- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ் கதைகள்: கடம்ப மலர் எது?

திருப்புகழ் கதைகள்: கடம்ப மலர் எது?

சங்ககாலப்புலவர்கள் சங்க இலக்கியங்களில் கூறியிருக்கும் கடம்பமரத்தில் வெண்கடம்பு (Barrintonia Calyptrata), செங்கடம்பு (Barringtonia Acutangula) என இருவேறு

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 286
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடி மாமலர்க்குள் – சுவாமி மலை
கடப்ப மலர் 3

            கடப்ப மலர் பற்றிய ஒரு குழப்பம் உள்ளது. சங்க இலக்கியம் சொல்லும் கடம்பமலரை, விக்கிபீடியா (Wikipedia) கடம்ப மலர் என்று சொல்லவில்லை. கிருஷ்ணன் கோபியருடன் ஆடி மகிழ்ந்த மரத்தை ஹிந்தியில் “கடம்ப்” என்பார்கள். அதனையே விக்கிபீடியா சொல்கிறது. அதன் தாவரவியற் பெயர் கடம்ப(Cadamba) என முடிவதால் இந்திய மொழிகளில் எல்லாம் அதனை கடம்ப (Neolamarchia Cadamba) என அழைப்பர். அந்த மரத்தை சங்க இலக்கியம் சொல்லும் கடம்பமரம் (kadamba) என பலரும் நினைக்கிறார்கள். அப்பூ உருண்டையாக கோளமாக இருக்கின்றது.  அதன் நிறமோ மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்தே இருக்கின்றது.

            நம்முடைய சங்ககாலப்புலவர்கள் சங்க இலக்கியங்களில் கூறியிருக்கும் கடம்பமரத்தில் வெண்கடம்பு (Barrintonia Calyptrata), செங்கடம்பு (Barringtonia Acutangula) என இருவேறு கடம்பமரங்கள் இருக்கின்றன. கடம்பமரத்தை மராமரம் என்றும் தமிழில் சொல்வர். கடம்பமலர் எப்படி இருக்கும் என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் சொல்கின்றன.

நெடுங்கான் மரா அத்துக் குறுஞ்சினை பற்றி

வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு

(ஐங்குறுநூறு: 383)

வலமாகச் சுழன்று ஒவ்வொரு பூவாக கீழிறங்கி வந்து, தொங்குகின்ற வெள்ளைநிறப் பூங்கொத்தைப் பறிக்க உயர்ந்த கடம்பமரத்தின் சிறுகிளையைப் பற்றிப் பிடித்ததாக ஐங்குறுநூறு சொல்கிறது.

செங்கான் மராஅத்து வரிநிழல் இருந்தோர்

(ஐங்குறுநூறு: 381)

சிவந்த பூ (செங்கான்) உள்ள கடம்பமர நிழலில் இருந்தவர்களை இப்பாடல் வரிகாட்டுகிறது. ஆதலால் செங்கடம்பு மரமும் இருந்தை நாம் தெரிந்து கொள்ளலாம். விக்கிபீடியா காட்டும் கடம்பபூப் போல் கோளமாக, சங்க இலக்கியம் சொல்லும் கடம்ப பூந்துணர் இருக்காது என்பதை முருகனின் மார்பில் அசையும் கடம்பபூமலையை

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து

உருள் பூந்தண்தார் புரளும் மார்பினன்

(திருமுருகாற்றுப்படை: 10 -11)

என்று நக்கீரர் சொல்கிறார். உருள்பூந்தண்தார் என்பது உருளை வடிவான பூந்தார் என்பதையே குறிக்கின்றது. அது உருண்டை (கோளம்) வடிவான பூந்தாரைக் குறிக்கவில்லை. இன்று திருப்பதி என அழைக்கும் இடம் அந்நாளில் வெண்கடம்புக் காடாக இருந்ததால் வெண்கடம் என்றும் வேங்கடம் என்றும் அழைக்கப்பட்டது. அதனை திருப்பதி இறைவனை வெங்கடேஸ்வரன் என்றும் வேங்கடேஸ்வரன் என்றும் சொல்வதால் அறியலாம்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version