- Ads -
Home சற்றுமுன் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு- என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு- என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரை

கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றிட பரிந்துரைத்தும், கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி செய்திடவும் தமிழக மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழக முதல்வர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் முதல்வர் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

> கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும்;

மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும்;

கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்;

மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும்;

இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) .சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

500x300 941182 untitled 9 1

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version