முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது-முதல்வர் பழனிசாமி.

edappadi ops stalin

முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி குறித்து விசாரித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த முதல்வர், நானும் துணை முதல்வரும் நேரடியாக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் கலைஞரை பார்த்தோம். அவர் நலமுடன் உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது மருத்துவ குழு அங்கேயே இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி குறித்து விசாரிக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். இவர்களுடன் சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளி்ட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் பழனிசாமி கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். பின்னர் காவேரி மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுத்து வந்தார். அவருக்கு மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூச்சுக் குழாய் (டிராக்கியாஸ்டமி) மாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பிய அவருக்கு கடந்த 25ம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு கருணாநிதிக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைய தொடங்கியது. சிறுநீர் பாதையில் தடை ஏற்பட்டது. இதையடுத்து நள்ளிரவு 1.25 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது.

கருணாநிதியை காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது ரத்த அழுத்தம் சீரடைந்தது. நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிறப்பான மருத்துவ சிகிச்சையால் அவரது உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிசிக்சை பிரிவில் டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனை முன்பு இரவு, பகலாக சவுந்தரராஜன், மூத்த தலைவர்கள் இல.கணேசன் எம்பி, சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்தார். தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 12.30 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வந்தனர். துணை ஜனாதிபதி திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார்.

தொடர்ந்து அவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கே சென்று கருணாநிதியை பார்த்தார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சென்று நேரில் பார்த்தார். தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் தற்போது முதல்வர் மற்றும் துணைமுதல்வர் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.