- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ருஷி வாக்கியம் (97) – நரகத்தின் நுழைவாயில் எது?

ருஷி வாக்கியம் (97) – நரகத்தின் நுழைவாயில் எது?

rv1 21
வேதங்களும் வேதாந்தங்களும் கூறியுள்ள ஆன்மீக சாதனை மார்க்கங்களை சின்னச் சின்ன கேள்வி பதில்களாக ஆதிசங்கரர் அருளியுள்ள நூல் “ப்ரச்னோத்தர மணிரத்ன மாலை”. இதில் முதலாவதாக சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டுமானால் இறைவனின் பாத பத்மங்களே கப்பல்போல் கரை சேர்க்கும் என்று பதிலளித்துள்ளார்.

பின்னர் வரும் சுலோகங்களில் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் இரண்டு அல்லது மூன்று சிலவற்றில் நான்கு கேள்விகள் கூட உள்ளன. அவற்றுக்கு நேரடியாகவும் எளிமையாகவும் சின்னச் சின்ன சொற்களால் மிக உயர்ந்த விஞ்ஞானத்தை பதிலாக அளித்துள்ளார். அடுத்து வரும் கேள்விகளின் தொடரில்…

“பத்தோஹி கோயா விஷயானுராகி
காவா விமுக்தி: விஷயே விரக்தி:
கோவாஸ்தி கோரோ நரக: ஸ்வதேஹ:
த்ருஷ்ணா க்ஷய: சுவர்க பதம் கிமஸ்தி:”

இந்த ஸ்லோகத்தில் உள்ள முதல் கேள்வி “பத்தோஹி கோயா விஷயானுராகி” – அதாவது கட்டுண்டவன் யார்?. இந்த கேள்விக்கு “விஷயங்களின் மேல் ஆசையை வளர்த்துக் கொண்டவன்” என்று பதிலளிக்கிறார். விஷயங்கள் என்றால் புலன்கள் அனுபவிக்கும் உலகியல் சுகங்கள். அவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் அதுவே பந்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் எந்த அளவுக்கு விஷயங்களின் மேல் நமக்கு பாசம் இருக்குமோ அது வரையில் நாம் கட்டுண்டவர்களே!

பின், விமுக்தி யாருக்குக் கிடைக்கும்? என்றால் “காவா விமுக்தி: விஷயே விரக்தி:”
என்கிறார். இங்கு பந்தம், விமுக்தி என்று இரண்டு சொற்கள் வருகின்றன. பந்தம் என்றால் கட்டப்பட்டிருப்பது. விமுக்தி என்றால் விடுதலை என்று பொருள். பந்தம் என்றால் உலகியல் விஷயங்களில் மேல் ஆசை கொண்டிருப்பது. உலகியல் விஷயங்களில் விரக்தி வைராக்கியம் கொண்டிருப்பது மோக்ஷம். அதனால் மோட்சம் பெறுவதற்கு இன்றியமையாத தகுதி வைராக்கியம் கொண்டிருப்பது. வைராக்கியம் கைவராதவரை மோட்சம் என்பது கனவாகவே இருக்கும். அதனால் வைராக்கியம் வேண்டும். விஷயங்களோடு கொண்டுள்ள பிடிப்பும் ஆர்வமும் தாற்காலிகமாக சுகமாகத் தோன்றினாலும் அது பந்தத்தை மீத்து வைக்கும். பந்தம் துக்கத்தை மீதம் வைக்கும். அதனால் நிரந்தர ஆனந்தம் வேண்டுமென்றால் அது மோட்சத்தின் வழியாக அதாவது முக்தி வழியாகத்தான் கிடைக்கும். முக்தி என்பது வைராக்கியத்தால்தான் கிடைக்கும்.

“அசம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாசேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே !’
என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

வைராக்கியம் என்பது மோட்சத்திற்கு முக்கியமான அருகதை. அது இல்லாமல் வெறும் வெற்றுப்பேச்சு பேசி வருவதால் மோட்சம் கிடைக்கப் பெறாது. அதனால்தான் இங்கு வைராக்கியமே விமுக்திக்கு காரணம் என்கிறார்.

“விமுக்தி: விஷயே விரக்தி: – விஷயங்களிடம் விரக்தி ஏற்படுவதே முக்தி. விஷயங்களிடம் விருப்பம் ஏற்படுவதே பந்தம் என்று தெளிவாக உண்மையைக் கூறி உள்ளார்.

“கோவாஸ்தி கோரோ நரக: ஸ்வதேஹ:” – கோரமான நரகம் எது? என்றால் ‘தேகம்’ என்கிறார். இதை நாமும் சிந்தித்துப் பார்த்தால் அங்கீகரிப்போம். நம் உடலை மிஞ்சிய நரகம் வேறொன்று இல்லை. நரகம் என்றால், “அழ விடுவது” என்று பொருள்.

