- Ads -
Home சற்றுமுன் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- தீபாவளி பரிசு பணம் ரூ.2 கோடி பறிமுதல்..

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- தீபாவளி பரிசு பணம் ரூ.2 கோடி பறிமுதல்..

images 2022 10 15T125536.208

தமிழகத்தில் 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியதில் தீபாவளி பரிசு பணம் ரூ.2 கோடி சிக்கியது .

நெல்லை மாவட்டத்தில் பாளையில் உள்ள மாவட்ட தொழில்மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.3.55 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உபகோட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தீபாவளி பரிசு பணம் என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கும் புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நேற்று மாலையில் இருந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அதிரடி சோதனையை நடத்தினார்கள். இதில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. கரூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம், வேலூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலையில் இருந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கணக்கில் வராத ஏராளமான பணம் இருந்தது. அதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனை சாவடி, தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை சோதனை சாவடி, திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் உள்ள சோதனை சாவடி ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 55). இவர் கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குநராக பொறுப்பேற்றார். இவர் நேற்று மாலை பணியை முடித்து விட்டு ஒரு பையுடன் ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உமாசங்கர் கையில் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டனர். அதில் கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை விருதுநகர் திருமலை நகரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அங்கு கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். உமாசங்கரிடம் மொத்தம் ரூ. 12 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது துணை தாசில்தார் உள்பட 20 பேரிடம் கணக்கில் வராத ரூ. 57 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத ரூ. 45 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது தாசில்தார் ரவி பயன்படுத்தும் ஜீப்பில் இருந்து ரூ. 32ஆயிரத்து 500, அலுவலக பீரோ அருகில் ரூ. 15 ஆயிரம், கோப்புகள் நடுவே ரூ. 6 ஆயிரம் மற்றும் 5 பேர் வைத்திருந்த கணக்கில் வராத பணம் என ரூ. 64 ஆயிரத்து 500-யை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பாளையில் உள்ள மாவட்ட தொழில்மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.3.55 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உபகோட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்பொறியாளர் ராஜரத்னம் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளராக கார்த்திக் பிரபு (வயது 39) பணியாற்றி வந்தனர். நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை கண்காணித்தனர். அப்போது காப்பகத்தில் உள்ள ஒரு குழந்தையை வீட்டுக்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வாங்க குழந்தையின் பெற்றோர் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை தனலட்சுமி, கார்த்திக் பிரபு ஆகியோரிடம் கொடுத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும் அங்கு 3 மணி நேரம் சோதனை நடந்தது. கோவை கே.ஜி.சாவடி பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில்வராத ரூ.25,680 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. திருவாரூர் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை விருந்தினர் விடுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மட்டும் கணக்கில் வராத ரூ.75 லட்சம் லஞ்ச பணம் சிக்கியது. நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.9 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், திருச்சி நகர்ப்புற வாழ்விட வாரிய கோட்ட அலுவலகம், புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலகம், மயிலாடு துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இங்கும் கணக்கில் வராத தீபாவளி பரிசு பணத்தை பறிமுதல் செய்தனர். சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பொறியியல் பிரிவு துறை, திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி தீபாவளி பரிசு பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில் இந்த சோதனை மேலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version