- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் அருளிச் செயலில் மாமுனிகளும் தேசிகரும்

அருளிச் செயலில் மாமுனிகளும் தேசிகரும்

andavan-jeer

அண்ணா… நாங்க சமாஸ்ரயணம் செய்துக்கப் போறோம். நீயும் வாயேன்..!

என் தங்கை அழைத்தபோது, சரி வரேன் என்றேன்.

4 வருடங்களுக்கு முன்னர் இருக்கும். அப்போது நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்த நேரம்.

ஒற்றை நாளை தேற்றிக் கொண்டு மதுரைக்குச் சென்றேன்.

தங்கை கணவரான என் மாப்பிள்ளை வேங்கடேசனும், அவள் மாமனார் சம்பத் மாமாவும் வெகு ஆர்வமுடன் அழைத்துச் சென்றார்கள் அவர்களின் ஆசார்யரான ஆண்டவன் ஜீயர் ஸ்வாமியிடம்.

அப்போது ஸ்வாமி மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோவில் செல்லும் இடத்தில் அவர்களின் ஆச்ரம மண்டபத்தில் வ்ரதகாலத்தில் இருந்தார்.

ஆச்ரமத்தில் ஜீயர் ஸ்வாமியின் கைங்கர்யத்தில் இருந்த … அண்ணா, நமக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமானவர். அவர் அடியேனைக் கண்டபோது, முகம் மலர… செங்கோட்டை ஸ்வாமி வாரும்.. எப்டி இருக்கீர். ஏது இந்தப் பக்கம் என்றெல்லாம் விஜாரிக்கத் தொடங்கிவிட்டார்.

வந்த விவரத்தைச் சொல்லிவிட்டு அளவளாவினேன்.
***
முன்னதாக, ஜீயர் ஸ்வாமியை தெண்டனிடப் போவதால், ஸ்வாமிக்கு ஏதாவது சமர்ப்பிக்க வேணுமே என்றெண்ணி அகத்தில் தேடினேன்.

ஞான ஸ்வரூபியாய்த் திகழும் பெரியோர் பக்கலில் நாம் சமர்ப்பிக்க என்ன இருக்கிறது என்ற எண்ணத்தில் பார்வையைச் செலுத்தியபோது, சட்டென அகப்பட்டது அடியேன் எழுடியிருந்த “தமிழ்மறை தந்த பன்னிருவர்” புத்தகம். விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராக இருந்த போது எழுதிய புத்தகம்.

சரி.. ஸ்வாமி சந்நிதியில் அதைச் சேர்ப்பிப்போமே என்று உடன் எடுத்துச் சென்றிருந்தேன்.
***
அன்று ஆச்ரம சிஷ்யர்களுக்கு சமாஸ்ரயனாதிகள் முடிந்து, திருவாராதனாதிகளும் முடிந்து,

சிஷ்யர்களுக்கு அனுக்ரஹிக்க ஆசனத்தில் எழுந்தருளியிருந்தார் ஜீயர் ஸ்வாமி.

சம்பத் மாமா அடியேனை ஜீயரிடம் என் புள்ளையாண்டானின் மச்சினன் என்று அறிமுகப் படுத்த,

ஸ்வாமியின் கைங்கர்யத்தில் இருந்த அண்ணாவோ… நம் விருத்தாந்தங்களைக் கூறி அறிமுகப் படுத்த…

ஸ்வாமி முகம் மலர அடியேன் கையில் இருந்த புத்தகத்தை வாங்கினார்.

வரிசையாக ஏலக்காய் மாலையும், பழங்கள் நிறைந்த தட்டுகளுடனுமாய் சிஷ்யர்கள் பலர் … காத்திருந்தார்கள்.

வரிசை நீண்டிருந்தது…

ஜீயர் ஸ்வாமி புத்தகத்தின் முன் பின் அட்டைகளைத் திருப்பித் திருப்பி சுவாரஸ்யமாகப் பார்த்தார். முதல் பக்கம் புரட்டினார். இரண்டாம் பக்கம்… மூன்றாம் பக்கம்…

தொடர்ந்து ஒவ்வொரு பக்கமாகப் பார்க்கத் தொடங்கினார்.

அடுத்து ஒவ்வொரு பக்கமாகப் படிக்கவும் தொடங்கினார். சில இடங்களில் ஆழ்ந்து வாசிக்கத் தலைப்பட்டார்.

சுமார் 20 நிமிடங்கள்… இருக்கும்! சிஷ்யர்கள் பாவம்… வரிசையில்!

சிலர் அடியேனைத் திட்டிக் கொண்டிருந்திருக்கலாம்! இவன் என்ன இப்படி குறுக்கே என்று!

ஆனால்… எனக்கு திக் திக் என்றிருந்தது. ஸ்வாமியின் பக்கலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் எங்கெல்லாம் பார்வையை அதிகம் பதித்து ஆழ்ந்தாரோ… அங்கெல்லாம் என்ன சம்ப்ரதாயப் பிரச்னைகள் வரும் என அடியேனுக்கும் தெரியும்!

