- Ads -
Home சற்றுமுன் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

kallakkurichi illicit liquor case

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்; பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

இதை அடுத்து வழக்கமான நடவடிக்கையாக, கள்ளச் சாராய உயிரிழப்பு இல்லை என பகிரங்கமாக தவறான தகவல் அளித்த மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி., மற்றும் எட்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியர் மற்றும் எஸ்.பி நியமனம் செய்யப் பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப் பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப் பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அங்குள்ளவர்களிடம் கள்ளச் சாராயத்தை விற்பனை செய்வதும், அதனை அவர்கள் வாங்கிச் செல்வதுமான வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தில் மெத்தனால் அதிகமாகக் கலக்கப்பட்டதால், அதனைக் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிவிரைவு, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சின்னதுரை என்பவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 10 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.

நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என கூறியுள்ளார்.

இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த  சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய  மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு  உள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது,  பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள்  தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத்  தரப்பில் கூறப்படு்கிறது.  ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும்  முடங்கிக் கிடக்கின்றன.

சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு  நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது? என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.  தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.

கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால்,  மதுவணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,  கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சி தான் இது. இதில் உண்மை இல்லை. கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் நவீனமடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். – என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu  எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் திரு @MKStalin அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். 

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, @BJP4Tamilnadu சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அ.தி.மு.க. சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.

ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்! – என்று, எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கள்ளச் சாராயத்தை மட்டுமல்ல… டாஸ்மாக் மதுவை குறித்து விட்டு அட்டகாசம் செய்யும்  குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நாட்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம்  போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version