- Ads -
Home சற்றுமுன் சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலை மத்திய மந்திரி நேரில் ஆய்வு ..

சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலை மத்திய மந்திரி நேரில் ஆய்வு ..

FB IMG 1660296857768

சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரெயிலை மத்திய மந்திரி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டதால் சென்னை ஐ.சி.எப்-ல் மட்டும் 102 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளன.

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.-ல் உலக புகழ் பெற்ற ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ‘ரெயில்-18’ என்ற அதிநவீன ரெயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் விரைவு ரெயில்’ என்று பெயரிடப்பட்டது. இந்த ரெயில் புதுடெல்லி-வாரணாசி இடையேயும், புதுடெல்லி-காத்ரா இடையேயும் இயக்கப்படுகிறது. சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாகவும் இருப்பதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பயணிகள் வரவேற்பு காரணமாக கூடுதலாக வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை ஐ.சி.எப்., கபுர் தலா ரெயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் சென்னை ஐ.சி.எப்-ல் மட்டும் 102 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக ஒரு வந்தே பாரத் ரெயில் தற்போது தயாராகி உள்ளது. இந்த ரெயில் இயக்கப்பட்டு விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரெயிலை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் காரில் ஐ.சி.எப். புறப்பட்டு சென்றார். அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரெயிலின் அடிப்புற பகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும்,ரெயிலில் உள்ள நவீன அம்சங்களை பார்வையிட்டு அதன் வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் லக்னோவில் உள்ள ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகளும் இந்த வந்தே பாரத் ரெயிலை ஆய்வு செய்கிறார்கள். அதன்பிறகு இந்த ரெயில், ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:- ஐ.சி.எப்.-ல் 16 பெட்டிகளை கொண்ட தலா 2 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. அதில் ஒரு ரெயில் தயாராகி விட்டது. இந்த ரெயிலில் 1000 பேர் பயணம் செய்யலாம்.

இந்த ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. சோதனை ஓட்டம் முடி வடைந்ததும் முதல் வந்தே பாரத் ரெயில் இந்த மாதம் இறுதியில் ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரெயில் நவீன இருக்கை வசதிகளுடன் புதிய தொழில் நுட்ப மேம்பாடு கொண்டது. ஒரு ரெயிலை தயாரிக்க சுமார் ரூ.110 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த ரெயிலை தென்னிந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெயில் சென்னை-பெங்களூர் இடையே இயக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பின் முன்னேற்றத்தை ரெயில்வே அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் 75 ரெயில்களை தயாரிப்பதற்கான திட்டமும் உள்ளது. இந்த ரெயில் 160 கி.மீ வேகத்தில் இயங்கும். மேலும் 180 கி.மீ வேகத்தில் இயங்கவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தயாரிக்கப்படும் ரெயில்கள் 200 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும். அந்த ரெயில்கள் சுமார் 45 நாட்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும். ரெயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை அடைய ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 ரெயில் களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version