- Ads -
Home இலக்கியம் கவிதைகள் முக்தி தரும் முகுந்தன்!

முக்தி தரும் முகுந்தன்!

ranganagar
ranganagar

செல்லும் வழி எல்லாமே கண்ணன் முகமே
சொல்லும் மொழி எல்லாமே கண்ணன் பெயரே!
செய்யும் செயல் எல்லாமே கண்ணன் செயலே
உய்யும் வழி எல்லாமே கண்ணன் வழியே!(1)

ஆழ்வார்கள் வழி வந்த அடியவன் நானும்
தாழ்வாகக் கேட்பது முக்தி வரமன்றோ
பாபங்கள் செய்த பாமரன் நானோ
சாபங்கள் தொடராது சரண் புக வேணோ!(2)

பிறந்தப்பின் நீயே துணைனெ வந்தேன்
இறந்தபின் நீயே துணைவர வேண்டும்
இடைப்பட்ட காலம் இன்னல்கள் போக
அடைப்பட்ட கூட்டில் விடுபட வேண்டும்.(3)

சுழலும் சக்கரத்தைக் கொண்ட‌யென் ஸ்ரீனிவாசா
சுழலாது இருக்கச்செய் என் கர்மச்சக்கரத்தை
சுழலும் சூழ்நிலையில் நல்வினை அருளிடவே
சூழ்மலை ஏழு கொண்ட ஸ்ரீவெங்கடேசா!(4)

மாயைகள் சூழ்ந்து மறைக்கும் நேரம்
மாயோனே மாதவா விலக்கிடுவாயோ
அறியாமையில் நான் ஆழ்ந்திருந்தாலும்
அறிதுயிலமர்ந்தோன் வழியே தெளிந்திடவருட்செய்!(5)

நாசியில் நுழையும் திருத்துழாய் மனம்போல்‍ ‍பர‌
தேசியாம் என்னுள் நுழைந்தாய் லக்ஷ்மி பங்கா!
எங்கும் எதிலும் நீ இருப்பாய் இருப்பினும் என்னுள்
தங்கி நல்வழி நடத்தும் நாரணன் காண்பதெப்போது ?(6)

முடியாத வாழ்வும் முடியுமென்று ஒரு நாள்
முடியாது யானும் முயற்சிக்க முயல்கிறேன்
வேண்டாத பிறவி பல முறையெடுத்தும்
வேண்டும் மனதிற்கு வரும் துணை நீயே!(7)

பிணிச் சுவைத்தவுடலோ அழலலென்றாகும்
பணியென்றதுவரை பூதாத்மன் தாள் பனிவோம்
மணிவண்ணா நின் மார்பில் அலைமகள் போல‌
பிணைப்புடன் நிர்குணன் என் மார்பில் வேண்டும்!(8)

காரணமின்றி உன் செயல் இல்லை
காரணமின்றி என் பிறப்பில்லை
காரணம் தெரிந்தால் காரியமில்லை
காரியம் முடிந்தப்பின் என்னிருப்பில்லை.(9)

கடல் சூழ்ந்த மண்ணுலகம் போல கருங்
கடல்வண்ணன் சூழ்ந்த என்னுலகம் வாழ‌
அரண்னென்று அரியை அறிந்திடுவோர்க்கு
முரனில்லா வாழ்வும் முக்தியும் கிட்டும்!(10)

கம்பத்தடியான் (email: viruvasan@gmail.com)

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version