- Ads -
Home சற்றுமுன் 2016ம் ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: பயிர் காப்பீடு திட்டத்துக்கு முக்கியத்துவம்!

2016ம் ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: பயிர் காப்பீடு திட்டத்துக்கு முக்கியத்துவம்!

31.1.16 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம் இது, மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த முறை பல விஷயங்களை எடுத்துரைத்தாலும், இயற்கைப் பேரிடர், பயிர்க்காப்பீடு குறித்து மோடி விரிவாக எடுத்துரைத்தார். மேலும், மொபைல் போன் மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலி, சென்னை நிலையத்தில் இருந்து ஒலிபரப்பான நிகழ்ச்சியில் ஒலி வடிவம்…

 

எனதருமை நாட்டு மக்களே,

2016ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி இது. மனதின் குரல் என்னை எந்த அளவுக்கு உங்களோடு பிணைத்திருக்கிறது என்று சொன்னால், நான் எந்த விஷயத்தைப் பார்க்க நேர்ந்தாலும், மனதில் எந்த ஒரு கருத்து உதித்தாலும், அதையெல்லாம் உங்கள் முன்பு வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நேற்று மரியாதைக்குரிய காந்தியடிகள் நினைவிடத்துக்கு என் அஞ்சலிகளைச் செலுத்த ராஜ்காட் சென்றிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் தியாகிகளை நினைவு கூர இது நடைபெறுகிறது. சரியாக 11 மணிக்கு 2 நிமிடங்கள் வரை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது; இது நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மஹான்கள், தீரர்கள், உன்னதமான தியாகிகள், தவசீலர்களுக்கு நமது மரியாதைகளைச் செலுத்த அமைந்திருக்கும் ஒரு வாய்ப்பு.

பார்க்கப் போனால் நம்மில் பல பேர் இதைச் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்படி மரியாதையைக் காணிக்கையாக்குவது நம்முடைய இயல்பாகவே மாற வேண்டாமா? இதை நாம் நமது தேசியக் கடமையாக கருத வேண்டும். எனது ஒரு மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக மட்டுமே மாற்றம் ஏற்பட்டு விடும் என்று நான் கருதவில்லை. ஆனால் நான் நேற்று உணர்ந்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன், பகிர்ந்தேன். இவை போன்றவை தாம் நாட்டுக்காக நாம் வாழ வேண்டும் என்ற கருத்தூக்கத்தை நமக்கு அளிக்கின்றன. கற்பனை செய்து பாருங்கள்!! ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30ம் தேதி சரியாக 11 மணிக்கு, 125 கோடி நாட்டு மக்களும் 2 நிமிடம் வரை மௌனத்தைக் கடைப்பிடித்தால் இதில் எத்தனை பெரிய சக்தி அடங்கியிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நமது சாத்திரங்கள் கூட, சங்கச்சத்வம், சம்வதத்வம், சம்வோ மனாஸி ஜானதாம் என்று கூறியிருக்கின்றன; அதாவது நாமனைவருமாக இணைந்து பயணிப்போம், ஒரே குரலில் பேசுவோம், நமக்கெல்லாம் ஒரே கருத்தாக இருக்கட்டும். இது தானே நாட்டின் உண்மையான பலம்? இந்த பலத்துக்கு உயிர் ஓட்டம் கொடுக்கும் பணியை இது போன்ற நிகழ்வுகள் தாம் செய்கின்றன.

எனதருமை நாட்டு மக்களே,

சில நாட்கள் முன்பாக, நான் சர்தார் படேல் அவர்களின் கருத்துக்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மனம் சில விஷயங்கள் மீது படிந்தது. அதில் அவரது ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தியாவின் சுதந்திரம், நாகரீகம், உன்னதமான தர்மமான அகிம்ஸை ஆகியன கதரில் தான் இருக்கிறது. அது மட்டுமல்ல, நாட்டின் எந்த விவசாயியிடத்தில் நாம் உணர்வு பூர்வமான தொடர்பு கொண்டிருக்கிறோமோ, அந்த விவசாயியின் நலனும் கூட கதராடைகளில் தான் இருக்கிறது என்று கதராடைகள் தொடர்பாக கூறியிருக்கிறார் படேல் அவர்கள். எளிமையான மொழியில் நச்சென்று தம் கருத்துக்களைக் கூறுவதில் சமர்த்தர் படேல் அவர்கள். மிக அருமையாக கதராடைகளின் மஹாத்மியத்தை உரைத்திருக்கிறார் சர்தார்.

