- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தற்பெருமை கொள்தல் தற்கொலைக்குச் சமம் !

தற்பெருமை கொள்தல் தற்கொலைக்குச் சமம் !

sri krishna arjuna
sri krishna arjuna

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ என்பது ஆன்றோர் வாக்கு. தர்மத்தை நாம் கடைப்பிடித்துக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும் என்பது அனுபவ உண்மை. இப்படி தர்மத்தைப் போதிக்க வந்தவையே இதிகாசங்கள். இரு கண்களான அவை நமக்குக் காட்டாத தர்ம நெறியா…?

மனிதன் சுக துக்கங்களை தனக்குத் தானே தேடிக் கொள்கிறான். ஒருவரின் சொல்லும் செயலுமே அவரை சுக துக்கங்களின்பால் அமிழ்த்துகிறது என்பது அனுபவம். ஆனால் சிலர் தம் தகுதியை மீறி சுய தம்பட்டம் அடிப்பதும், தற்பெருமை பேசித் திரிவதும், சாயம் வெளுத்தால் மனதை மீறிய சுமை அழுத்தி மாய்வதும் சக மனிதர் வாழ்வில் காண்கிறோம். இந்த உண்மையை விளக்க மகாபாரதத்தில் ஒரு சூழ்நிலைக் கதையை ஆன்றோர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

குருசேக்ஷத்ரம். பிரமாண்டமான போர்க் களம் அது. நடைபெறுவதும் உலகு கண்டிராத உக்கிரமான பாரதப் போர். உரிமைப் போர்தான் என்றாலும், சகோதரர்களே தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்த போர்… ஆனாலும் சுய கெüரவம் கிளர்ந்தெழ, மதிப்புரிமையும் முன்னால் நின்றது.

அன்றைய உக்கிரப் போரின் கதாநாயகன் மாவீரன் கர்ணன். கள்ளம் அற்ற உள்ளத்தினன் கர்ணன், நண்பன் துரியோதனனிடம் கொடுத்த வாக்கினால் களம் கண்டான். பாண்டவரை வீழ்த்திக் காட்டுவேன் என்பது அவன் செய்த சங்கல்பம். அந்த எண்ணத்தால் உக்கிரப் போர் செய்தான்.

கர்ணனின் முன் முதலில் வந்தவன் தர்மபுத்திரன். பாண்டவரில் மூத்தவன். சேனையின் தலைவன் என்பதால் அவனை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான். கர்ணனின் வில்லுக்கு முன் தர்மனின் போர்த்திறம் பலம் குன்றியது. கர்ணன் அம்புமழையில் தர்மன் நினைவிழந்தான்.

பதறியது கண்ணன் உள்ளம். “பாண்டவர்கள் என் உயிர். அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்’ என்று சொல்லியிருந்தான் கண்ணன். இப்போது தர்மனின் உயிரைக் காக்க வேண்டுமே என்ன செய்வது? கர்ணனோ கண்கள் சிவக்க வெறித் தாக்குதல் தொடுக்கிறான். சிந்தித்தான் கண்ணன். கர்ணனைத் தாக்குமாறு அர்ஜுனனுக்கு ஆணையிட்டான். போர்க் களத்தில் மயங்கிச் சரிந்த தர்மனை அங்கிருந்து வெளியேற்றினான். முதலுதவிக்கு ஏற்பாடாயிற்று.

கர்ணனின் மீது அம்புமழை பொழிந்தான் என்றாலும், அண்ணன் குறித்த கவலையில் கொதித்தது அர்ஜுனன் மனம். அவனது இயல்பை அறிந்தவன் கண்ணன். ஆதலால், பீமனை கர்ணனோடு மோதவிட்டு, அர்ஜுனனை அங்கிருந்து அழைத்து வந்தான்.
பாசறையின் ஓர் ஓரம். தர்மனுக்கு சிகிச்சை நடந்தது. நினைவு மீண்டு, அங்கே பார்த்தன் அடி எடுத்து வைப்பதை ஆவலோடு பார்த்தான் தர்மன். தன்னை விலக்கிவிட்டு கர்ணனோடு போர் புரிந்தவன் என்பது வரை தருமனுக்கு நினைவு இருந்தது. எனவே, அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு இங்கே வந்திருப்பான் என்று எண்ணினான் தர்மன். அவன் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. “கர்ணனைக் கொன்று வந்த உன்னை வரவேற்கிறேன்’ என்று தர்மன் சொன்னபோது, பார்த்தனால் பதில் பேச முடியவில்லை. இடையில் புகுந்த கண்ணன், “தர்மத்தை நாடும் உன் வாக்கு ஒருபோதும் பொய்க்காது. நிச்சயம் அவன் கர்ணனை வீழ்த்தி வருவான்’ என்றவுடன், தர்மனுக்கு இருந்த மகிழ்ச்சி நொடியில் காணாமல் போனது.

