- Ads -
Home அரசியல் ஸ்டெர்லைட் தொடர்பாக விழிப்பு உணர்வு இயக்கம்: அர்ஜுன் சம்பத்

ஸ்டெர்லைட் தொடர்பாக விழிப்பு உணர்வு இயக்கம்: அர்ஜுன் சம்பத்

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரை தடை செய்திட வேண்டும்.

arjun sampath

தூத்துக்குடி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரை தடை செய்திட வேண்டும். இதுதொடர்பாக விரைவில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி மாநகரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரமாக ஸ்டெர்லைட் ஆலை இருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், ஆன்மீகம், உள்ளிட்ட பல சமூக நலப் பணிகள் நடைபெற்று வந்தது.

கொரான பேராபத்து காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் உயிர் காக்கும் வகையில் இலவசமாக ஆக்சிஜனை உற்பத்தி செய்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழங்கியது.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா, வேண்டாமா என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அமையப்போகிறது.

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு ஸ்டெர்லைட் ஆலை செய்துவரும் சமூக நல பணிகளை தடை செய்வதற்கும், தொடர்ந்து மக்கள் மத்தியிலே பதட்டம் ஏற்படுத்துவதற்கு மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்கள்.

கடந்த வாரம் இனிகோ நகர் மற்றும் பாத்திமா நகர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் இலவச அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டது. சாதி மத பேதமின்றி கட்சி பேதமின்றி ஸ்டெர்லைட் ஆலையின் இந்த சமுதாய நலப் பணிகளை அப்பகுதி மக்கள் வரவேற்றார்கள்.

சமீபகாலமாகவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும், தூத்துக்குடியில் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும், என்கின்ற கருத்து தூத்துக்குடி மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இதை எப்படியாவது மாற்றி அமைக்க வேண்டும் ஸ்டெர்லைட் ஆலை செய்துவரும் சமூக நலப் பணிகளை முறியடிக்க வேண்டும் என்று சொல்லி உள்நோக்கத்தோடு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர் பாத்திமா நகர் பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் அனைவரும் மத்திய மாநில அரசுகளுக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு பல மாதங்களுக்கு பிறகும் தூத்துக்குடி மாநகரத்தில் மாசு அளவு கணக்கிடப்படுகிறது ஸ்டெர்லைட் ஆலையினால் எந்த பாதிப்பும் இல்லை என்கின்ற உண்மை வெளியே வரத் துவங்கி இருக்கிறது.

அதே போல தாமிர உற்பத்தியில் சாதனை படைத்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. எனவே தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை விரும்புகின்ற அனைவருமே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

துபாய் வரை பயணம் செய்த தமிழக முதலமைச்சர் 6000 கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வந்திருப்பதாக சொல்லுகின்றார். ஒரு 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லுகிறார். ஆனால் 35,000 கோடி ரூபாய் முதலீட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி வைத்துக் கொண்டு சுமார் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து தூத்துக்குடியின் வாழ்வாதாரமாக திகழ்ந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் கருத்தை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் தமிழகத்திலே எப்படி தொழில் வளரும். தென்மாவட்டங்கள் எப்படி வளர்ச்சி பாதையில் நடைபோடும்

தற்போது ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள் ஆனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 93 பேருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வேண்டுமென்றே திட்டமிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது களங்கம் சுமத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு ஸ்டெர்லைட் போராட்ட குழு முடிவு செய்து செயல்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழக அரசாங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் மீது பொய் புகார் கொடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி நடக்கிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டும்.

வெகுவிரைவில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் தூத்துக்குடியில் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்கிற தலைப்பில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version