- Ads -
Home உள்ளூர் செய்திகள் போலீஸார் தாக்கி அவமானப் படுத்தியதால் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்

போலீஸார் தாக்கி அவமானப் படுத்தியதால் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்

போலீஸார் தன்னை தாக்கி அவமானப் படுத்தியால் தீக்குளித்த கார் டாக்ஸி டிரைவர் மணிகண்டன், இன்று மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது இறப்புக்குக் காரணமான போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தாம்பரம் பகுதியில் தங்கியிருந்தபடி, கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக பணியில் இருந்தார். இவர், நேற்று மாலை வேளச்சேரிக்கு வாடிக்கையாளரை இறக்கிவிட்டு கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வேளச்சேரி போக்குவரத்து போலீசார் 4 பேர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த மணிகண்டன் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்ததாகத் தெரியவந்ததும் போலீஸார் காரை நிறுத்தினர். ஏன் சீட் பெல்ட் அணியாமல் வந்தாய் என்று கேட்டு, அவர்மீது வழக்குப்பதிவு செய்வதாகக் கூறிய போக்குவரத்து போலீசார், அவரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து போலீசாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அபராதத் தொகை கட்டி ரசீது வாங்கிச் சென்ற மணிகண்டன், மீண்டும் அந்தப் பகுதியில் வந்து, வாகனச் சோதனை என்ற பெயரில் போக்குவரத்து போலீஸார் யாரிடம் எல்லாம் லஞ்சம் பெறுகின்றனர் என்று அருகில் இருந்து கொண்டு செல்போனில் படம் பிடித்தாராம். இதனால், போக்குவரத்து போலீசார், டிரைவர் மணிகண்டனை அருகில் உள்ள போலீஸ் பூத்துக்கு கூட்டிச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் மணிகண்டனின் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறித்துக் கொண்டனர்.

போலீசார் தன்னை தாக்கியதை அவமானமாகக் கருதிய டிரைவர் மணிகண்டன், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து 1 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்தார். தனது கார் முன் வந்து, போக்குவரத்து போலீசார் கண் எதிரேயே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவரது உடலில் தீ பரவியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அங்கிருந்து ஓடி விட்டனர். ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் ஓடி வந்து மணிகண்டன் உடலில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார்.

இதைக் கண்டதும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் அங்கு திரண்டு வந்தனர். எதற்காக தீக்குளித்தாய்? என மணிகண்டனிடம் விசாரித்தனர். அவர்களிடம் நடந்ததைக் கூறினார் மணிகண்டன். .இதனால் அந்த போக்குவரத்து போலீஸ்காரரும் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்தத் தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கானோர் அங்கே திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்குள் தரமணி போலீஸ் ரோந்து வாகனம் அங்கு வந்து, தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய டிரைவர் மணிகண்டனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்று இன்று மணி கண்டன் உயிரிழந்தார்.

இந்நிலையில் கார் டிரைவர் தீக்குளித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version