- Ads -
Home News Sinthupatti Perumal koil- near Madurai Thirumangalam

Sinthupatti Perumal koil- near Madurai Thirumangalam

sinthupatti+perumal+koil36





























மதுரை – திருமங்கலம் – சிந்துபட்டி – தென் திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி திருக்கோயில்இங்கே நீங்கள் காண்பது, மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள சிந்துப்பட்டி ஊரில் உள்ள தென் திருப்பதி என்று போற்றப்படும் ஸ்ரீவேங்கடாசலபதி திருக்கோயில் படங்கள்.
இந்தக் கோயில் மிக அழகாக, புதுமையும் பழமையும் நிறைந்ததாக உள்ளது. அருமையான சுற்றுப் புறம். அழகான சிறிய கோபுரம். கோயிலின் உள்ளே ஒரு கிணறு. பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சன்னிதிகள். சக்கரத்தாழ்வாருக்கு தனியாக சன்னிதி கட்டியிருக்கிறார்கள். அண்மையில் இந்தக் கோயிலுக்கு திருக்குடமுழுக்கு வைபோகம் நன்றாக நடந்தேறியுள்ளது. இங்கு கம்பம் கழுவுதல் என்பது பாரம்பரியமாக நடைபெற்றுவரும் வழிபாடு. அதை கம்பத் திருமஞ்சனம் என்று சொல்வர்.
எல்லாக் கோயில்களிலும் கொடிமரம் கருடக் கொடியோடு திகழும். ஆனால் இந்தப் பெருமாள் கோயிலில் கருப்பண்ண சாமி கொடிமரம் உள்ளது. ஆகவே வரும் மக்களுக்கு பிரசாதமாக விபூதியும் வழங்கப்படுகிறது – இந்தக் கொடிமரத்தின் கீழ்…
நல்ல அமைப்பான வாகனங்கள் இருக்கின்றன. எங்கள் குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் இந்த வேங்கடாசலபதிப் பெருமானை தரிசிப்பதற்காக பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் இருந்து சிந்துப்பட்டிக்குச் சென்றிருந்தேன். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை…

இனி கோயிலின் வரலாறு…
————————————————————————————————–

இங்கே நீங்கள் காண்பது, சிந்துப்பட்டி கிராமத்தில், கிராம தேவதையாக வழிபடப்படும் கருப்பர் சந்நிதி. இவர், பெருமாள் சந்நிதியைப் பார்த்தவாறு உள்ளார். இவருக்க்கும் பெருமாள் கோவிலுக்கும் தொடர்பு உண்டு என்பது தல வரலாறு.

அடுத்தது, சிந்துப்பட்டி கிராமத்திலுள்ள மிகப்பெரிய ஏரியைக் காத்துக் கொண்டிருக்கும் காவல்தெய்வம்…

————————————————————————————————-
இவர்தான் சிந்துப்பட்டி ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள்…

பெருமாள் கோயில் என்றால், துளசியும் தீர்த்தமும்தானே பிரசாதமாகப் பெறுவோம். கூடவே, விபூதியும் தருகிறார்கள் என்றால்பெறுகின்ற நமக்கு வியப்பாகத்தானே இருக்கும். அது எந்தக் கோயில்? விபூதி தருவதற்கு என்ன காரணம்?


அதற்கு நாம் சிந்துப்பட்டி செல்ல வேண்டும். மதுரை மாவட்டம்திருமங்கலம்உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள பழைமையான வேங்கடேச பெருமாள் கோயிலில்தான் இந்த விசித்திரம். கோயிலின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான விளக்கம் கிடைக்கும்.


கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், தக்காண பீடபூமி மற்றும் தென்பகுதியில் சுல்தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் ஆளுகைக்கு எதிராகத்தான், விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் பல அதன் பிறகு புத்துயிர் பெற்றன.

திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சந்திரகிரிக் கோட்டை பகுதி, விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளு கையில் இருந்தது. கி.பி.1530-களில், கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப் பிறகு, சுல்தான்கள் படையெடுத்து, சந்திரகிரிக் கோட்டையை தாக்கி சின்னாபின்னப் படுத்தினர்.


சந்திரகிரிக்கோட்டை பகுதியில், கஞ்சி தேசத்தைச் சேர்ந்த நாயக்கர் இனத்தவர் ஏராளமாக வசித்தனர். அவர்களில் சிலர் விஜயநகர வம்சாவளியினர். சுல்தான்களால், அவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுடைய இனத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, அந்தப்புரத்தில் தள்ளினராம். ஒருமுறைதாங்கள் கௌரவமாகக் கருதும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தருமாறு சுல்தான் கட்டளையிட, அதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர் அந்தக் குடும்பத்தார்.


