- Ads -
Home சற்றுமுன் தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும்?

தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும்?

மதுரை வங்கி லாக்கரில் உள்ள தேவரின் தங்க கவசத்தை பெற இபிஎஸ் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஓபிஎஸ் பெற முயற்சிக்கும் வேளையில் வங்கியில் உள்ள தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் காந்திமீனாள் நடராஜன் ஒப்புதல் கடிதத்தை யாருக்கு அளிக்கிறாரோ அவரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது .

images 2022 10 14T172846.230

கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவரின் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பிலான 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் தேவரின் நினைவிடத்தில் பொருத்தப்படும். அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் இந்த கவசம் வைக்கப்பட்டுள்ளது.

அதனை அங்கிருந்து பசும்பொன்னுக்கு எடுத்து செல்வது வழக்கம். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் வங்கிக்கு வந்து லாக்கரில் உள்ள தேவரின் தங்க கவசத்தை எடுத்து விழா கமிட்டியுடன் ஒப்படைப்பார். விழா முடிவடைந்ததும் அதேபோன்று தங்க கவசத்தை முறைப்படி வங்கிக்கு வந்து ஓ.பன்னீர்செல்வம் பெற்று ஒப்படைப்பார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வத்திற்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தங்க கவசம் அ.தி.மு.க.வினர் வசம் ஒப்படைக்கப்படாமல் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் வங்கியில் உள்ள தங்க கவசத்தை பெற அ.தி.மு.க. தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது. இரு தரப்பிலும் தனித்தனியாக வங்கியில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த நிலையில் தேவரின் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2 முறை மதுரை வந்த திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் கடிதம் அளித்தும் வங்கி நிர்வாகத்தினர் தேவர் நினைவிட பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் காந்தி மீனாள் நடராஜனை சந்தித்து பேசுவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய உள்ளான் உள்ளிட்ட தென் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் இன்று பசும்பொன் சென்றனர்.

பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அருகில் உள்ள தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தனர். அப்போது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவுக்காக தங்க கவசத்தை வங்கியில் முறைப்படி எடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது காந்தி மீனா நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனாலும் ஒப்புதல் கடிதம் வழங்குவதில் காந்தி மீனாள் நடராஜன் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் காந்திமீனாள் நடராஜன் ஒப்புதல் கடிதத்தை யாருக்கு அளிக்கிறாரோ அவரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும். அவர் ஒப்புதல் கடிதம் அளிக்காத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்று பசும்பொன்னில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டது தென் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version