராளமான பக்தர்கள் நீராடுகிறார்கள். அட்சய திருதியை அன்று இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை

தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

பெண்கள் சொல்ல வேண்டிய பாஞ்சாலி அபய மந்திரம்!

சித்திரை மாத வளர்பிறையின் மூன்றாம்நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்ததுடன், தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.

துர்க்குணம் கொண்ட துரியோதனன், பாஞ்சாலியின் துகிலுரிய உத்தரவிட்டான். மானம் காக்கவேண்டி பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள்கூட அவளுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் தெய்வமே துணை என

சங்க சக்ர கதாபாணே
த்வாரகா நிலயாச்யுத!
கோவிந்த! புண்டரீகாக்ஷ!
ரக்ஷமாம் சரணாகதம்

எனக் கதறினாள். ஸ்ரீகண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது.
இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.

அக்‌ஷய திரிதியை நன்னாளன்று நிறைய புண்ய கர்மங்கள் மேற்கொள்ளலாம். ஜபம், தவம், தானம், ஸ்நானம் போன்றவை முக்கியமான புண்ய கர்மங்கள் ஆகும்.

ஜபம் – இறைவனின் திருநாமத்தை ஜபம்செய்தல்

தவம் – இறைவனை மனத்தில் நிலைநிறுத்தி, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து விரதமிருத்தல்

தானம் – தேவைபடுவோருக்கு உணவு, உடை, பொருள், புத்தகம் போன்றவற்றை தருதல்

ஸ்நானம் – தீர்த்த தலங்களுக்கு யாத்திரை சென்று புனித குளியல் மேற்கொள்தல் !

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version