ஆர்டலி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்: முதல்வர் உறுதி

02 June19 Pranaiyaiகேரளாவில் காவல்துறை உயரதிகாரிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆர்டலி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என முதல்வர் பினராயி கூறினார். கேரள போலீஸ் ஆயுதப்படையில் பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ் குமார். இவரது வீட்டில் காவலர் கவாஸ்கர் என்பவர் ‘ஆர்டலி’யாகவும் கார் டிரைவராகவும் பணி செய்துவந்தார். கடந்த 14-ம் தேதியன்று ஏ.டி.ஜி.பி-யின் மனைவி மற்றும் மகளை திருவனந்தபுரம் நேப்பியார் மியூசியம் வளாகத்திற்கு காரில் அழைத்துச் சென்றார். மீண்டும் அவர்களை அழைத்து செல்ல சற்று கால தாமதமானது. இதில் ஆத்திரமடைந்த கூடுதல் டி.ஜி.பி-யின் மகள் ஸ்நிக்தா கவாஸ்கரை திட்டியதுடன் செல்போனால் தாக்கினார். இதில் கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட கவாஸ்கர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் முதல்வர் பினராயி விஜயன் வரை சென்றது. கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும் ஆர்டலிகளின் பட்டியல் மற்றும் வாகனங்களின் விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கேரள சட்டசபையில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், காவல்துறையில் இனி உயரதிகாரிகளின் வீடுகளுக்கு ‘ஆர்டர்லி’ (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.