நேற்று 30ம் தேதி வணக்கத்துக்குரிய காந்தியடிகளின் நினைவு நாளன்று கதராடைகள் மற்றும் கிராமத் தொழில்களோடு தொடர்புடைய எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ, அவர்களோடு எல்லாம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். வணக்கத்துக்குரிய காந்தியடிகள் அறிவியல் நாட்டம் மிக்கவராக இருந்தார், நானும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான சகோதர சகோதரிகளோடு தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன். கதராடைகள் இன்று ஒரு அடையாளமாகி இருக்கின்றது, அதற்கென ஒரு தனி முத்திரை ஏற்பட்டிருக்கிறது. இப்போது கதராடைகள் இளைய சமூகத்தைக் கூடக் கவரக் கூடியதாக இருக்கிறது. அதுவும் சிறப்பாக, யாருக்கெல்லாம் இயற்கை வழி வேளாண் பொருட்கள், முழுமையான சிகிச்சை முறை ஆகியவை மீது ஈடுபாடு இருக்கிறதோ, அவர்களுக்கு எல்லாம் இது அருமையான ஒன்றாக ஆகி இருக்கிறது. ஒப்பனை ஆடைத் துறையிலும் கூட கதராடைகளுக்கென ஒரு தனியிடம் ஏற்பட்டிருக்கிறது. கதராடைகளில் நவீனங்களைப் புகுத்த கதராடைகள் தயாரிப்பில் தொடர்புடைய அனைவருக்கும் என் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார அமைப்பில் சந்தைகளின் பங்கைப் புறந்தள்ளி விட முடியாது. அந்த வகையில் கதராடைகள் உணர்வு பூர்வமாக நம் மனங்களில் இடம் பிடித்திருப்பதைப் போலவே, சந்தைகளிலும் ஓரிடம் பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. பல வகையான துணிகளை நீங்கள் பயன் படுத்தும் அதே வேளையில், கதராடைகளுக்கு எனவும் ஒரு இடம் அளிக்க வேண்டும் என்று நான் மக்களிடம் கேட்டுக் கொண்டேன். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். எங்களால் முழுமையாக கதராடைகளைப் பயன்படுத்த முடியாது என்றாலும் கூட, பல வகையான துணிமணிகளுக்கு இடையே கதராடையும் ஒன்றாக இருக்கும் என்று உணர்ந்தார்கள். இது ஒரு புறம் இருந்தாலும், அரசிலும் கதராடைகள் தொடர்பாக ஒரு ஆக்கபூர்வமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பல ஆண்டுகள் முன்பாக அரசில் கதராடைகள் பயன்பாடு முழுமையாக இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல நவீனமயமாதல் காரணமாக இந்தப் பயன்பாடு முடிந்து போனது, விளைவாக கதராடைகள் தயாரிப்பது தொடர்புடைய ஏழைகளின் வேலைகள் பறி போயின. கதராடைகள் தயாரிப்பில் கோடிக்கணக்கான பேர்களுக்கு வேலை அளிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக இரயில்வே அமைச்சகம், காவல் துறை, இந்திய கப்பற்படை, உத்தராகண்ட்டின் தபால் துறை என பல அரசுத் துறைகள் கதராடைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பல நல்ல முனைப்புக்களில் ஈடுபட்டன. இதன் விளைவாக, அரசின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே, கூடுதலாக 18 இலட்சம் பணி நாட்கள் அளவுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இது மிகப் பெரிய ஒரு வளர்ச்சி இல்லையா? மரியாதைக்குரிய காந்தியடிகள் கூட எப்போதுமே தொழில்நுட்ப மேம்பாடு குறித்து மிகவும் ஆர்வமும் துடிப்பும் கொண்டவராக விளங்கினார். அந்த வகையில் தான் இராட்டை தொழில்நுட்ப வளர்ச்சி இந்த அளவுக்கு அமைந்திருக்கிறது. இப்போதெல்லாம் இராட்டையை இயக்க சூரியசக்தியைப் பயன்படுத்தும் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. இதனால் உடல் உழைப்பு குறைந்து உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதோடு, தர மேம்பாடும் காணப்பட்டிருக்கிறது. சிறப்பாக சூரிய சக்தியில் இயங்கும் இராட்டை தொடர்பாக பலர் எனக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள்.