ஆயிற்று…

அவ்வளவு நேரம் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தவர்… அடியேனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்…

அது அனுக்ரஹிக்கும் பார்வையுமல்ல, எரித்து விடும் கோபக் கனல் பார்வையும் அல்ல… ஆனால் ஏதோ ஒரு ஏமாற்றப் பார்வை! புரிந்தது!

அடுத்த நொடி அவரிடம் இருந்து வந்தன இடிபோன்ற சொற்கள்…

“நீர் மாமுனி சம்ப்ரதாயஸ்தர்ங்கிறதால், ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களுக்குச் செய்ததெல்லாம் இல்லாமல் போய்விடுமா?”

“இல்லை.. ஸ்வாமி.. அடியேன் பாடம்…! அப்படி…; அடுத்த நூல் எழுதும்போது ஸ்வாமி தேசிகரின் பாக்களையும் ரெஃபரன்ஸுக்கு எடுத்துக்கறேன்…”

– எப்படியோ மென்று விழுங்கினேன்..

காரணம், அடியேன் எழுதியிருந்த அந்த நூலில், பன்னிரு ஆழ்வார்களையும் அறிமுகப் படுத்தும் விதத்தில், ஒரு பயோ டேடா போன்று,

பெயர், அம்சம், திருநட்சத்திரம், அவதரித்த தலம், பாசுரங்கள், மணவாள மாமுனிகளின் உபதேச ரத்னமாலையில் இருந்து ஆழ்வார்கள் ஒவ்வொருவர் குறித்த பாசுரம்… என்று கொடுத்திருப்பேன்.

ஸ்வாமி அதை உன்னிப்பாகப் பார்த்துவிட்டு, அவ்வாறு கேட்டார் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்!

***
நமக்கு சம்ப்ரதாய அளவில் விருப்பு வெறுப்பு கிடையாது; பகவத் விஷயத்தில் மாமுனிகளும், தேசிகரும் நமக்கு இரு கண்கள்.

அடியேன் சிறு வயதில் தேசிக ப்ரபந்தம் படித்திருக்கிறேன் என்றாலும், அதை அப்போது உடனே கையாள எடுத்துக் கொள்ளவில்லை!

ஸ்வாமி தேசிகரின் ப்ரபந்தங்கள் அவ்வளவு இனிமையானவை. அவருடைய ஆஹார நியமம் குறித்து மஞ்சரியில் கட்டுரை வெளியிட்டிருக்கிறேன். பரமபத சோபானம் குறித்தும், ஆழ்வார்கள் குறித்து அவர் எடுத்தாண்ட விஷயங்களையும் இன்று ஓர் இடத்தில் திருப்தியாகக் கையாள முடிந்தது பெரும் பேறு.

**
இன்று ஒரு நிகழ்ச்சியில் அடியேன் கையாண்ட ஸ்வாமி தேசிகரின் வார்த்தைகள்… தேசிக ப்ரபந்தத்தில் இருந்து….

***
மீனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னும் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தருளுங் கல்கியாய் மற்றும்
மலிவதற்கு எண்ணும் வல்வினை மாற்ற
நாலா உருவங்கொண்டு

***
மாளாத வினை அனைத்தும் மாள நாம் போய்
வானேறி மலர் மகளார் அன்பு பூணும்
தோளாத மாமணிக்குத் தொண்டு பூண்டு
தொழுது உகந்து தோத்திரங்கள் பாடியாடிக்
கேளாத பழ மறையின் கீதம் கேட்டுக்
கிடையாத பேரின்பம் பெருக நாளும்
மீளாத பேரடிமைக்கு அன்பு பெற்றோம்
மேதினியில் இருக்கின்றோம் விதியினாலே!

***
ஆரண நான்கின் பொருளை
ஆழ்வார்கள் ஆய்ந்தடைவே
அன்புடனே அம்புவியோர் அனைவரும் ஈடேற வென்று
நாரணனார் தாள்களிலே
நாலாயிரந் தமிழால்
நண்ணி உரை செய்தவற்றை நாடி….
***
வையகமெண் பொய்கை பூதம் பேயாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவிகள்
பொய்யில் புகழ்க்கோழியர்கோன் விட்டுசித்தன்
பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்
ஐயன் அருட் கலியன் எதிராசர் தம்மோடு
ஆறிருவர் ஓர் ஒருவர் அவர்தாம் ….

***
அனைத்துலகும் காக்கும் அருளாளர் வந்தார்
அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார் வந்தார்
தினைத்தனையும் திருமகளை விடாதார் வந்தார்
தேசொத்தார் மிக்காரும் இல்லார் வந்தார்
நினைக்க நமக்கு இன்னறிவு தந்தார் வந்தார்
நிலை நின்ற உயிர்தோன்ற நினைந்தார் வந்தார்
எனக்கு இவர் நான் இவர்க்கு என்ன இனியார் வந்தார்
எழுத்து ஒன்றில் திகழ நின்றார் வந்தார் தாமே
****
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரும் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version