ஆனால் தங்கள் இனத்துப் பெண்கள், சுல்தான்களின் அந்தப்புரத்தில் அவதியுறு வதை விரும்பாத சில குடும்பங்கள், இரவோடு இரவாக நாட்டை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிச் சென்றன. அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவிபூதேவி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றையும் தாண்டி தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வழியில், ஒரு கிராமத்தில் அன்று இரவு தங்க நேர்ந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓர் இடத்தில் வைத்தனர். தங்களுடன் எடுத்து வந்த பூஜைப் பொருட்களைக் கொண்டு, உற்ஸவ விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பத்திரப்படுத்தி வைத்தனர்.


பொழுது விடிந்தது. தொடர்ந்து பயணிக்க வேண்டுமே என்று எண்ணி, பூஜைப் பொருள்கள் வைத்திருந்த பெட்டிகளுடன், பெருமாள் உற்ஸவ விக்கிரகங்களை வைத்திருந்த பெட்டிகளையும் தூக்க முயன்றனர். ஆனால், ஆச்சரியம்அந்தப் பெட்டிகளை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை! அப்படி ஒரு கனம். வேறு வழியில்லாமல், பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அங்கேயே தங்கினர்.


அன்று இரவுஅந்தக் குழுவிலிருந்த பெரியவர் ஒருவரின் கனவில் பெருமாள் காட்சி தந்தார். ”நீங்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. அப்படி ஏதும் நடக்காமல் நான் உங்களைக் காப்பேன். நாளை காலைபெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று கண்மாய்க்குக் கீழ்ப்புறத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் போட்டுவிட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும். அந்த இடத்தில் என் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புங்கள்…’என்று சொல்லி மறைந்தார். கண்விழித்த பெரியவர், தனது கனவு பற்றி அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, எல்லோரும் பெருமாளின் திருவருளை வியந்து போற்றி விடியலுக்காகக் காத்திருந்தனர்.


மறுநாள் காலையில், கனவில் பெருமாள் சொன்னது போல், வானத்தில் வட்ட மிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, சற்று தொலைவில் இருந்த புளிய மரத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்கிரகத்தை வைத்து, தேவியர் சகிதராக பெருமாள் மூலவரையும் பிரதிஷ்டை செய்து, கோயிலும் எழுப்பினர்.


புளியம்பழத்தை தெலுங்கில் சித்தப்பண்டு என்பர். புளிய மரத்தின் அருகே கோயில் அமைந்ததாலும், அங்கவஸ்திரம் புளியமரத்தில் விழுந்து இடத்தைக் காட்டிக் கொடுத்ததாலும், அந்த இடத்தை சித்தப்பண்டூர் என்றார்களாம். அதுவே பின்னாளில் சிந்துப்பட்டி ஆனதாம். மேலும், இங்குள்ளோர் பெருமாள் மீது சிந்துப் பாடல்கள் நிறைய பாடியிருக் கிறார்களாம். அதனாலும் சிந்துப்பட்டி என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.


இந்தக் கோயிலில் மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதி. தாயார் அலர்மேல் மங்கையாக அருள்கிறாள். திருப்பதியில் உள்ளது போன்ற அமைப்புதான். ஆனால் பெருமாள், ஸ்ரீதேவிபூதேவி என உபயநாச்சிமாரோடு காட்சி தருகிறார்.


கொடிமரமும் விபூதி பிரசாதமும்

கோயிலின் கொடிமரம் வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக கருடக் கொடியுடனும், கொடி மர உச்சியில் கூப்பிய கரங்களுடன் கருடன் இருப்பதுபோலும்தான் கொடிமரம் இருக்கும். பிரம்மோற்ஸவம் போன்ற உற்ஸவக் காலங்களில்தான் கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.


ஆனால் இங்கேகொடிமரத்தில் கருப்பண்ணசாமி ஆவாஹனம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இந்தக் கொடிமரத்தின் கீழே விபூதி பிரசாதம்தான் கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் செய்விப்பதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகிறார்கள். இதற்கு கம்பம் கழுவுதல்என்று பெயர். விளக்கெண்ணெய் மற்றும் தயிர் கலந்து, கொடிமரத்தின் மேல் உச்சியில் இருந்து தடவி, அதற்கு திருமஞ்சனம் நடக்கிறது. பிறகு, கொடி மரத்துக்கு மிகப் பெரிய வஸ்திரம் சார்த்தி, விபூதி அர்ச்சனை செய்யப்படுகிறது. அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.