இராஜஸ்தான் மாநிலத்தின் தௌஸா மாவட்டத்தைச் சேர்ந்த கீதா தேவி, கோமல் தேவி, பீஹார் மாநிலத்தின் நவாதா மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா தேவி ஆகியோர் சூரிய சக்தியால் இயங்கும் இராட்டையால் தங்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கடிதம் வாயிலாக எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். எங்கள் வருமானம் இரட்டிப்பாகியிருக்கிறது, எங்கள் இழைகள்பால் மக்களின் ஈர்ப்பும் அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. ஜனவரி மாதம் 30ம் தேதியன்று நாம் மரியாதைக்குரிய காந்தியடிகளைப் பற்றி நினைவு கூரும் வேளையில், நான் மீண்டும் இந்த விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். நம்மிடம் ஏராளமான ஆடைகள் இருந்தாலும் கூட, அவற்றில் ஒன்றிரண்டாவது கதராடையாக இருக்க வேண்டும் என்பது தான் அது.

எனதருமை நாட்டு மக்களே,

ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசுப் புனித நாளை நாம் மிகவும் உற்சாகத்தோடும், துடிப்போடும் கொண்டாடினோம். தீவிரவாதிகள் தாக்குதல் ஏற்படலாம் என்ற கவலை நம்மை பீடித்திருந்த வேளையிலும் நாட்டு மக்கள் தங்கள் மனவுறுதியையும்,  நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்கள், மிகவும் கோலாகலத்தோடு, பெருமிதம் பொங்க குடியரசுத் திருநாளைக் கொண்டாடினோம். ஆனால் சிலரோ சற்று வித்தியாசமாக செயல்பட்டார்கள். சிறப்பாக, ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்கள் மிகவும் சிறப்பான ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில், அந்தந்த கிராமங்களில் அதிகம் படித்த பெண்ணைக் கொடியேற்றத் தேர்ந்தெடுத்தார்கள். ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்கள் பெண்ணுக்கு மகத்துவம் அளித்தார்கள், அதிலும் கல்வியறிவு பெற்ற பெண்களுக்கு சிறப்பு மரியாதை அளித்தார்கள். பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கல்வியளிப்போம் என்பதை செயல்படுத்தும் வகையில் அமைந்த மிகவும் அருமையான செய்தி இது. நான் இந்த இரண்டு மாநிலங்களின் செறிவான கருத்துக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் திருநாளன்று கொடியேற்றும் அற்புதமான வாய்ப்பு கிட்டிய அனைத்துப் பெண்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்ல, ஹரியாணா மாநிலம் வேறு ஒரு சிறப்பான முயற்சியிலும் ஈடுபட்டது. கடந்த ஓராண்டுக் காலத்தில் யாருடைய குடும்பங்களில் எல்லாம் பெண் குழந்தை பிறந்ததோ, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் குடியரசுத் திருநாளன்று சிறப்பான அழைப்பு விடுக்கப்பட்டு, மிக முக்கியமான நபர்கள் என்ற அந்தஸ்த்தில் அவர்களுக்கு கொண்டாட்டங்களில் முன்னணி இடம் அளிக்கப்பட்டது. இது மிகவும் பெருமிதம் அளிக்கும் ஒன்று. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் இயக்கத்தை நான் ஹரியாணா மாநிலத்தில் தான் தொடங்கி வைத்தேன் என்பதை நான் இந்த வேளையில் பெருமையோடு நினைவு கூருகிறேன். ஏனென்றால் ஹரியாணா மாநிலத்தில் பாலின விகிதாச்சாரத்தில் பெருமளவு கோளாறு ஏற்பட்டிருந்தது. ஓராயிரம் ஆண்களுக்கு நிகராக பெண்களின் விகிதம் மிகவும் குறைந்து போயிருந்தது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக இருந்தது, சமுதாய அளவிலான சமநிலை சீர்குலைந்து போயிருந்தது. நான் ஹரியாணா மாநிலத்தைத் தேர்ந்தெடுத்த போது, அதிகாரிகள் எல்லாம் வேண்டாம் ஐயா, அங்கே இந்த விஷயத்தில் மிகவும் எதிர்மறையான மனோநிலை நிலவுகிறது என்று கூறினார்கள். இதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை, தொடர்ந்து முன்னேறினேன், இன்று நான் ஹரியாணா மாநிலத்துக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தக் கருத்தைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். விளைவைப் பாருங்கள், இன்று பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அங்கே சமூக வாழ்வில் உண்டாகியிருக்கும் மிகப் பெரிய மாற்றத்துக்கு நான் சிரம் தாழ்த்துகிறேன்.

கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் இரண்டு விஷயங்கள் பற்றித் தெரிவித்திருந்தேன். குடிமகன் என்ற முறையில் நாம் ஏன் தேசத் தலைவர்களின் சிலைகளைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபடக் கூடாது என்பது ஒன்று. தலைவர்களுக்கு சிலை எடுப்பதில் நாம் உணர்வு பூர்வமான ஈடுபாடு உடையவர்கள் இல்லையா? ஆனால் சிலையமைத்த பின்னர் நாம் அவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. நாம் எப்போதும் நமது உரிமைகளைப் பற்றியே பேசி வந்திருக்கிறோம், ஏன் நமது கடமைகளைப் பற்றி இந்தக் குடியரசுத் திருநாளை ஒட்டிப் பேசக் கூடாது என்பது தான் இரண்டாவது விஷயம். நாட்டின் பல இடங்களில் பல குடிமக்கள், பல சமூக அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், சில ஆன்மீகப் பெரியோர்கள் என பலர் முன்வந்து தேசத் தலைவர்கள்-மஹான்களின் திருவுருவச் சிலைகளைத் தூய்மைப்படுத்தினார்கள், அதைச் சுற்றியிருக்கும் இடங்களைச் சுத்தம் செய்தார்கள், இது ஒரு நல்ல முயற்சி. இது வெறும் தூய்மைப்படுத்தும் இயக்கம் மட்டுமல்ல, இது மரியாதை செலுத்தும் ஒரு இயக்கமும் கூட. நான் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் எனக்குக் கிடைத்த செய்திகள் எனக்கு மிகவும் நிறைவை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, சிலர் இதை விளம்பரப்படுத்தவில்லை. நீங்கள் தூய்மைப்படுத்தியிருக்கும் திருவுருவச் சிலைகளின் புகைப்படங்களை mygov தகவில் எனக்குக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். உலகத்தோர் அதைப் பார்த்து, பெருமிதம் கொள்ளட்டும். இதே போல, ஜனவரி 26ம் தேதி தொடர்பாக என் கடமைகளும் என் உரிமைகளும் என்பதைப் பற்றி நான் உங்கள் கருத்துக்களை வேண்டியிருந்தேன். பல்லாயிரம் பேர்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே,

