- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ருஷி வாக்கியம் (99) – பூமியே தாய்! இறைவனே தந்தை!

ருஷி வாக்கியம் (99) – பூமியே தாய்! இறைவனே தந்தை!

rv1 23

ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகள், உபநிஷத் வாக்கியங்களிலுள்ள அழகான கருத்துகளை அகில உலகிற்கும் அருளியுள்ளார்.

பிரபஞ்சத்தில் எந்த ஒரு மனிதனுக்கும், நாகரிகம் கொண்ட எந்த ஒரு நாட்டிற்கும் அவசியமான செய்தியை அளிக்க கூடிய சக்தி வேதங்களில் உள்ளது. வெறும் நம்பிக்கையையும் சிலச்சில சம்பிரதாயங்களையும் சொல்வதல்ல சனாதன தர்மம். மனித இனம் முழுமைக்கும் தேவையான விழுமியங்களை அளித்த சிறப்பு ஹிந்து மதத்திற்கு உண்டு! அதிலும் வேதங்களும் உபநிஷத்துகளும் சகல ஜீவர்களுக்கும் பயன்படக்கூடியதும் பிரக்ருதிக்கு நலன் விளையக் கூடியதுமான வசனங்களை அளித்துள்ளன. அப்படிப்பட்ட உபநிஷத் வாக்கியங்களை ஒன்று திரட்டி மந்திரத்திற்குச் சமமாக அளித்த கீதமே மஹாஸ்வாமிகளின் திருவாயிலிருந்து வெளிவந்த ‘மைத்ரீம் பஜத’ என்ற கீர்த்தனை.

பல்லவியில் கூறும் கருத்துக்களையே சரணங்களில் விரிவாக எழுதவேண்டும் என்பது ஒரு நியமம். “மைத்ரீம் பஜத” என்ற பல்லவி நட்புணர்வைப் பற்றி பேசுகிறது. மைத்ரீ என்றால் என்ன என்பதை சரணங்களில் தெளிவாக்குகிறார். இங்கு உலகளாவிய நட்பு பற்றி கூறுகிறார். ‘உலகளாவிய சகோதரத்துவம்’ என்ற வார்த்தையைக் கேட்டுள்ளோம். ஆனால் சகோதரத்துவத்தை விட ஆத்ம தத்துவம் இன்னும் உயர்ந்தது.

ஆத்ம தத்துவம் பற்றி எடுத்துக் கூறிய பின், அடுத்து வரும் சரணத்தில் இந்த பிரபஞ்சம் முழுவதையும் ஒன்றாக எவ்வாறு காண்பது என்பதைத் தெளிவாக விளக்குகிறார். இப்போது நாம் குளோபலைசேஷன், குளோபல் வில்லேஜ்… என்றெல்லாம் பேசி வருகிறோம். பூமி முழுவதையும் ஒன்றாகப் பார்ப்பது என்பதை யுகங்களுக்கு முன்பே பாரதீய வேதக் கலாச்சாரம் கூறியுள்ளது. அந்த பாவனையை இங்கு எடுத்துக் காட்டுகிறார் மகாஸ்வாமி.

பூமி மேல் உள்ள நம் அனைவருக்கும் பூமியே தாய்! இதனை ஒப்புக் கொள்ள வேண்டும். எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் அனைவரும் வசிப்பது பூமி மீதுதானே! அதனால் பூமியை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருடையதும். எனவே மொத்தம் பூமியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கடமை மனித இனத்துக்கு உள்ளது. அனைத்து மனிதர்களுக்கும் பூமியே தாய் என்னும் ஒரு அற்புதமான விஷயத்தை எடுத்தியம்புகிறார்.

“ஜனனீ ப்ருத்வி காமதுஹாஸ்தே !” இது மிக உயர்ந்த வாக்கியம். இந்தக் கூற்றும் வேதங்களில் ருஷிகள் கூறியுள்ளவையே! ஏனென்றால் வேத விஞ்ஞானத்தின் மனித வடிவமே காஞ்சி மஹாஸ்வாமிகள்! அதனால் வேதத்தில் கூறியுள்ளவற்றையே இதில் கூறுகிறார்.

“அஹம் புத்ர: ப்ருதிவ்யாம் !” என்ற மந்திரம் வேதத்தில் காணப்படுகிறது. “பூமியின் மைந்தன் நான்” என்ற கருத்து இதில் உள்ளது. அதுவே இங்கு “ஜனனீ ப்ருத்வி காமதுஹாஸ்தே !” என்று அருளப்பட்டுள்ளது. அதாவது பூமாதேவிக்கு உள்ள இயல்பு என்னவென்றால், “காமதுஹாஸ்தே” – அதாவது விரும்பியவற்றை அளிக்கக்கூடிய காமதேனு இந்த பூமாதா என்று பொருள்.

யாருக்கு என்ன தேவையென்றாலும் இந்த பூமியிலிருந்துதான் கிடைக்கிறது. செல்வம், உணவுப் பயிர்கள், வாகனங்களை நடத்த தேவையான எரிபொருள், ரத்தினங்கள், உலோகங்கள், ஔஷதிகள், தாதுக்கள், இன்னும் ஜலம் முதலான சம்பத்துகள்….. அனைத்தையும் அளிப்பது இந்த பூமியே! அதனால், “ஜனனீ ப்ருத்வி காமதுஹாஸ்தே !” – பூமி தாயாக இருக்கிறாள்.