“நரான் க்ரந்தயதேதி நரக:” – அதாவது மானுடர்களை அழவிடுவதால் அதற்கு நரகம் என்று பெயர். நம்மை அழவிடுவது நம் உடலே! நாம் சுகமாக வாழ்கிறோம் என்று நினைக்கிறோமே தவிர எப்போதும் ஏதோ ஒரு உடல்நிலைக் கோளாறு வந்து கொண்டே இருக்கிறது. கால் நகம் முதற்கொண்டு உச்சந்தலை வரை எங்கு எந்த ஒரு கோளாறு நேர்ந்தாலும் அழுகைதான்! எனவே நிரந்தரம் ஏதோ ஒரு நோயோடு கவலைப்படுவது என்பது உடலுக்குள்ள இயல்பு! நாம் நினைப்போம் உடல் ஒரு போக ஆலயம் என்று. ஆனால் சரீரம் ஒரு ரோக ஆலயம். அநேக ரோகங்களுக்கு இருப்பிடம் இந்த மனித உடல்! ஏதோ ஒரு விதத்தில் வருத்தம் அளித்துக்கொண்டே இருக்கும். அதனால் அனைத்து நரகங்களும் இந்த உடலிலேயே நமக்கு தென்பட்டு கொண்டிருக்கின்றன. அதனால் மீண்டும் உடலெடுத்துப் பிறக்காமல்… தேக பந்தமில்லாமல் முக்தி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தேகம் உள்ள போதே நாம் சிந்திக்க வேண்டும்.

வெளிச்சம் உள்ள போதே வீட்டை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும் என்ற பழமொழிக்கேற்ப உடல் இருக்கும்போதே மோட்சத்திற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறின்றி இந்த உடலே நான் என்றெண்ணி உடலை சுகப்படுத்த வேண்டும் என்று முயற்சித்து வந்தால் நரகத்தை போஷித்து வளர்ப்பதற்குச் சமம்.

அதனால் கோரமான நரகம் எது என்ற கேள்விக்கு “ஸ்வதேஹம்” என்றார். ஏனென்றால் நரகத்தில் சில இடங்களில் கொதிக்க வைப்பது, வேகவைப்பது, பொறிப்பது, எரிப்பது, கூர்மையானவற்றால் குத்துவது போன்றவை நிகழும் என்று புராணங்களில் வர்ணித்துள்ளார்கள். நாமும் கேட்டிருக்கிறோம். ஆனால் குத்துவது எரிப்பது கொதிப்பது போன்றவை அனைத்தும் நம் உடலிலேயே நிகழ்வதைக் காண்கிறோம். அதனால் உடலை நரகத்தோடு ஒப்பிடுவது சிறந்த கருத்து.

சிலர் கூறுவார்கள்… “நரகம் சுவர்க்கம் பாவம் புண்ணியம் இவையெல்லாம் உள்ளதா? நான் நம்ப மாட்டேன்” என்பார்கள். அவற்றை நம்பினாலும் நம்பாவிட்டாலும் உடல் இருக்கிறது என்று ஒவ்வொருவரும் உணர்வார் அல்லவா? அதனால் தேகமே நரகம் என்கிறார்.

பின், சொர்க்கம் எது? அதைக்கூட மிக அற்புதமாக கூறுகிறார் ஆதிசங்கரர். “த்ருஷ்ணா க்ஷய: சுவர்க பதம் கிமஸ்தி: !” – “ஆசை என்பது இல்லாவிட்டால் அதுவே சொர்க்கம்” என்கிறார். எத்தனை இருந்தாலும் ஆசை இருந்துவிட்டால் எதுவும் இல்லாததை போலத்தான். அது தரித்திரத்திற்குச் சமமே!

த்ருஷ்ணா என்றால் அளவுக்கதிகமான ஆசை. அதனை மனிதன் குறைத்துக் கொண்டால் அவன் சொர்க்கத்தில் இருப்பதுபோல் மகிழ முடியும். சுவர்க்கம் என்றால் ‘ஆனந்த சொரூபம்’ என்று பொருள். அவன் ஆனந்தத்தில் இருப்பான்.

“சம்சார ஹ்ருத்க: ஸ்ருதி ஜாத்ம போத:
கோ மோக்ஷ ஹேது: சததம் சயேவ !”

சம்சாரத்தை விலக்குவது எது? என்று கேட்டால் “ஸ்ருதி ஜாத்ம போத:” என்கிறார். வேதத்திலிருந்து பெறக்கூடிய ஆத்மஞானம். ஆத்ம ஞானம் என்பதை வேத சாஸ்திரம்தான் நமக்கு தெரிவிக்கிறது. ஜீவன் என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? முதலானவற்றை வேதம் தெளிவாக போதிக்கிறது. எனவே “நான் யார்?” என்பதை தெரிந்து கொள்வதற்கான ஞானம், வேதத்தின் மூலம் கிடைக்கிறது. அது ஒன்றுதான் சம்சார சாகரத்தை தாண்டுவிக்கக் கூடியது.

