- Ads -
Home உள்ளூர் செய்திகள் எடப்பாடி அரசு தானாகவே கவிழும்; சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்: மைத்ரேயன் எம்.பி.,

எடப்பாடி அரசு தானாகவே கவிழும்; சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்: மைத்ரேயன் எம்.பி.,

சென்னை:

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும் என்றும், எடப்பாடி கவிழ்ந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் வா.மைத்ரேயன் எம்.பி., கூறினார்.

அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் உங்களுக்காக டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் சுனில் ஏற்பாடு செய்திருந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழா தி.நகர் பனகல்பார்க் அருகே இன்று காலை நடைபெற்றது. இதை வா.மைத்ரேயன் எம்.பி. திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், அதிமுக., இரு அணிகளின் இணைப்பு குறித்தும் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்த மைத்ரேயன், இரு அணிகள் இணைப்பு பற்றி தவறான தகவல்களை 2 அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். அந்த லாவணி கச்சேரிக்குள் நான் போக விரும்பவில்லை. நாங்கள் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் பற்றி கவலைப்படுகிறோம். 122 கூவத்தூர் எம்.எல்.ஏ.க்கள் பற்றி கவலைப்படவில்லை… என்று குறிப்பிட்டார். மேலும், சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும். அதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதிலிருந்து…

அ.தி.மு.க இரு அணிகளும் இணைவது என்பது, இரு தர்ப்பு பேச்சுவார்த்தையை பொறுத்து தான் அமையும். பேச்சுவார்த்தைக்கான அடிப்படை நிபந்தனைகளை ஓ. பன்னீர்செல்வம் விதித்துள்ளார். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்கு முகாந்திரம் அமையும். ஏற்கெனவே கழகத்தின் தாற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று தேர்தல் கமி‌ஷனில் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம். அது குறித்து வாதங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. எனவே தேர்தல் ஆணையம் முடிவை விரைவில் அறிவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என்று அனைத்து தரப்பு கழகத்தினரும் ஓ. பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை வைத்து பிரமாண பத்திரங்களை தேர்தல் கமி‌ஷனில் கொடுத்துள்ளோம். இது தொடர்ந்து நடைபெறும். விரைவில் ஓ. பன்னீர்செல்வம் வசம் இரட்டை இலை சின்னம் வரும்.

இந்த ஆட்சியைப் பொறுத்த வரையில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து சொல்லவில்லை. ஆட்சியின் அலங்கோலம், அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு அதன் காரணமாக பாரம் தாங்காமல், இந்த அரசு தானாகவே கவிழும்.

அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா சம்பந்தமாக 3 அமைச்சர்கள், தில்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் தங்கள் பணியை தொடரவிடாமல் தடுத்ததாக போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் கொடுத்திருந்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

தற்போதைய ஆட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. மக்கள் ஆதரவும் இந்த ஆட்சிக்கு இல்லை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கழக தொண்டர்களை நம்புகிறோம். தமிழக மக்களை நம்புகிறோம் அது தான் எங்களது பலம்… என்று கூறினார் மைத்ரேயன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version