- Ads -
Home உள்ளூர் செய்திகள் உருவாக்கப்பட்ட ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

உருவாக்கப்பட்ட ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

kalazhakar 2
kalazhakar 2

அழகர் மலையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கள்ளழகர் இன்று பச்சைப்பட்டுடுத்தி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து செயற்கை வைகை ஆற்றில் இறங்கினார்.

பக்தர்கள் ஆன்லைன் மூலம் கள்ளழகரை தரிசனம் செய்தனர். அழகர் கோவில் கோட்டை வாசலில் காத்திருந்த பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி கள்ளழகரை வழிபட்டனர்.

சுந்தர தோளுடைய அழகன், குடியிருக்கும் மலை திருமாலிருஞ்சோலை. மலை அழகா ! இல்லை பெருமாள் அழகா ! என வியக்கும் வண்ணம் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாத அழகுடையது. ஆண்டுதோறும் மலைமேல் வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மனமிறங்கி இறைவனே மக்களை காண வரும் நாள் சித்ரா பௌர்ணமி.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாட்களுக்கு முன் அழகர் கோவில் சித்திரை திருவிழா துவங்கும்.

மதுரை அழகர்கோவிலில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கோவில் வளாகத்திலேயே திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. நான்காம் நாளாம் திருவிழாவான கள்ளழகர் எதிர்சேவை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கண்டாங்கி புடவை கள்ளர் திருக்கோலத்தில் காட்சி அளித்தார் சுந்தரராஜ பெருமாள். பக்தர்கள் ஆன்லைனில் கள்ளழகர் எதிர்சேவையை தரிசனம் செய்தனர்.

kalazhakar

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதற்காக கோவில் ஆடி வீதி நந்தவனத்தில் செயற்கையாக வைகை ஆறு, மதுரை ஏவி மேம்பாலம் போல பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து சூடிக்கொடுத்த மாலை அணிந்து தங்கக்குதிரை வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்த கள்ளழகர் செயற்கை வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலித்தார். அங்கு கூடியிருந்த கோவில் நிர்வாகிகள் கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

https://dhinasari.com/wp-content/uploads/2021/04/kalazhakar.mp4

அழகர் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் கோட்டை வாசலில் கூடியிருந்த பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி கள்ளழகரை வழிபட்டனர். ஏராளமானோர் கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

நாளை 28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் அழகர் புறப்பாடு நடைபெறுகிறது, 29ஆம் தேதி காலை 10 மணிக்கு கருட சேவையில் எழுந்தருளி மண்டூக மகரிஷிசிக்கு மோட்சம் அளிக்கிறார் பெருமாள். 30ஆம் தேதி காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு சேவை நடைபெறுகிறது. மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு அர்த்தமண்டப சேவையும், 2ஆம் தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது.

வரும் ஆண்டுகளிலாவது கள்ளழகர் மதுரைக்கு வந்து தங்க குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலிக்க வேண்டும் என்று மனமுருகி பக்தர்கள் வேண்டிக்கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version