ஒரு விஷயத்தில் எனக்கு உங்களின் பேருதவி தேவைப்படுகிறது. கண்டிப்பாக நீங்கள் எனக்கு உதவி செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நமது நாட்டில் விவசாயிகள் தொடர்பாக ஏகப்பட்ட விஷயங்கள் கூறப்படுகின்றன. நான் இதிலெல்லாம் ஈடுபட விரும்பவில்லை. இயற்கைப் பேரிடர் ஏற்படுத்தும் நாசம் காரணமாக அயராது உழைத்த விவசாயியின் உழைப்பு வீணாகி விடுகிறது, இது தான் அவனது மிகப் பெரிய சங்கடம். ஒட்டு மொத்த ஆண்டும் வீணாகிப் போகிறது. அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு உபாயம் தோன்றுகிறது. அது தான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம். 2016ஆம் ஆண்டு மிகப் பெரிய பரிசாக இந்திய அரசு விவசாயப் பெருமக்களுக்கு இந்தத் திட்டமான,  பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அளித்தது. ஆனால் இந்தத் திட்டம் மூலமாக பிரதமருக்கு வாழ்த்துப்பா பாட வேண்டும், பரணி பாட வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. பல காலமாக இது ஏதோ வகையில் செயல்பட்டு வந்தாலும், சுமார் 20-25 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இதனால் பலனேதும் கிடைக்கவில்லை. இனி வரும் 2-3 ஆண்டுகளில் நாம் நாட்டின் குறைந்த பட்சம் 50 சதவீத விவசாயிகளையாவது இந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பது என்ற தீர்மானத்தை மேற்கொள்ள முடியாதா? இதில்தான் எனக்கு உங்களின் உதவி தேவையாக இருக்கிறது. ஏனென்றால், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தோடு விவசாயி தன்னை இணைத்துக் கொண்டால், பேரிடர்க் காலங்களில் விவசாயிக்கு மிகப் பெரிய உதவியாக இது அமையும்.  பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிட்டியிருக்கிறது, பரவலாக்கம் ஏற்பட்டிருக்கிறது, இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது, இதில் ஏகப்பட்ட தொழில்நுட்ப உள்ளீடுகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமல்ல, பயிர் அறுவடை முடிந்து 15 நாட்கள் கழித்துக் கூட மகசூலுக்கு ஏதும் குந்தகம் ஏற்பட்டால், அதற்கும் வழிவகை இந்தத் திட்டத்தில் செய்யப் பட்டிருக்கிறது. தொழில்நுட்பப் பயன்பாடு மூலமாக எப்படி காப்பீட்டுத் தொகை பயனாளிக்கு விரைவாகக் கொண்டு சேர்க்கப்பட முடியும் என்பது பற்றியெல்லாம் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய விஷயமென்னவென்றால், காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகை இந்த அளவுக்கு குறைவாக இருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாது. புதிய காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கான அதிகபட்ச ப்ரீமியம் தொகை, முன்பட்டப் பயிர்களுக்கு 2 சதவீதமும், குறுவைப்பட்டப் பயிர்களுக்கு 1 ½ சதவீதமாகவும் இருக்கும். நமது விவசாய சகோதரர் யாருக்காவது இதன் பயன்கள் கிடைக்காமல் இருந்தால், இது எத்தனை பெரிய இழப்பாக இருக்கும், சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் விவசாயியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் என் மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்களால் என் மனதின் குரலை விவசாயிகளிடம் எடுத்துச் செல்ல முடியாதா? ஆகையால் தான் நீங்கள் இதை அதிகமாக விளம்பரப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வானொலி மூலமாக, தொலைக்காட்சி மூலமாக, என் மனதின் குரலில் நீங்கள் இந்தத் திட்டம் பற்றியெல்லாம் கேள்விப்பட்டாலும் கூட, பின்னர் இதை மீண்டும் கேட்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கென ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மொபைல் வாயிலாகக் கூட என் மனதின் குரலைக் கேட்க முடியும், எப்போது வேண்டுமானாலும் கேட்க முடியும். உங்கள் மொபைல் மூலமாக ஒரு மிஸ்ட் கால் தாருங்கள், மனதின் குரலுக்கான மொபைல் ஃபோன் எண் 81908 81908. எட்டு, ஒன்று ஒன்பது, பூஜ்யம், எட்டு-எட்டு, ஒன்று, ஒன்பது, பூஜ்யம், எட்டு. நீங்கள் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால், எப்போது வேண்டுமானாலும் மனதின் குரலைக் கேட்டுக் கொள்ளலாம். இன்றைய அளவில் இது ஹிந்தியில் இருக்கும், ஆனால் விரைவாகவே இது உங்கள் தாய் மொழியில் கூட கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பாக எனது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

எனதருமை இளைய சகோதரர்களே,
 
நீங்கள் அற்புதமாக செயல்பட்டிருக்கிறீர்கள். ஜனவரி மாதம் 16ம் தேதி start up திட்டம் தொடங்கிய போது, நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களிடத்திலும் என்னால் புதிய சக்தி, புதிய எழுச்சி, புதிய உற்சாகம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது. இலட்சக்கணக்கானவர்கள் இதில் பங்கெடுக்க பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் இடம் இல்லாத காரணத்தால், கடைசியில் விஞ்ஞான் பவனத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் இடமின்மை காரணமாக பங்கு கொள்ள இயலாமல் போயிருக்கலாம், ஆனால் ஆன்லைன் மூலமாக இதில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டீர்கள்.  இது போல ஒரு நிகழ்ச்சி, இலட்சக்கணக்கான இளைஞர்களின் கவனத்தை இத்தனை ஆழமாகக் கொள்ளை கொண்டது என்பது மிக்க ஆச்சரியத்தை அளிக்கும் விஷயம். ஆனால் ஸ்டார்ட் அப் என்றால் அது தகவல் தொழில்நுட்பத்தோடு தொடர்புடையது, மிகவும் நுணுக்கங்கள் நிறைந்த வேலை என்று சாமான்ய மக்களின் மனங்களில் ஒரு பதிவு ஏற்பட்டிருப்பதை என்னால் காண முடிகிறது. ஆனால் இந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் அந்த தவறான கருத்து மறைந்து போனது. தகவல் தொழில்நுட்பத்தோடு ஸ்டார்ட் அப்புக்கு இருக்கும் தொடர்பு என்பது ஒரு சிறிய அம்ஸம் தான். வாழ்க்கை என்பது விசாலமானது, அதில் தேவைகள் என்பன ஏராளமானவை. ஸ்டார்ட் அப் எண்ணிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒரு திட்டம்.