சம்சாரம் என்றால் “ஜனன மரண ரூப பிரவாகம்” என்று பொருள். “சம்யக் சரதி இதி சம்சார:”. அப்படிப்பட்ட சம்சாரத்தை போக்கடிப்பது எது என்றால் ஆத்ம ஞானம் என்கிறார்.

அடுத்து, “மோட்சத்திற்கு ஹேது எது?” என்ற கேள்விக்கு ஆத்ம ஞானமே என்கிறார். அதாவது இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் இங்கு காணப்படுகிறது. சம்சாரத்தை போக்கடிப்பதும், மோட்சத்திற்குக் காரணமானதும் வேதத்திலிருந்து பிறந்த ஆத்மஞானம்.

இந்த ஞானம் அவ்வப்போது நான் நாம் நினைவுபடுத்திக் கொள்ளும் போதோ அல்லது யாராவது ஞாபகப்படுத்தும் போதோ ஏற்படுவது அல்ல! அது எப்போதுமே இருக்க வேண்டும். அதனால் தான் “சததன் சயேவா” என்றார். “எப்போதும்” என்ற சொல்லை சிறப்பாகக் கூறியுள்ளார்.

இது அன்றி வேறு ஏதாவது உபாயம் உள்ளதா? என்று கேட்டால் இதனைத் தவிர வேறு உபாயம் இல்லை என்கிறார். “நான்ய பந்தா வித்யதே அயனாய !” ஆத்ம ஞானத்தைத் தவிர முக்திக்குப் பிற உபாயம் எதுவும் இல்லை. முக்திக்கு ஞானமே ஹேது!

“த்வாரம் கிமேகம் நரகச்ய நாரி
கா ஸ்வர்கதா ப்ராண ப்ருதாம் அஹிம்ச: !”

நரகத்திற்கு துவாரம் எது? என்ற கேள்விக்கு ‘நாரி’ என்று பதிலளிக்கிறார் ஆதிசங்கரர். ஸ்திரீயே நரகத்தின் நுழைவாயில்! இதனைக் கொண்டு பெண்ணினத்தை நிந்தை செய்கிறார் என்று பொருளல்ல. இங்கு புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பெண்ணைத் தாயாக கௌரவிக்கும் போது ஜகன்மாதாவாக நம்மை அருள் செய்கிறாள்! பெண்ணை காமக் கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது என்பதே இங்கு கூறப்படும் கருத்து!

“நரகத்திற்கு துவாரம் நாரி!” என்று கூறுவதன் உத்தேசம் என்னவென்றால் நரகத்திற்கு நுழைவாயில் காமம் என்பதே! காமத்தால் மனிதன் நரகத்தில் விழுகிறான். ஏனென்றால் மனிதனுக்கு காமம் ஏற்பட்டு விட்டால் அதனை தீர்த்துக் கொள்வதற்காக தேவையானால் தர்மத்தைக் கூட பின்தள்ளிவிட்டு அதர்மத்தை துணை சேர்த்துக் கொள்வான். அதனால் நரகத்தில் சென்று சேர்வான். அதனால் காமம்தான் பயங்கரமான நரகத்துவாரம்.

கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் கூறுகிறார்,

“த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:
காம க்ரோதஸ்ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் !”

நரகத்திற்கு மூன்று வாயில்கள். காமம் குரோதம் லோபம் இம்மூன்றும் என்கிறார். இங்கு ஆதிசங்கரர் ஒரே ஒரு வாயில் பற்றிக் கூறுகிறார். அவ்வாறு கூறுவதன் பொருள் என்னவென்றால் காமம் என்னும் ஒரு தீய குணம் இருந்தால் போதும். அதிலிருந்து குரோதம் லோபம் எல்லாம் பின்தொடரும். அதனால் முக்கியமான கெட்ட இயல்பு காம குணம். அது நரகத்திற்கு நுழைவாயில்.

பின் சுவர்க்கத்திற்கு வாயில் எது? என்று கேட்டால் “கா ஸ்வர்கதா ப்ராண ப்ருதாம் அஹிம்ச: !” என்கிறார். அஹிம்சையே சுவர்க்கத்திற்கு நுழைவாயில். மிகச்சிறந்த வாக்கியம் இது. ஹிம்சை இல்லாமல் இருப்பது. இதனை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அகிம்சை இயல்பு மூலம் நாம் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். சுவர்க்கம் என்றால் “துயரத்தின் நிழல் துளிக் கூட இல்லாத ஆனந்தம்” என்று பொருள். ஆனந்தத்திற்குக் காரணம் அகிம்சையே!

இதனைக் கொண்டு காமத்தைத் துறக்க வேண்டும். அகிம்சையை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் தெய்வீகமான ஆனந்தத்தைப் பெற முடியும் என்பதை அறியலாம்.

ஒரு சிறிய கேள்வி பதில் வடிவில் வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான அறிவுரையை கூறியருளிய ஜகத்குரு ஆதிசங்கரருக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version