- Ads -
Home அடடே... அப்படியா? இந்திய நாட்டு சேவைக்கு 3 மகன்களையும் அனுப்பிய தாய்! வீரத்தாய் விருது!

இந்திய நாட்டு சேவைக்கு 3 மகன்களையும் அனுப்பிய தாய்! வீரத்தாய் விருது!

subhulaksmi

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர், ராமகிருஷ்ணன். தமிழ்நாடு சர்வோதயா சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அவரின் மனைவி சுப்புலட்சுமி. இந்தத் தம்பதிக்கு மூன்று மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இவர்களின் மகன்களான அரிராம், ரத்தினப்பா, சண்முகவேலாயுதம் ஆகிய மூவரும் ராணுவத்தில் சேவை செய்தவர்கள்.

அரிராம் ராணுவத்தில் சென்னை ரெஜிமெண்டில் 20 வருடங்கள் பணிபுரிந்து ஹவில்தாராக ஓய்வு பெற்றுவிட்டார். ரத்தினப்பா போபாலிலும், சண்முக வேலாயுதம் தில்லியிலும் மருத்துவப் பிரிவில் ஃபார்மசிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ராணுவ சேவைக்கு தன் மூன்று மகன்களையும் அனுப்பி வைத்த சுப்புலட்சுமியைப் பாராட்டி இந்திய ராணுவத்தின் சார்பாக சுப்புலட்சுமிக்கு `வீரத்தாய்’ விருதும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் சார்பாக நெல்லை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக இணை இயக்குநர் முருகன், விருது மற்றும் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது சுப்புலட்சுமியின் மூத்த மகன் அரிராம், நெல்லை மாவட்ட பா.ஜ.க தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். `வீரத்தாய்’ விருது பெற்ற சுப்புலட்சுமி மிகவும் நெகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து சுப்புலட்சுமி கூறியது‌.. மறைந்த என் கணவருக்கு நாட்டுப்பற்று அதிகம். அதிலும் சர்வோதய சங்கத்தில் இருந்ததால், தேசத்துக்கு நம்மால் முடிந்த வரையில் தொண்டு செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். அதனால் மூன்று மகன்களையும் ராணுவத்தில் சேர்த்துவிட்டார்.

வீரத்தாய் சுப்புலட்சுமி
என் மகன்கள் நாட்டுக்குச் சேவையாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

இந்த விருது பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு தாயும் தங்களின் குடும்பத்தில் இருந்து ஒருவரையாவது தேசப் பணிக்கு அனுப்ப வேண்டும். எனக்குக் கிடைத்த இந்த வீரத்தாய் விருது மற்ற தாய்மார்களுக்கும் அதற்கான உந்துதலைக் கொடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version