― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி 'அந்தக்கால' கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்

பூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி ‘அந்தக்கால’ கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்

“ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் பெரியார் நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்…

இனி பெரியாரின் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா, ‘காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்’ என்றும், அப்பால் ‘பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்’ என்றும், அப்பால் ‘பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்’ என்றும், அப்பால் ‘சனாதன தர்மம் ஒழிய வேண்டும்’ என்றும் அப்பால் ‘இந்து மதம் ஒழிய வேண்டும்’ என்றும், அப்பால் ‘மதங்களே ஒழிய வேண்டும்’ என்றும் சொல்லிக் கொண்டே போனார்! (ஒரே சிரிப்பு)

விரும்பினால் பி.ராமமூர்த்தியை ஆதரிப்பார்: ராஜாஜியை ஆதரிப்பார்: மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். (சிரிப்பு). வேறொரு பித்தம் கிளம்பினால் ‘அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன்’- என்று ஆவேசம் காட்டுவார்.

நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார்: அதற்காகக் காரணம் சொன்னார். (சிரிப்பு). இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்.

அவர் காட்டிய வழியால் தமிழ் நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப் பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல: மாறாகப் பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.

காவேரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் – இந்நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளரந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்கு நேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள்- குளித்துக் கொண்டு இருந்தார்கள். தங்கள் வழக்கப்படி குளித்து, பூசை செய்து கொண்டிருந்தார்கள்.

சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கிக் காவிரி ஆற்றில் எறிந்தார்கள்: அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்: அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள். ஓட ஓடத் துரத்தினார்கள். பெரியாரைப் பின்பற்றுகிற திக வினர் எடுத்த ‘ஜாதி ஒழிப்பு’ நடவடிக்கை இது!

சொம்பைத் தூக்கிக் காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா? (ஒரே சிரிப்பு). காவிரி வெள்ளம் ஒரு தனி மனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபோதே ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா? (சிரிப்பு). நாலைந்து ஆட்களுடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்? (சிரிப்பு). குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதி முறையைக் கல்லால் அடித்ததாகுமா? ஓட்டல்களில் உள்ள டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கினால் சாதி முறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா? (சிரிப்பு)

பூணூலையும் உச்சிக் குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதும் உள்ள பூணூல்களையும், உச்சிக் குடுமிகளையும் உடையவர்களை எல்லாம் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா?

எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக் குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால்…- என்று வைத்துக் கொள்ளுவோம்: சிலரிலிருந்து பலராக விரியும்.

உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும்!(சிரிப்பு). குறிப்பிட்ட ஜாதியைத் தனிமைப்படுத்தி அநாகரிகமான முறையில் கண்மூடித் தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதும் பரவி நிற்கும் ஜாதி முறையை ஒழித்துவிட முடியாது.”

(1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் ப ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் பகுதிகள்)

  • “மேடையில் ஜீவா” நூல் – ஆதாரம் ஈ வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
    by ம வெங்கடேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version