- Ads -
Home உள்ளூர் செய்திகள் மூத்த தலைமுறை நகைச்சுவை நடிகர் நீலு காலமானார்

மூத்த தலைமுறை நகைச்சுவை நடிகர் நீலு காலமானார்

neelu neelakantan

மூத்த தலைமுறையைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் நீலு என்ற ஆர். நீலகண்டன் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இன்று காலமானார். அவருக்கு வயது 82.

திரைப்படங்கள் காலத்துக்கு முன்னர் நாடக உலகில் கோலோச்சியவர். நகைச்சுவை நாடகங்கள் பலவற்றில் தூக்கலான நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தவர். குறிப்பாக, தனது கனத்த கண்ணாடியை மேலும் கீழும் ஏற்றி இறக்கி, கண்களை உருட்டி, பற்களை வெளிக்காட்டி கோணல் வாயுடன் அவர் வெளிப்படுத்தும் வசனங்கள், ரசிகர்களை உடனே சிரிக்க வைப்பவையாகத் திகழ்ந்தன.

பழம் பெரும் நாடக நடிகர்கள் சோ ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், மௌலி உள்ளிட்டோரின் நாடகக் குழுக்களில் நடித்தவர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் களம் கண்டவர். குறிப்பாக பள்ளிக் கூட நாட்களிலேயே மேடை நாடகங்களில் நடிக்க வந்துவிட்டவர் நீலு.

சோ ராமசாமியின் தம்பி அம்பியுடன் இணைந்து விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக் கம்பெனியை துவக்கி நடத்தினார். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்களில் இவருடைய நாடகங்களை அண்மைக் காலம் வரையில் பார்த்து ரசித்தவர்கள் பலர். சோ ராமசாமியுடன் இணைந்து இவர் நடித்த ‘எங்கே பிராமணன்’ தொடரில் பாகவதர் வேடத்தில் நடித்த இவரது நடிப்பு, மிகவும் புகழ் பெற்றது.

சோ ராமசாமியின் நாடகங்கள் நீலு இல்லாமல் களை கட்டியதில்லை. யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என நாடகங்கள் நீலுவுடன் இணைந்தே இன்றளவும் ரசிகர் நெஞ்சங்களில் ஆழப் பதிந்துள்ளன.

1960இல் துவங்கி கிட்டத்தட்ட அறுபதாண்டு நாடக மேடை வாழ்க்கையைத் தொட்டுவிட்டவர். நாடக மேடைகள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறிய வயதிலேயே வந்துவிட்டார். 1966 இல் இவர் அறிமுகமான முதல் திரைப் படம் ஆயிரம் பொய். இந்தப் படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன்.

தொடர்ந்து நூற்றுக்கு நூறு, கெரளவம், பாரத விலாஸ், முகமது பின் துக்ளக், வேலும் மயிலும் துணை என கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களாகட்டும், அண்மைக் கால வண்ணப் படங்களான கமலின் அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்பல் கே சம்பந்தம், அஜித்தின் தீனா, விக்ரமின் அந்நியன், 2013ல் வந்த கல்யாண சமையல் சாதம் என 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணசித்திர வேடத்திலும் நடித்தவர் நீலு.

அண்மைக் காலமாக உடல் நலம்குன்றி இருந்த நீலு, இன்று மாலை காலமானார்.

3 COMMENTS

  1. பழக இனியவர்.நல்ல நகைச்சுவை நடிகரை தமிழ் நாடு இழந்து விட்டது

  2. தமிழக திரைப்பட துறைக்கு ஒரு பெரும் இழப்பு. ஒரு நல்ல கலைஞரை இழந்துவிட்டது தமிழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version