தன்னுடலின் குருதிப் பெருக்கால் சோர்வு கண்டிருந்திருந்த தர்மன், துயரால் புலம்பத் தொடங்கினான். “காண்டீவி ஸவ்யஸôசி என்றெல்லாம் புகழ்கிறார்களே இந்த உலகத்தார்… எல்லாம் பொய்தானோ! உன் கையிலுள்ள காண்டீபமும் அலங்காரப் பொருளோ! கர்ணனை முடிக்காத உன் காண்டீபத்தைத் தூர எறிந்துவிடு…’ என்று இகழ்ந்தான் தர்மன்.

தந்தைக்குச் சமமானவன் அண்ணன் என்ற தர்மத்தைக் கடைப்பிடிக்கும் அர்ஜுனனுக்கு, அவன் தன்னை இகழ்ந்து பேசியதில் வருத்தம் இல்லை. ஆனால், காண்டீபத்தை இகழ்ந்ததில் அவன் கோபம் மிகக் கொண்டான். காண்டீபத்தை இகழ்பவரைக் கொல்வேன் என்பது அர்ஜுனன் செய்த சத்தியம். எனவே கோபம் தலைக்கேற, கத்தியை உருவியபடி தர்மனைக் கொல்லப் பாய்ந்தான்.

விருட்டெனப் பாய்ந்து, அவன் கத்தியைப் பிடுங்கி எறிந்தான் கண்ணன். “அர்ஜுனா, என்ன செய்யத் துணிந்தாய்? அண்ணனைக் கொல்வது அதர்மம். அதிலும் ஒரு தர்மாத்மாவாகத் திகழ்பவனைக் கொல்வது தகாது’ என்றான். அர்ஜுனனோ, தன் சபதத்தைக் கூறி, “காண்டீபத்தை இகழ்ந்த தர்மனைக் கொல்லாமல் விட்டால், எனது தர்மத்திலிருந்து மீறுவதாகுமே’ என்றான்.

தர்ம வழி நடப்பவரைத் தடுத்தல் அதர்மம் என்பதை அறிந்திருந்த கண்ணன், அர்ஜுனனுக்கு ஒரு யோசனை சொன்னான். “”அர்ஜுனா, மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும், ஒருமையில் திட்டினாலும் அவரைக் கொலை செய்வதற்குச் சமம் என்பர். அதனால் நீ உன் தமையனை திட்டித் தீர்த்து, உன் தர்மத்தைக் காத்துக் கொள்” என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், தர்மனைத் திட்டித் தீர்த்தான். “”கர்ணன் ஒருவன் அடித்த அம்புக்குத் தாங்காமல் இப்படி சுருண்டு கிடக்கிறாயே, உன்னைப் போய் போர்க்களத்தில் முன்னிறுத்தி யுத்தம் செய்கிறோமே. நீயெல்லாம் ஒரு வீரனா?” என்று இகழ்ந்தான். தர்மனுக்கு கண்களில் தாரையாக நீர் பெருக்கெடுத்தது.

அடுத்த நொடி, கீழே கிடந்த கத்தியை மீண்டும் எடுத்து, தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொள்ள முயன்றான் அர்ஜுனன். இப்போதும் கண்ணன் பாய்ந்து, கத்தியைப் பிடுங்கி தூர எறிந்தான்.

“அர்ஜுனா, என்ன செய்கிறாய் தற்கொலை செய்துகொள்வது மகாபாபம் என்பது தெரியாதா?” என்று கேட்டான் கண்ணன்.

“கண்ணா, உனக்குத் தெரியாததல்ல. என் முன்னால், என் அண்ணன் தர்மனை எவனாவது இகழ்ந்தால் அவனைக் கொல்வேன் என்று சபதம் செய்திருந்தேன். இப்போது நானே அவனை இகழ்ந்துவிட்டேன் அதனால் என்னை நானே மாய்த்துக் கொள்வதே என் தர்மத்துக்கு உகந்தது” என்றான் அர்ஜுனன்.

பாண்டவர் ஐவரையும் காப்பேன் என்று சபதம் செய்த கண்ணனுக்கு, அர்ஜுனனைத் தடுத்தாக வேண்டிய நிலை. இப்போது இன்னொரு உபாயம் சொன்னான் கண்ணன்.

“தற்கொலைக்குச் சமமான ஒரு செயலும் உண்டு. அது தற்பெருமை பேசுவது. எனவே நீ உன்னைப் பற்றியே புகழ்ந்து பேசி, உனது சபதத்தை நிறைவேற்று” என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், “காண்டவ வனத்தை தீக்கிரையாக்கி, போருக்கு வந்த தேவேந்திரனை ஒருவனாகவே எதிர்த்து வெற்றி கண்டேன். வேடன் உருவில் வந்த கயிலைநாதனை வென்றேன். இந்திரலோகம் சென்று வில்வித்தை கற்று, இந்திரனின் பகைவர்களை வென்றேன். என்னைப் போன்ற வில்லாளி உண்டோ” என்று பலவாறாக தன்னையே புகழ்ந்து பேசி, தான் தற்கொலை செய்வதற்கு ஈடான ஒன்றை நிறைவேற்றிக் கொண்டான்.


பெரியோரை இகழ்வது தகாது என்றும், தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்றும் வழி காட்டிய கண்ணன், அர்ஜுனனுக்கு மட்டுமா இந்த உபாயத்தைக் காட்டினான்..!?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version