- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஏ தெய்வமே! உனக்கு இதயம் இருக்கா?

ஏ தெய்வமே! உனக்கு இதயம் இருக்கா?

“ஏலே, மண்டையில உனக்கு அறிவிருக்கா…? ”
– ஏதோ சிறு தவறு செய்துவிட்ட சிறுவனைப் பார்த்துக் கேட்டார் ஒருவர்.
இந்தக் காலப் பையனில்லையா அவன்… “உங்கள்ட்ட இருந்தா கொஞ்சூண்டு குடுங்க…!”
– வெடுக்கெனச் சொல்லி விட்டான். இவர் முகம் பரிதாபமாக “ஙே’ வென்று தொங்கிப் போனது.
ஆமாம்… ஒருவரிடம் இல்லாததைத் தானே அவர் மற்றவரிடம் இருக்கிறதா என்று கேட்பார். இப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ளும் காலம் இது.
இது இந்தக் காலத்தில் மட்டும்தானா? ஏன் அந்தக் காலத்தில் இல்லையா என்ன? இருக்கிறதே! இப்படி ஒரு எண்ணத்தை நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார் ஒரு கவிஞர். ஆனால் வெளிப்படுத்திய விதமும், இட வகையும் நம்மை நெளிய வைக்காமல், ஆனந்தத்தைத் தருகிறது.
***
நாம் இறைவனிடம் என்னவெல்லாமோ பிரார்த்திக்கிறோம். நமக்குத்தான் எத்தனை எத்தனை ஆசைகள். ஆசைப்படுவதை எல்லாம் பகவான் பகவான் என்று அவன் முன்னால் வைத்து, அது உடனே நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் பிரார்த்தனையைச் செய்கிறோம். நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனக் கஷ்டங்கள். இந்தக் கஷ்டங்களுக்கான மூல காரணம் அதீத ஆசை என்று நமக்கே தெரியும். இருந்தாலும் தெய்வம் எதற்கு இருக்கிறது? நாம் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி வைக்கத்தானே…! இது நம் சாதாரண மன இயல்பு.
நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால், உடனே நம் கோபம் திரும்புவது அதே இறைவன் மீதுதான்!
உன்னைத்தானே மலை போல நம்பியிருந்தேன்… நீ இப்படி காலை வாரிவிட்டுட்டியே! என்று குறை சொல்லிப் புலம்புவதும் அதே இறைவனிடம்தான்! அடுத்து நம் கோப வார்த்தைகள் அவனைப் பார்த்துத் திரும்பும்… சே! நீ என்ன கல்லா? உனக்கு இதயமே கிடையாதா?
– இப்படித்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை… வேறு விதமாகவும் சொல்லலாம். எப்படி? அதற்குத்தான் ஒரு சம்ஸ்க்ருதக் கவிஞர் நமக்கு ஒரு வழியைக் காட்டியிருக்கிறார்… இதையே இப்படியும் சொல்லலாமென்று!
***
பக்தர் ஒருவர். திருவீதியில் எழுந்தருளும் பெருமானுக்கு எதையாவது சமர்ப்பிப்பது அவர் வழக்கம். அன்றும் அப்படித்தான். பெருமான் திருவீதியுலா வந்தார். இவரது வீட்டு வாசலிலும் பெருமாள் எழுந்தருளிவிட்டார். இவரோ அன்று பார்த்து நைவேத்யத்துக்கு என்றும் ஒன்றுமே தயார் செய்து வைக்கவில்லை. வெறுங்கையோடு பெருமாள் முன் போய் நின்றார். பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல், உண்ணக் கொடுக்க வேண்டிய இடத்தில் கவிதையைப் படைத்துப் பாடினார்.
ரத்நாகரஸ் தவ க்ருஹம் க்ருஹிணீ ச லக்ஷ்மி:
கிம் தேய மஸ்தி பவதே புருஷோத்தமாய |
ஆபீரவாம நயநா ஹ்ருதமாநஸாய
துப்யம் ப்ரதத்தம் இதமஸ்து மநோ மதீயம் ||
பெருமாளே! மாகடல் நீருள்ளான் என்றபடி, உன் வாசஸ்தலம் ரத்நாகரம். உன் மனைவியோ மகாலட்சுமி. நீயோ புருஷோத்தமன் என்று பெயர் பெற்றவன். இப்படிப்பட்ட உனக்கு நீசனான நான் என்ன சமர்ப்பிக்கப் போகிறேன். எதையாவது கொடுக்க வேணும் என்றாலும், உன்னிடம் இல்லாத ஒன்றைத்தானே நான் சமர்ப்பிக்க வேணும்? உன்னிடமோ எல்லாமே இருக்கிறது. இருந்தாலும் யோசித்துப் பார்த்ததில் உன்னிடம் ஒன்று மட்டும் இல்லாமல் இருக்கிறது எனக்குத் தெரிகிறது. அது எதுவென்றால், உன் நெஞ்சு. அதைத்தான் அந்தத் திரு ஆய்ப்பாடி மங்கைகள் கொள்ளை கொண்டு போய்விட்டார்களே. அதனால் இப்போது உன்னிடம் இல்லாமல் இருக்கும் அந்நெஞ்சை இதோ அடியேன் இப்போதே சமர்ப்பிக்கிறேன். இதனைப் பெற்றுக் கொண்டு, நீ நெஞ்சமும் பெற்று நிறை உள்ளவனாய்த் திகழ்வாய்…!!!
***
இல்லாத கண்ணை கண்ணப்பன் கொடுத்தான். அவனிடம் இல்லாத நெஞ்சை இதோ அடியேனும் சமர்ப்பிக்கிறேன்!!!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version