- Ads -
Home சற்றுமுன் ப.சிதம்பரம் குறித்து விமர்சனம்: குஷ்பு, ஹசீனா இடையே மோதல்

ப.சிதம்பரம் குறித்து விமர்சனம்: குஷ்பு, ஹசீனா இடையே மோதல்

சென்னை:

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறித்த விமர்சனத்தால், அக்கட்சிக்குள் பூசல் வலுத்துள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் குஷ்புவுக்கும் ஹசீனாவுக்கும் இடையே வார்த்தப் போர் வலுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கமான கோஷ்டிப் பூசலுக்கு வழி வகுத்துள்ளது.

அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்டோர் தில்லியில் ராகுல் காந்தியை சந்தித்து முறையிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளங்கோவன் தங்கபாலு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தில்லி சென்று, சோனியா மற்றும் ராகுலை சந்தித்து பேசினார். அப்போது இளங்கோவனுக்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார். பின்னர் குஷ்பு கூறும் போது, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடிகைகளை நம்பி காங்கிரஸ் இல்லை என்று தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தங்கபாலு என தனி நபர்கள் யாரையும் நம்பி காங்கிரஸ் இல்லை. கோடிக்கணக்கான தொண்டர்களையும், நேரு, இந்திரா, ராஜீவ் போன்ற தலைவர்களின் தியாகத்தையும் நம்பியே காங்கிரஸ் கட்சி உள்ளது என்றார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் கட்சிக்கு வந்து ஒரு வருடத்தை பூர்த்தி செய்கிற குஷ்பு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றி விமர்சிக்கத் தகுதியற்றவர். நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்கள் யார், யாரை நம்பி இருக்கிறார்கள் என்பதை இந்த நாடறியும். நீங்கள் முன்பு இருந்த கட்சியில் இது போல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களை விமர்சித்ததால் கட்சியை விட்டு வெளியே வந்த வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் அறிந்தே உள்ளார்கள். கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது.

யாரை நம்பியும் காங்கிரஸ் இல்லை என்று குஷ்பு குறிப்பிடுகிறார். காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் இருவரின் போர்ப்படைத் தளபதிகளாம் அன்புத் தலைவர்களையும், அருமைத் தொண்டர்களையும், மக்களையும் நம்பி உள்ளது என்பதை ஆணித்தரமாக நான் பதிவு செய்ய விரும்புகிறேன்… – என்று தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் தற்போது பெரிதாக வெடித்து வெளிக்கிளம்பியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version