சில நாட்கள் முன்பாக நான் சிக்கிம் மாநிலம் செல்ல வேண்டியிருந்தது. நாட்டின் இயற்கை வழி விவசாயம் முழுமையாக நடைபெறும் மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் அனைத்து விவசாயத் துறை அமைச்சர்களையும், செயலர்களையும் அங்கே வருமாறு நான் அழைப்பு விடுத்திருந்தேன். அங்கே இரண்டு இளைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்திய மேலாண்மைக் கழகம், IIMஇல் கல்வி பெற்ற இவர்களில் ஒருவர் அனுராக் அக்ரவால், மற்றொருவர் சித்தி கர்ணானி. இவர்கள் இருவரும் ஸ்டார்ட் அப்பைக் கைக்கொண்டவர்கள். இவர்கள் வடகிழக்கில், விவசாயத் துறையில் பணியாற்றுகிறார்கள். மூலிகைப் பயிர்கள், இயற்கை விவசாய விளைபொருட்கள் ஆகியவற்றை உலக அளவில் சந்தைப்படுத்துகிறார்கள். எத்தனை அருமையான விஷயம் பாருங்கள்!!

ஸ்டார் அப் தொடர்பான உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கடந்த முறை நான் கூறியிருந்தேன். பலர் எழுதியும் அனுப்பி இருக்கிறார்கள், ஆனால் மேலும் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். அதே சமயம் வந்திருக்கும் விஷயங்கள் மெய்யாகவே கருத்தூக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. விஷ்வாஸ் த்விவேதி என்ற ஒரு இளைஞர் ஆன்லைன் முறையில் சமையல் சேவையை அளிக்கிறார், மத்திய தட்டு மக்களுக்கு ஆன் லைன் முறையில் பெறப்படும் கேட்புக்களுக்கு ஏற்ப உணவு அளித்து வருகிறார். திக்னேஷ் பாடக் என்ற ஒரு இளைஞர் விவசாயிகளுக்காக, அதுவும் குறிப்பாக பசுக்களுக்கு அளிக்கப்படும் தீவனம் தொடர்பான பணியில் ஈடுபட்டு வருகிறார். நமது நாட்டின் பசுக்களுக்கு நல்ல தீவனம் கிடைத்தால், அவை அதிக அளவு பால் தரும், இதன் மூலம் நமது நாட்டின் இளைஞர்கள் சக்தி பெறுவார்கள். மனோஜ் கில்டா, நிகில் ஆகியோர் விவசாய விளைபொருட்களை  சேமிக்கும் இடங்கள் தொடர்பான ஸ்டார்ட் அப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய விளை பொருட்களை மொத்த அளவில் சேமித்து வைக்கும் முறையை மேம்படுத்தி வருகிறார்கள். இப்படி ஏகப்பட்ட உள்ளீடுகள் வந்திருக்கின்றன. மேலும் அனுப்புங்கள். எப்படி ஒவ்வொரு முறையும் நான் தூய்மையான பாரதம் பற்றி என் மனதின் குரலில் கூறி வருகிறேனோ, அதே போல ஸ்டார்ட் அப்புக்களைப் பற்றியும் தொடர்ந்து கூறுவது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று. ஏனென்றால் உங்கள் சாதனைகள் தாம் எங்களுக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன.

