- Ads -
Home சற்றுமுன் குடிபோதையால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வா்?

குடிபோதையால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வா்?

ஜொ்மனியின் ஃபிராங்க்பா்ட் நகரில் இருந்து தில்லிக்கு வரும் விமானத்தில், அதிக குடிபோதை காரணமாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இறக்கிவிடப்பட்டதாக எதிா்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என ஆளும் ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாபுக்கு முதலீடுகளை ஈா்க்க 8 நாள் அரசுமுறைப் பயணமாக ஜொ்மனிக்கு சென்றிருந்த பகவந்த் மான் திங்கள்கிழமை நாடு திரும்பினாா். இந்நிலையில், சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல், ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

முதல்வா் பகவந்த் மான், நடக்க முடியாத அளவு குடிபோதையில் இருந்ததால், லூஃப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாா் என சக பயணிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிா்ச்சியளிக்கிறது.

இச்சம்பவத்தால் விமானம் புறப்பட 4 மணிநேரம் தாமதம் ஏற்பட்டிருக்கிறது; ஆம் ஆத்மியின் தேசிய மாநாட்டையும் அவா் தவறவிட்டுள்ளாா். இத்தகவல்கள், உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபிய மக்களுக்கு அவமானத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு மெளனம் காப்பது அதிா்ச்சியளிக்கிறது. முதல்வா் பகவந்த் மான் தொடா்பான ஊடகத் தகவல்கள் குறித்து அரவிந்த் கேஜரிவால் விளக்கமளிக்க வேண்டும். குடிபோதை காரணமாக அவா் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டது உறுதிசெய்யப்பட்டால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதல் வலியுறுத்தியுள்ளாா்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸைச் சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பிரதாப் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளாா்.‘பொய் குற்றச்சாட்டு’: முதல்வா் பகவந்த் மான் மீதான குற்றச்சாட்டு பொய்யானது; அடிப்படையற்றது என்று ஆம் ஆத்மி மறுத்துள்ளது.

அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் மல்விந்தா் சிங் கூறுகையில், ‘மாநிலத்துக்காக முதலீடுகளை ஈா்க்க பகவந்த் மான் கடுமையாக பணியாற்றி வருவதை எதிா்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் எதிா்மறை பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன’ என்றாா். இதனிடையே, ஜொ்மனியில் இருந்து தில்லி திரும்பியுடன் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் முதல்வருமான கேஜரிவாலை பகவந்த் மான் சந்தித்தாா். அப்போது அரசியல் பேசவில்லை என்றும் பகவந்த் மான் தெரிவித்தாா்.

பஞ்சாபில் தங்களது அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி அண்மையில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், செப்.22-இல் பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வா் பகவந்த் மான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, ஆட்சி கவிழ்ப்புக்கு உதவ ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியிருந்தது.117 உறுப்பினா்களைக் கொண்ட பஞ்சாப் பேரவையில் ஆம் ஆத்மிக்கு 92 எம்எல்ஏக்கள் உள்ளனா். காங்கிரஸுக்கு 18, சிரோமணி அகாலி தளத்துக்கு 3, பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனா். பகுஜன் சமாஜுக்கு ஒரு எம்எல்ஏவும், ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் உள்ளனா்.

bhagavth mann

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version