- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் களை கட்டும் கூத்தாண்டவர் கோயில் விழா

களை கட்டும் கூத்தாண்டவர் கோயில் விழா

koothandavar5 விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் அருள்மிகு  கூத்தாண்டவர் திருக்கோயில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமியையொட்டி  சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடக்கும். இந்த திருவிழாவுக்கு ஒரு வரலாறு உண்டு. மகாபாரத போர் துவங்குவதற்கு முன்பு யுத்த தேவதையை திருப்திப்படுத்த களப்பலி  கொடுக்கப்பட வேண்டும். அதற்கு 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஒரு ஆணை பலி  கொடுக்க வேண்டும். இதற்கு பாண்டவர்கள் தரப்பில் அர்ச்சுணன், கிருஷ்ணன் ஆகியோ ரும், அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்த மகனான அரவானும் மட்டுமே  தகுதி பெற்றிருந்தனர். போருக்கு முன்பு அர்ச்சுனன், கிருஷ்ணனை இழக்க முடியாது  என்பதால் அரவாண் ஒரு நிபந்தனையுடன் களப்பலி காண சம்மதித்தார். அந்த நிபந்தனை  தான் இல்வாழ்க்கை இன்பத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்பதுதான். விடிந்தால்  மடியும் எந்த ஆணைத்தான் பெண் விரும்புவாள்? இதுதான் மகாபாரத காலத்திலும் நடந்தது. இதனால் பரமாத்மா கிருஷ்ணனே மோகினி அவதாரம் எடுத்து அரவாணை  மணமுடித்து இல்வாழ்க்கை இன்பத்தை அளித்தார். மறுநாள் அரவாண் களப்பலி கொடுக்கப்பட்டார் என்பதுதான் கூத்தாண்டவர் கோயிலின் வரலாறு. அரவாணிகள் தங்களை கிருஷ்ணனாகவும், அரவாணை தங்கள் கணவராகவும் பாவித்து வழிபாடு நடத்தி  வருகின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல விழுப்புரத்தில் அரவாணிகள் குவியத்  தொடங்கியுள்ளனர். அரவாணை வழிபட டில்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா,  பெங்களூரு உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த அரவாணிகள் வந்துள்ளனர். கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றம், சாகை  வார்த்தலுடன் தொடங்கியது. 22ம் தேதி பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி  சந்துனுசரிதம், 24ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 25ம் தேதி தர்மர் பிறப்பு, 26ம் தேதி பாஞ்சாலி பி றப்பு, 27ம் தேதி பகாசூரன் வதம், 28ம் தேதி பாஞ்சாலி திருமணம், 29ம் தேதி  கூத்தாண்டவர் பிறப்பு, 30ம் தேதி ராஜசூயயாகமும் நடந்தது. மே 1ம் தேதி வெள்ளிக்கால்  நடும் நிகழ்ச்சி, 2ம் தேதி கிருஷ்ணன் தூது நிகழ்ச்சியும் நடந்தது. இன்று 3ம் தேதி அரவாண்  பலியும், கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாயணமும், 4ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும்  நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான  5ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு  சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் கோயில் வாசலில் அரவாணிள் புதுப்பெண் போல தங்களை அலங்கரித்துக்கொண்டு பூசாரிகளால் தாலிகட்டிக் கொள்வர்.  இரவு முழுவதும் கூவாகத்தில் அவர்கள் ஆடிப்பாடி மகிழ்வர். 6ம் தேதி அதிகாலையில்  அரவாண் சிசுவும், உடலும் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படும். பின்னர் தேரோட்டம்  நடத்தப்படும். தேர் அழிகளத்தை நெருங்கும் போது அரவாணிகள் ஒப்பாரி வைத்து அழ  ஆரம்பிப்பர். அங்கு அரவான் களப்பலி கொடுக்கப்படும் நிகழ்ச்சி நடத்தப்படும். அப்போது அரவாணிகள் தங்கள் வளையல்களை உடைத்து, பூக்களை எறிந்து தாலிகளை  அறுத்தெறிவர். பின்னர் விதைக் கோலம் பூண்டு அரவாணிகள் தங்கள் சொந்த ஊருக்கு  கிளம்பிச் செல்வர். 7ம் தேதி விடையாத்தி நிகழ்ச்சியும், 8ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய த்துறை அதிகாரிகள், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version