எனதருமை நாட்டு மக்களே,

சுத்தம் என்பது இப்போது சுந்தரத்தோடு இணைக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நாம் அசுத்தத்துக்கு எதிராக கோஷங்கள் போட்டு வந்திருக்கிறோம், ஆனால் இதனாலெல்லாம் அசுத்தம் அகலவில்லை. இப்போது நாட்டு மக்கள் அசுத்தம் பற்றிய பேச்சுக்களை விடுத்து, சுத்தம் பற்றிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார்கள். ஏதோ ஒரு வகையில் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதிலும் கூட குடிமக்கள் ஒரு படி முன்னேறி இருக்கிறார்கள். அவர்கள் சுத்தம் செய்வது என்பதுடன், அழகையும் இணைத்திருக்கிறார்கள். ஒரு வகையில் மகுடத்தில் மணி பொறித்ததைப் போல அமைந்திருக்கிறது. அதுவும் சிறப்பாக இதை இரயில் நிலையங்களில் காண முடிகிறது. இப்போதெல்லாம் நாட்டின் பல இரயில் நிலையங்களில் எல்லாம் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த குடிமக்கள், கலைஞர்கள், மாணவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் இவற்றை அழகுபடுத்துவதில் ஈடுபட்டு வருவதை என்னால் பார்க்க முடிகிறது. வட்டாரக் கலையம்சங்களைத் தாங்கி, சுவர்களில் சித்திரங்கள், அழகான முறையில் பெயர்ப் பலகைகள் அமைத்தல், மக்களுக்கு தகவல் அளிக்கும் வகையில் அவற்றை உருவாக்குதல் என ஏராளமான வகைகளில் இவை செய்யப்படுகின்றன. பழங்குடியினப் பெண்கள், அவர்கள் வட்டாரக் கலையம்சத்தால் ஹஸாரிபாக் இரயில் நிலையத்தை மிக நேர்த்தியாக அழகுபடுத்தி இருக்கிறார்கள். டாணே மாவட்டத்தைச் சேர்ந்த 300 தன்னார்வலர்கள் king circle இரயில் நிலையத்தை அழகு படுத்தியிருக்கிறார்கள். மாடுங்கா, போரிவிலி, khar இவை தவிர இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து,  ஸவாய் மாதோபூர், கோடா, என ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நமது இரயில் நிலையங்கள் நமது பாரம்பரியத்தின் சின்னங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இரயில் பயணிகள் இனிமேல் சாளரங்கள் வழியாக தேநீர்-சிற்றுண்டி விற்பனையாளர்களைத் தேடாமல், இரயில் நின்று கொண்டிருக்கும் ஊரின் சிறப்பம்ஸம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் அங்கே இருக்கும் சுவர்களைப் பார்க்கத் தொடங்குவார்கள். இது இரயில்வே துறையின் முனைப்புமில்லை, நரேந்திர மோதியின் முயற்சியும் இல்லை, இது குடிமக்களின் முனைப்பு. குடிமக்கள் ஈடுபட ஆரம்பித்தால் மாற்றம் எவ்வளவு சிறப்பாக அமைகிறது பார்த்தீர்களா? இது தொடர்பாக எனக்கு சில படங்கள் வந்திருந்தாலும், நான் மேலும் படங்களையும் காட்சிகளையும் காண ஆவலாக இருக்கிறேன். தூய்மைப்படுத்துவதோடு சேர்த்து, அழகுபடுத்தும் விதமாகவும் நீங்கள் ஒரு இரயில் நிலையத்திலோ, வேறு ஒரு இடத்திலோ பணி புரிந்திருந்தால், அது பற்றிய விவரங்களையும் புகைப்படங்களையும் எனக்கு உங்களால் அனுப்ப முடியுமா? கண்டிப்பாக அனுப்புங்கள். நானும் பார்ப்பேன், மற்றவர்களும் பார்ப்பார்கள். இதன் மூலம் மற்றவர்களுக்கும் கருத்தூக்கம் ஏற்படும். இது இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோயில்களுக்கு அருகில், சர்ச்சுக்கு அருகில், மசூதிக்கு அருகில், பூங்காக்களில் என ஏகப்பட்ட இடங்களில் இதைச் செய்ய முடியும். இப்படிச் செய்ய யாருக்கு எண்ணம் ஏற்பட்டதோ, யார் இதை முன்னெடுத்துச் சென்றார்களோ, யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ, அவர்கள் அனைவரும்  வாழ்த்தப்பட வேண்டியவர்கள். ஆனால் நீங்கள் செய்தவை பற்றி எனக்குக் கண்டிப்பாக புகைப்படம் எடுத்து அனுப்புங்கள், அதைக் காண நான் ஆவலாக இருக்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