ஊருக்குள் நுழையும்போது, கருப்பர் சந்நிதி ஒன்றைக் காண்கிறோம். அவருக்கு முதலில் பூஜை செய்துவிட்டு, இங்கு வருவார்களாம். அவரே இவர்களுக்கு காவல் தெய்வமாம். இந்தக் கொடிமரத்துக்கும் அந்தக் கருப்பண்ணசாமிக்கும் தொடர்பு உண்டாம்!


கோயில் சந்நிதிகள்

கொடிமரத்துக்குப் பின், கருடாழ்வார் சந்நிதி. எதிரே, ஸ்ரீதேவிபூதேவி உடன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள். முன்மண்டபத்தின் வெளிப்புறம்அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சந்நிதி. அழகான ஊஞ்சல் மண்டபம்உற்ஸவ மண்டபம்! பிராகாரத்தில் அண்மையில் புதிதாக சக்கரத்தாழ்வாருக்கு சந்நிதி அமைத்திருக்கின்றனர். திருத்தமான விக்கிரகம்சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் அருள்புரிகின்றனர். பிராகாரம் சுற்றி வரும்போது, வாகன மண்டபத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு சமூகத்தவரும் ஒவ்வொரு வாகன உற்ஸவத்தை நிகழ்த்துகிறார்கள்.


உற்ஸவங்கள்

இந்தக் கோயிலில், வைகாசி பிரம்மோற்ஸவம், ஆடிப் பெருந்திருவிழா, ஆவணி மாத கிருஷ்ணன் பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, தைமாதப் பிறப்பு (பொங்கல் சிறப்பு விழா) ஆகியவை முக்கியமான உற்ஸவங்கள்.


வைணவக் கோயிலான இங்கே மகிஷாசுரவதம் நிகழ்ச்சி, வித்தியாசமானது. இங்கே நடைபெறும் கோமாதா சிறப்பு வழிபாடு, கிராமத்துடன் இயைந்த வாழ்க்கையைக் காட்டுகிறது.


சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில். பன்னிரண்டு பட்டி நாயக்கர்களும் வழிபட்டு, நிர்வாகம் செய்துள்ளனர். இந்தக் கோயில் தற்போது, தமிழக அரசின் அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ளது. அரசு நியமனம் செய்த அறங்காவலர் குழு கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.


திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரியத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருமாளும் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், இந்தத் தலம் தென்திருப்பதி என்றே போற்றப்படுகிறது.

இந்தக் கோயிலை, வானமாமலை ஜீயர் போற்றி, வணங்கி அபிமானித்துள்ளார்.

பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இங்கே அங்கப்பிரதட்சிணம் செய்து, தங்கள் பாவங்கள் நீங்க பிரார்த்திக்கிறார்கள் பக்தர்கள்.

கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு உண்டாகும்; தடைபெற்ற திருமணம் நடந்தேறும்; தொலைந்துபோன பொருள்கள் உடனே கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

கோமாதா வழிபாடு செய்து வழக்கில் வெற்றி, சந்தான பாக்கியம் ஆகியவற்றைப் பெறுகிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பம்சம்புதுமணத் தம்பதியர், அந்த வருடத்தில் வரும் விஜயதசமித் திருநாளில் இங்கே வந்து, நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து, பெருமாள், தாயார் அருள்பெற்றுச் செல்வதுதான்! இதை மகர்நோன்பு என்கிறார்கள். இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.



தொடர்புக்கு:ராமானுஜம் (அர்ச்சகர்) 97918 35580 

பின்குறிப்பு: மீண்டும் கடந்த 2010-மார்ச்-29ம் தேதி சிந்துப்பட்டி கோயிலுக்குச் சென்றேன். அங்கே வைகாசி பிரம்மோற்ஸவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிறதாம். ஊரில் ஒற்றுமையுடன் நடந்து வந்த திருவிழாவுக்கு யார் கண் பட்டதோ..?  பிரிவினைகளால் பிரம்மோற்ஸவம் நடக்காமல் உள்ளதாம். நாயக்கர் சமுதாயம் மனது வைத்து ஒன்று சேர்ந்தால், மீண்டும் இந்த பிரம்மோற்ஸவம் நடக்க வாய்ப்பு உண்டு. கடவுளுக்கு உற்ஸவம் நடத்த மனிதன்தான் மனது வைக்க வேண்டும்



கட்டுரை மற்றும் படங்கள்: செங்கோட்டை ஸ்ரீராம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version