- Ads -
Home சற்றுமுன் அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல்

அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல்

 
 
 
மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு உரிய சதவீதப்படி நியமனங்கள் நடைபெறுவதை அமல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 
இட ஒதுக்கீட்டு தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
 
மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற விவரப்படி, 12 சத விகிதத்திற்கும் குறைவான பிற்படுத்தப்பட்டோரே 1-1-2015 அன்றைய நிலையில் மத்திய அரசின் அமைச்சகங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றுகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது
 
மத்திய அரசின் துறைகளில் ஏ, பி, சி, மற்றும் டி ஆகிய பிரிவுகளிலான பதவிகளில் பணியாற்றும் மொத்தம் 79,483 பேரில், 9,040 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
 
யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9 சதவிகிதத்திற்கு குறைவாகவும், டி.ஓ.பி.டி. எனப்படும் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் 6.67 சதவிகிதத்திற்குக் குறைவாகவும் தான் பிற்படுத்தப்பட்டோர் அமர்த்தப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள்.
 
பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் மொத்தம் 6,879 பேர் பணியாற்றுவதில், தாழ்த்தப்பட்டோர் 12.91 சதவிகிதத்தினரும், பழங்குடியினர் 4 சதவிகிதத்தினரும் பணியாற்றுகிறார்கள்.
 
இந்தியக் குடியரசுத் தலைவரின் செயலகத்தில் பணி புரியும் ஏ பிரிவு அலுவலர் களிடையே பிற்படுத்தப்பட்டோர் யாரும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.
 
மத்திய அரசின் உயர்கல்வித் துறையில் “ஏ” பிரிவு அலுவலர்களில் 5 சதவிகிதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் பணியாற்றுகிறார்கள். மற்ற பிரிவு ஊழியர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் என ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விபரங்களிலிருந்து, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கோ, தாழ்த்தப்பட்டோருக்கோ வரையறை செய்யப்பட்டுள்ள உரிய சதவிகிதப்படி பணிகள் வழங்கப்படவில்லை என்பதும், மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கே பணிகள் வழங்கப்பட்டு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
 
திராவிட முன்னேற்றக் கழகம் தனது 2014-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், “சமூக நீதி” என்ற தலைப்பில் குறிப்பிடும்போது, “மண்டல் குழு பரிந்துரை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், சமூக நீதிக் கொள்கை முழுமை அடைவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இடஒதுக்கீடு அதிகபட்சம் ஐம்பது சதவிகிதம் தான் இருக்க வேண்டும் என்பதும், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் என்று கருதப்படுவோர்க்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதும் சமூக நீதிக்குப் புறம்பானவை என்பதால் அதனை மாற்ற சட்டத்திருத்தம் கொண்டு வர தி.மு.க. வலியுறுத்தும்” என்றெல்லாம் சொல்லியிருந்தோம்.
 
ஆனால் நாமும், நம்மைப் போன்ற சமூக நீதி ஆர்வலர்களும் நீண்ட காலமாக படாத பாடுபட்டு கொண்டு வந்து நிறைவேற்றிய மண்டல் குழுவின் பரிந்துரைகளுக்கு மாறாக நிலைமை தற்போது வளர்ந்து வருகிறது என்பதைப் பார்க்கும்போது பெரும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.
 
இந்த வேதனைகள் நீங்கவும், மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் முழு அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவும் “கிரீமி லேயர்” என்ற பாகுபாட்டுப் பிரிவினை நீக்கிடத் தேவையான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
 
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர்க்கு இதுவரை துறைவாரியாக வழங்கப்பட்டுள்ள பணியிடங்களைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து வெள்ளை அறிக்கை ஒன்றினை வெளியிடவேண்டும்.
 
நிரப்பப்படாமல் விடுபட்டுப் போன பின்னடைவுப் பணியிடங்களை கணக்கிட்டு, சிறப்புத் தேர்வுகளுக்கும் நியமனங்களுக்கும் திட்டமிட்டு நிறைவேற்றிடவும்; இனி வருங்காலத்தில் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு உரிய சதவீதப்படி நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்திடக் கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிடவும்; மத்திய அரசு உடனடியாக ஆவண செய்திட வேண்டுமென்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சார்பாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகின்ற சமூக நீதி இயக்கங்களின் சார்பாகவும் மத்திய அரசை, குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version