“ஜனகோ தேவ: சகல தயாளு:” – இதுவும் விஸ்வம் அனைத்துக்கும் ஏற்புடைய வாக்கியம்! என் தெய்வமா? உன் தெய்வமா? என்று போட்டி தேவையல்ல. இருப்பது ஒரே கடவுள்! அந்த உண்மையை வேதமாதா கூறுகிறாள்.

“ஜனகோ தேவ: சகல தயாளு:” – பூமி தாயாக நம்மைக் காப்பாற்றுகிறாள். பிரகிருதி வடிவில் சகல சக்திகளையும் நமக்கு அருளுகின்ற தந்தையாகிய பகவான் தயாளு! பூமி காமதேனு! பகவான் தயை வடிவானவன்! இவ்விரண்டு குணங்களையும் அறிய வேண்டும். யார் மீது கருணை கொண்டவன்? ஏதோ சிலர் மேல் மட்டுமல்ல. அனைவர் மீதும். “சகல தயாளு:” என்ற வார்த்தையைக் கூறுகிறார்.

ஒரு தாய் தன் பிள்ளைகள் அனைவரிடமும் ஒரே விதமான அன்பு கொண்டிருப்பாள். அவர்களில் சிலருக்குத் தம் பெற்றோர் மீது அன்பு இல்லாமல் போகலாம். சிலருக்கு அன்பு இருக்கும். ஆனால் பெற்றோருக்கு மட்டும் அனைவர் மீதும் சமமாக அன்பு இருக்கும். அதனால்தான் பகவான் தந்தையைப் போல “சகல தயாளு:”

ஆயின் இந்த பூமியின் மீது அப்படிப்பட்ட இறைவனைப் பெற்றுள்ள நாம் எவ்வாறு வாழவேண்டும்? தாய் போன்ற பூமி உள்ளது. தந்தை போன்ற இறைவன் உள்ளான். வேறு என்ன வேண்டும்? மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மனித உறவுகள் எப்படி இருக்க வேண்டும்?

அதனை மூன்று சொற்களில் கூறுகிறார். “தாம்யத தத்த தயத்வம் ஜனதா: !” – இந்த கருத்தும் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் காணப்படுகின்றன. ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் மனிதர்களும் பிரம்மதேவரிடம் சென்று அறிவுரை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அந்த நேரத்தில் ஒரு மேகம் தா தா தா என்று மூன்று முறை ஒலித்ததாம். அந்த “தகார த்ரயம்” வெளிப்படுத்திய செய்தியை பிரம்மதேவர் விளக்கினார்.

அந்த உபநிஷத் வரலாற்றை இந்த வாக்கியத்தில் வெளிப்படுத்துகிறார் மகா சுவாமிகள். “தாம்யத தத்த தயத்வம் ஜனதா:” – இந்த மூன்றையும் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களிடம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறி அதன் முறைமையைக் காட்டியுள்ளார்.

தாம்யத – என்றால் தன்னடக்கம். சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதாவது க்ஷமா – பொறுமை. இதன் மூலம்தான் அடுத்தவரோடு கொள்ளும் நட்பும் உறவும் நன்றாக இருக்கும்.

இரண்டாவது “தத்த” – தான குணம். ஒருவரிடம் இருப்பது அடுத்தவரிடம் இல்லாமல் போகலாம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுப்பது என்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் சமுதாயத்தில் சமத்துவம் இயல்பாகவே சாத்தியப்படும்.

அடுத்த பார்க்க வேண்டியது தயத்வம் – தயை குணம். தீனர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். பூமியின்மேல் தேவையானவர்களுக்கு உதவி செய்யும் குணம் அனைத்து நாட்டவருக்கும் இருக்க வேண்டும்.

“தாம்யத தத்த தயத்வம் ஜனதா:” என்று மனித இனத்திற்கு அறிவுறுத்தி, இறுதியில் ஒரு ஆசையை வெளிப்படுத்துகிறார் மகாசுவாமிகள்.

“ஸ்ரேயோ பூயாத் சகல ஜனானாம் !” – “சகல ஜனங்களுக்கும் சிரேயஸ் கிடைக்கட்டும்!” என்கிறார். ஸ்ரேயஸ் என்றால் சாஸ்வதமான க்ஷேமம். நிரந்தரமான நலன் என்று பொருள். இங்கு ஸ்ரேயஸ் என்ற சொல்லுக்கு மோட்சம் போன்ற அர்த்தங்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இது அகில உலக மானுட இனத்திற்கு அளிக்கும் செய்தி. ஆதலால் “ஸ்ரேயோ பூயாத் சகல ஜனானாம்” என்றால் சாசுவதமான நலன் உலகிலுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பொருள்!

அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்று விரும்பும் தர்மமே ஹிந்து தர்மம். அதனால்தான், “லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து!” என்ற வாக்கியங்கள் சனாதன தர்மத்தில் உள்ளன.

சகல ஜனங்களுக்கும் சிரேயஸ் கிடைக்க வேண்டும் என்று மஹாஸ்வாமிகள் விரும்பி அளித்துள்ள செய்தியை விஸ்வம் முழுமைக்கும் ஜகத்குரு அளித்த ஆசிகளாக ஏற்போம்.

அந்த ஆசிர்வசனம் பலனளித்து பாரத தேசம் சம்பூர்ணமாக சனாதன தர்மத்தோடு வாழ வேண்டுமென்று பிரார்த்திப்போம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version