ஃபிப்ரவரி மாதம் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை இந்தியா, விசாகப்பட்டினத்தில் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது எனக்கு மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது, இதில் உலக நாடுகள் அனைத்தும் பங்கெடுக்க இருக்கின்றன. அவர்களை வரவேற்று உபசரிக்க நமது கப்பற் படையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகின் பல நாடுகளின் போர்க்கப்பல்கள் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டின துறைமுகத்தில் கூடுகின்றன. சர்வதேச கப்பல் படை திறனாய்வு International Fleet Review இந்தியக் கரைகளில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவின் கப்பற்படைச் சக்தி, உலக நாடுகளின் கப்பற்படை சக்தி ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் முயற்சியாக இது அமையும். இதில் கூட்டுப் பயிற்சி ஒன்றும் நடைபெறும். மிகப் பெரிய சந்தர்ப்பம் இது. இனி வரும் நாட்களில் உங்களுக்கு இது தொடர்பான தகவல்கள் தொலைக்காட்சி, ஊடகங்கள் வாயிலாக கிடைக்கும். இந்தியா போன்றதொரு நாட்டுக்கு இது அதிக மகத்துவம் நிறைந்தது. இந்தியாவின் கடற்படை சரித்திரம் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்து வந்துள்ளது. சம்ஸ்க்ருத மொழியில் கடலை, உததி அல்லது சாகர் என்று அழைப்பார்கள். அதாவது அளவில்லாத பரப்பு கொண்டது என்று பொருள். எல்லைகளோ, நிலப்பரப்போ நம்மை பிரிக்கலாம், ஆனால் நீர் நம்மை இணைக்கிறது. கடல் நம்மை ஒன்று படுத்துகிறது  நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகள் முன்பாகவே கூட உலகப் பயணம் மேற்கொண்டு இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அது சத்ரபதி ஷிவாஜி மஹராஜ் ஆகட்டும், சோழ சாம்ராஜ்ஜியமாகட்டும், கடற்படை சக்தி என்ற விஷயத்தில் அவர்கள் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.  கடலோடு தொடர்புடைய பல மரபுகளையும், கொண்டாட்டங்களையும் நாம் பல மாநிலங்களில் இன்றும் கூடக் காண முடிகிறது. உலக நாடுகளை நாம் வரவேற்கும் வேளையில், கடற்படையின் சக்தி வெளிப்படுத்தப்படுவது என்பது ஒரு அருமையான சந்தர்ப்பம். இந்த உலகளாவிய கடற்படைச் சந்திப்பில் பங்கெடுத்துக் கொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இன்னொரு புறம், இந்தியாவின் கிழக்குக் கோடியில் அமைந்திருக்கும் கௌஹாத்தியில் தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்க வருகிறார்கள். இதுவும் கூட தெற்காசிய நாடுகளுடன் நம் உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.

எனதருமை நாட்டு மக்களே,

என் மனதில் வருவனவற்றை உங்களோடு திறந்த முறையில் பகிர்ந்து கொள்கிறேன் என்று நான் முன்னமேயே கூட கூறியிருந்தேன். இனி வரும் நாட்களில் 10வது, 12வது வகுப்புத் தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன. கடந்த முறை மனதின் குரல் நிகழ்ச்சியில், நான் தேர்வுகள் தொடர்பாக சில விஷயங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டேன். ஆனால் இந்த முறை, வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வு நடைபெறும் நாளில் தங்கள் மனவழுத்தத்தை எப்படி எதிர்கொண்டார்கள், இதற்கு இசைவாக குடும்பத்தில் சூழல் எப்படி ஏற்பட்டிருந்தது, ஆசிரியர்களின் பங்களிப்பு என்ன, இது தொடர்பாக அவர்களே கூட என்ன முயற்சி மேற்கொண்டார்கள், மூத்த மாணவர்கள் அவர்களுக்கு அளித்த ஆலோசனை என்ன என்பது பற்றியெல்லாம் இனிமையான அனுபவங்கள் இருக்கலாம். இந்த முறை நீங்கள் உங்களது இந்த அனுபவங்கள் குறித்து எனக்கு narendramodi appஇல் எழுதி அனுப்புங்கள். இதில் இருக்கும் நல்ல விஷயத்தை நீங்கள் வரவிருக்கும் ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் உங்கள் ஊடகம் வாயிலாக கொண்டு செல்லுங்கள் என்று ஊடகத் துறையினரிடம் நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இதை நாடு முழுவதிலும் இருக்கும் மாணவர்கள் படிக்க நேரலாம், பார்க்க நேரலாம், மனவழுத்தமில்லாமல் எப்படி தேர்வுகளை எதிர்கொள்வது, மன மகிழ்ச்சியோடு எப்படி தேர்வுகளில் பங்கெடுப்பது என்பதற்கான உத்தி தெளிவாகும். கண்டிப்பாக ஊடக நண்பர்கள் இந்த விஷயத்தில் எனக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நீங்கள் அனைத்து விஷயங்களையும் அனுப்பினால் தானே அவர்களும் உதவி செய்வார்கள்! அனுப்புவீர்கள் இல்லையா? கண்டிப்பாக அனுப்புவீர்கள். மிகவும் நன்றி நண்பர்களே!!

மீண்டும் ஒரு முறை அடுத்த மனதின் குரல் நிகழ்ச்சியில் நாம் கண்டிப்பாக சந்திக்கலாம், மிக்க நன்றி.

குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன், சென்னை வானொலி!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version