- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

1. மாமனிதர்களில் ஒருவர்:

ஸ்ரீ ராமானுஜர்

இந்தியாவில் ஸ்ரீ ஆதிசங்கரர்,  ராமானுஜர்,  மத்வர்,  சைதன்யர்,  குருநானக்,  புத்தர்,  மகாவீரர் போன்ற மதச்சாரியர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை  ஏற்படுத்தினார்கள்.

அந்த வரிசையில் 19ம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும்  மறுமலர்ச்சியை,  மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் உலகில் 39 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். அந்த 39 ஆண்டுகளில் அவர், 1,500 ஆண்டுகளுக்கு மக்களுக்குத் தேவையான செய்தியைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

எனவே இந்த வகையில் சமீபத்தில் தோன்றிய சுவாமி விவேகானந்தர்,  பண்டைய நாளிலிருந்த ஆதிசங்கரர் போன்று ஓர் அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.

2. இப்படி ஒரு குரு,  இப்படி ஒரு சீடர்:

ஸ்ரீ ராமகிருஷ்ணரால் உருவாக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர். இது வரையில் உலக வரலாற்றில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் போன்று இப்படி ஒரு குரு,  சுவாமி விவேகானந்தர்  போன்று  இப்படி ஒரு சீடர் இருந்ததில்லை.

3. கடல் கடந்து சென்ற முதல் ஹிந்து சந்நியாசி:

முன்பு,  ‘சந்நியாசிகள் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் செல்லக் கூடாது’ என்று ஒரு கருத்து நிலவியது. இந்தியாவின் ஆன்மிகத் தூதராகக் கடல் கடந்து சென்ற முதல் ஹிந்து சந்நியாசி சுவாமி விவேகானந்தர் தான்.

தற்காலத்தில் ஹிந்து சந்நியாசிகள் பலர் மேலைநாடுகளுக்குச் சென்று இந்துமதப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இது பாராட்டுவதற்கு உரிய மிகவும் நல்ல ஒரு முயற்சியாகும்.

இவ்விதம் இந்தியாவின் ஆன்மிகச் செல்வத்தை அந்நிய நாட்டு மக்களுக்கு வழங்குவது என்பதை, பிள்ளையார் சுழி இட்டு முதன்முதலில் சுவாமி விவேகானந்தர் தான் துவக்கி வைத்தார்.

4. இந்தியாவின் விஸ்வரூபம்:

மகாபாரதப் போர் நடந்தபோது ஸ்ரீ கிருஷ்ணன், அர்ஜுனனுக்குத் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினான். அப்போது தான் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் நிஜசொரூபம் புரிந்தது.

அதுபோன்று, “இந்தியா ஆன்மிக பூமி, இந்தியா தவ பூமி, இந்தியா ஞானபூமி, இந்தியா புண்ணிய பூமி, இந்தியாவின் முதுகெலும்பு ஆன்மிகம், இந்தியாவின் உயிர்நாடி ஆன்மிகம், இந்தியாவின் அடித்தளம் ஆன்மிகம், இந்தியாவின் இதயம் ஆன்மிகம்” என்பதை இந்திய மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, இந்தியாவின் விஸ்வரூபம் , இந்துமதத்தின் நிஜசொரூபம் ஆன்மிகம் தான் என்று எடுத்துக்காட்டிய ஆன்மிக இந்து சிங்கம் சுவாமி விவேகானந்தர்.

5. இந்திய மக்களைத் தலைநிமிரச் செய்தவர்:

இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தபோது, சரிந்து கொண்டிருந்த இந்து மதத்தைத் தாங்கும் இரும்புத் தூணாக சுவாமிஜி விளங்கினார்.

இந்து மதத்தின் இறையாண்மையை உலகிற்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். இந்தியாவின் இறையாண்மையை உலகிற்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியர்கள் தங்களைப் பற்றி தாழ்வான எண்ணம் கொண்டிருந்தார்கள்; இந்து மதத்தையும் இந்தியர்கள் அப்போது இழிவாகவே கருதினார்கள். அத்தகைய ஒரு சூழ்நிலையில், இந்துக்கள், “நாங்கள் இந்துக்கள்   நாங்கள் இந்தியர்கள்” என்று தலைநிமிரச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.

தங்களை இழிவாக நினைத்து கேள்விக்குறி போன்று வளைந்திருந்த இந்திய மக்களை, தங்களின் ஆன்மிகச் சிறப்பால் ஆச்சரியக் குறி போன்று தலை நிமிரச் செய்தவர்  பெருமிதம் கொள்ளச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.

இந்தியா தான் சுவாமி விவேகானந்தரின் கோயிலாக இருந்தது. இந்திய மக்கள் தான் அவர் வணங்கிய தெய்வங்கள்.

6.  லட்சியம் இருக்க வேண்டும்:

‘லட்சியத்துடன் வாழ வேண்டும்’ என்பது எல்லோருக்கும் பொதுவானது.
தனி மனிதனுக்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஒரு நாட்டிற்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஓர் இயக்கத்திற்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஒரு சமுதாயத்திற்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும்.

லட்சியம் இல்லாத வாழ்க்கை, ‘ஏனோதானோ’ என்று இருளில் தட்டுத்தடுமாறிச் செல்லும் வாழ்க்கையாக இருக்கும். லட்சியம் இல்லாத வாழ்க்கை பயனற்றதாக இருக்கும்.
சுவாமி விவேகானந்தர் உலகிற்குப் பல அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்.   அவற்றில்,“எழுந்துகொள்ளுங்கள்! விழித்துக்கொள்ளுங்கள்! லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் செல்லுங்கள்!”  (Arise! Awake! and stop not till the goal is reached) என்ற அறிவுரையை  பொதுவாக மக்கள் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.

இந்த அறிவுரையை அவர் தமிழ்நாட்டில், கும்பகோணத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. இளைஞர்களிடம் நம்பிக்கை

“உடல் வலிமை,  மனவலிமை,  ஆன்மிக வலிமை ஆகிய ­மூன்று வகையான வலிமைகளையும் இந்திய மக்கள் பெற்றிருக்க வேண்டும்”என்று அழுத்தம்  திருத்தமாகக்  கூறியவர் சுவாமி விவேகானந்தர்.

தமிழக இளைஞர்களிடம் சுவாமி விவேகானந்தர் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்துகொள்ள வேண்டிய ஒரு தார்மீகக் கடமை, தமிழக இளைஞர்களுக்கு இருக்கிறது.

8. முழுமை பெற்ற இந்தியா:

‘புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்  இந்தியாவை மறுமலர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.  இந்தியா வல்லரசாக வேண்டும்’ என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம்.Viveka 2

ஆனால் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நீக்கிவிட்டு,  சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு,  புதிய இந்தியாவை உருவாக்குவது என்பது குறை (Incomplete) உடையதாகவே இருக்கும்;  அது  முழுமை பெற்றதாக ஒருபோதும் இருக்கவே இருக்காது  என்ற உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

.கட்டுரையாளர்: பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின் துறவி. மதுரையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின்  தலைவர்; ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version